13

13

யூடியூப் பார்வைகளை அதிகப்படுத்த பிரபல யூடியூபர் செய்த செயலுக்காக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை !

யூடியூப் பார்வைகளை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.   டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ‘நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்’ எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டிரெவர் ஜேக்கப் தன்பக்க விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார். வரும் வாரங்களில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று விடும். அதன்பின் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருகோணமலையில் தமிழர் பகுதியில் நடைபெறவிருந்த பௌத்த மத தலைவர்களது சடங்கு இடமாற்றம் !

திருகோணமலை மாவட்டத்தில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த தாய்லாந்து நாட்டினை சேர்ந்த பௌத்த மத தலைவர்களது சடங்கானது இடமாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை தடுக்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் இருந்து வரும் குழுவினரால் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் பிரித் நிகழ்வு ஒன்று ஏற்பாடாகி இருந்தது.

அந்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய இன நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் இரத்துச்செய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் மாவட்டத்தலைவர் குகதாசன் தெரிவித்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட செயலாளர் செல்வராசா மற்றும் பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் குறித்த இடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய பாதயாத்திரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திறன் மற்றும் தொழில் கண்காட்சியான “skills Expo 2023” நிகழ்வில் நேற்று(12) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வாழ்க்கைக்கு திறன் – திறனுக்கு தொழில்” என்ற தொனிப்பொருளின் கீழ் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் மேற்படி கண்காட்சி இம் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம்.

Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியின் ஊடாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, துறைசார் திறன் விருத்தியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வலுவானதொரு பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிட வந்தவர்களோடும் கலந்துரையாடினார்.

தொழில்நுட்ப விவசாய வேலைத்திட்டத்திற்கான இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, தொழில்நுட்ப விவசாயக் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலான் ட்ரோன் பாவனையை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பவியலாளர்கள் மூவருக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இங்கு ஏற்பாட்டு பணிகளை முன்னெடுத்த மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த வருடத்தை திரும்பி பார்க்கின்ற போது இவ்வாறானதொரு கண்காட்சியை நடத்த எம்மால் முடியுமா என்பது கேள்விக்குரியாகியிருந்தது. குழப்பகரமான சூழலில் முடங்கிக் கிடந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

நாம் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் எமது செலவுகளையும் நாம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் நமது செலவினங்கள் தொடர்பில் பார்கின்ற போது, நாம் கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்பதை கண்டுகொண்டேன்.

நாம் ஸ்ரீ லங்கன் விமான சேவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு செலவிட்ட பணத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட்டிருந்தால் தெற்காசியாவின் மிகச்சிறந்த கல்வித்துறையை கொண்ட நாடுகளுடன் போட்டியிடும் நிலையை அடைந்திருப்போம். அவை ஒன்றையும் நாம் செய்யாமையால் இன்று கடன்களை செலுத்தி முடிக்க வேண்டிய நிலை நமக்கு உருவாகியுள்ளது. அடுத்த பத்து வருடங்களில் விரைவாக கடன்களை செலுத்தி முடிக்கவே நான் முயற்சிக்கிறேன்.

நாட்டிற்கு பயனற்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் காணப்பட்டன. அவ்வாறான திட்டங்களுக்கு வழங்கிய நிதிக்கு என்ன ஆனது என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது. அவ்வாறான செலவுகளையே நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக நாம் அத்தியாவசியமற்ற சேவைகளை முதலில் கட்டுப்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதற்காக அத்தியாவசிய சேவைகளுக்கான செலவீனங்கள் மட்டுப்படுத்தப்படாது. எதிர்காலத்தில் கல்வி,சுகாதாரம்,சமூக பாதுகாப்பு, வீடமைப்பு ஆகிய விடயங்களுக்காக மாத்திரம் சலுகை வழங்கல் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று, நாட்டுக்கு நல்ல கல்வி முறையொன்று அவசியம். இந்தக் கல்வி முறையில் மிக முக்கியமான விடயம் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவை வழங்குவது. நாம் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். அனைவருக்கும் தேவையான அறிவை வழங்க முடிந்தால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

