11

11

இம்ரான்கானை விடுதலை செய்தது உயர் நீதிமன்றம் !

நீதிமன்றத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ´ரேஞ்சர்ஸ்´ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை, 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ரான் கான் கைது சட்ட விரோதம், நீதிமன்றத்தில் யாரையும் கைது செய்யக்கூடாது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி அவர் மீதான வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.

 

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் !

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய அதிபர், ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிறந்த சேவையாற்றிய ஆசிரியர் விருது மற்றும் சிறந்த சேவையை ஆற்றிய சிறந்த பாடசாலை, பிராந்திய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகங்களும் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டதுடன், 129 சுற்றுச்சூழல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களும் வழங்கப்பட்டன.

14 அதிபர் சுற்றாடல் முன்னோடிப் பதக்கம் வென்ற அரலகங்வில விலயாய தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக விருது பெற்றதுடன், அதிகூடிய அதிபர் பதக்க வெற்றியாளர்களை (25) உருவாக்குவதற்கு வழிகாட்டிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மத்திய மாகாண அலுவலகம் சிறந்த அலுவலகத்திற்கான விருதை வென்றது.

வைபவத்தின் இறுதியில் அதிபர் பதக்கம் வென்றவர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இதன்போது சுற்றாடல் முன்னோடி அதிபர் பதக்கம் வென்றவர்களிடம் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான செய்தியை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

சுற்றாடல் முன்னோடியின் கடமை பெரும் தியாகம் எனவும், எதிர்கால சந்ததியினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“பிரித்தானியர் காலத்து காணிச்சட்டங்களே இலங்கையில் நடைமுறையில் உள்ளது”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும் நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு தீர்க்கமாக ஆராயப்பட்டது.

அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில் காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது !

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர் வேறு இடங்களில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தியுள்ளார் என்றும் சிறுமிகளும் அங்கும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்களா இல்லையா என மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

“நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தை நாடியமை மகிழ்ச்சியானதே. சிங்கப்பூர் நீதிமன்றம் பக்கசார்பின்றி முடிவை வழங்கும்.

ஆனால் கடந்த 14 வருடங்களாக தமிழ் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உள்ளகப்பொருமுறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவேதான் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர்.

இதனை முதலில் அரசாங்கம் தொடர்ந்தும் மறுக்கின்றது. நாங்கள் சர்வதேசம் செல்லத் தயாரில்லை எனவும், உள்நாட்டு பொறிமுறை ஊடாக தீர்வு வழங்குவதாக கூறிவருகின்றது. இதுவே இந்த அரசாங்கத்தின் உண்மையான இனவாத முகம்.” என கூறினார்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,090 கிலோ கஞ்சாவை மதுரையில் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆந்திராவில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடத்தி வரப்பட்ட 2,090 கிலோ கஞ்சாவை மதுரை நகர பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

குறித்த கஞ்சா தொகையானது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

ராஜ்குமார் மற்றும் ஜெயக்குமார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு கஞ்சா வியாபாரிகளை மதுரை நகர பொலிஸார் தேடி வந்ததாக பொலிஸ் துணை ஆணையர் (மதுரை வடக்கு) பி.கே. அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இரகசிய தகவலின் பேரில், கீரைத்துறையில் இருந்து வந்த பொலிஸார், ரிங் வீதியில் வாகனங்களை சோதனை செய்து, ஒரு காரை மறித்துள்ளனர். அந்த வாகனத்தில் 40 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்த பொலிஸார் , எல்லீஸ் நகரை சேர்ந்த பி.ராஜ்குமார் (33) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பண்ணையில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தலைமை பொலிஸ் அதிகாரி ஜி.பெத்துராஜ் தலைமையிலான பொலிஸார் , பண்ணையை சோதனையிட்டதில், பிக்-அப் வேனில் கடத்தப்பட்ட பொருட்களை கண்டுபிடித்தனர்.

மேலும், ஜீவா நகரைச் சேர்ந்த கே.சுகுமாரன் (27), தூத்துக்குடியை சேர்ந்த ஆர்.ராஜா (33), பி.சுடலைமணி (21), எம்.மகேஷ்குமார் (29), எம்.முத்துராஜ் (26) ஆகிய 5 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். .

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வரவழைக்க ஜெயக்குமார் ஏற்பாடு செய்து, அரோன் என்பவர் மூலம் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர்.

இதேவேளை ஜெயக்குமார் மற்றும் அரோனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அப்போது, ​​லொரியில் 50 கிலோ கஞ்சா வைத்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும், மூன்று வாகனங்களில் இருந்து, எட்டு மொபைல் போன்கள், வைஃபை மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்களைப் பகிர்ந்த நபர் கைது !

சமூக ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்களைப் பகிர்ந்ததற்காக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் போலியான சுயவிவரத்தைப் பயன்படுத்தி தனது செயற்பாடுகளை முன்னெடுத்த சந்தேக நபரே பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றின் ஊழியரான குறித்த சந்தேக நபர் யட்டவர வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் விடுதலை!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டு பின்பு வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

அண்மையில், வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் தகர்த்து எறியப்பட்டிருந்தன. இந்தநிலையில், பொது மக்களின் பாரிய ஆர்பாட்டங்களுக்கு பின்னர் நீதிமன்றினால் குறித்த ஆலயத்தின் விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்து வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஆலயத்தின் பூசகர் உள்ளிட்டோரால், நேற்றைய தினம் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்தப் பகுதியில் புதிய கட்டுமானங்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை தொடர்பில், ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் இன்று விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் – விசாரணைகளை ஆரம்பித்த ஐ.சி.சி !

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதா..? என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா உள்ளிட்ட இரு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் துடுப்பாட்ட சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்கள் கண்டறிவார்.

அரசியல் தலையீடுகள் குறித்து சிறிலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்திருந்தது.

இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சந்திப்பொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமொன்றை கோரினார்.

இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022ல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐசிசி உறுப்புரிமை ரத்து செய்யப்படலாம்.

ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.