இலங்கை, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய நாடாகும். எனவே, அறிவை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பாடசாலைக் கல்வியை வழங்கிய பின், தொழில் தகைமையை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இன்று பல அமைப்புகள் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இன்றைய தேவைக்கேற்ப நமது கல்விமுறை நவீனமயப்படுத்தப்படவில்லை. அதனால் நாம் 10-15 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். நாம் இப்போது புதிதாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த அறிவை வழங்குவதற்கு தேவையான பயிற்சியை அரசாங்கத்தால் மாத்திரம் வழங்க முடியாது. அந்த பயிற்சி மற்றும் அறிவு பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு வெளியே உள்ளன. இந்த அறிவை வழங்கக் கூடிய தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தப் பணியை முறையாகச் செயல்படுத்துவதற்காக, இந்தமுறை கல்வி அமைச்சை ஒரு அமைச்சருக்கு வழங்கினோம். இந்த முழுமையான பொறிமுறையிலும் அவர் கவனம் செலுத்தி, அதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். கல்விக்காக நாம் தனி அமைச்சரவைக் குழுவை நியமித்துள்ளோம். எனவே கல்வியின் நவீனமயமாக்கலை இங்கிருந்து தொடங்குவோம். நாம் ஒரு புதிய உலகத்தை நோக்கி நகர்கிறோம்.

இன்னும் பத்து ஆண்டுகளில் நமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படும். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்திற்காக நாம் கல்வியை உருவாக்க வேண்டும். அதற்கான பலமான வேலைத்திட்டம் தேவை. இளைஞர்களுக்கு இதுபற்றி முறையாகத் தெளிவுபடுத்தி, எதிர்காலத்திற்குத் தேவையான அறிவும் திறமையும் கொண்ட ஒரு பரிபூரண சமுதாயத்தை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு ஆகும். அதற்குத் தேவையான நிதியை 2024ஆம் ஆண்டு முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

திருமணம் செய்த முன்னாள் காதலியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்த காதலன் !

வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார். திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவரை பாடசாலைக்கு அனுமதிக்க 70 ஆயிரம் ரூபாவை இலஞ்சம் – கிராம உத்தியோகத்தர் கைது !

மாணவர் ஒருவரை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக வாக்காளர் பெயர் பட்டியலில் பெயரை உள்ளீர்ப்பதற்கு 70 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற, குப்பியாவத்தை – மேற்கு கிராம உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் மற்றும் அவரின் மனைவியின் பெயரை 2023ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளீர்ப்பதற்காக தலா 10 ஆயிரம் ரூபாவை குறித்த கிராம உத்தியோகத்தர் இலஞ்சமாக பெற்றுள்ளார்.

அத்துடன், அந்தப் பெயர்களை கணினிமயப்படுத்தி அதன் உறுதிப்படுத்தலை வழங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இதற்காக குறித்த பெற்றோரிடம் இருந்து அவர் 80 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், 70 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து அருண் சித்தார்த் தலைமையில் பேரணி சென்ற மக்கள் !

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, ‘அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.

அருண் சித்தார்த் தலைமையில் தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி | தினகரன்

இதன்போது 200இற்கும் மேற்பட்ட மக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் அனைவருக்கும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு. தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும். இது பொதுமக்களின் காணிகள் அல்ல. விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி தமது குடியிருப்புகளை அமைத்துள்ளனர். ஆனாலும், அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது. பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும்.

ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி ரிக்டொக்கில் பதிவிட்ட 08 பேர் யாழ்ப்பாணத்தில் கைது !

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்டொக் செயலியில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை காவல்துறை பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை இன்று இரவு முன்னெடுத்தனர்.

நீண்ட நாள் முரண்பாடு காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பத்தலைவர் மீது கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் படுகாயடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதல் நடத்தும் காணொளி பதிவை தாக்குதல் நடத்துவர்களின் முகங்களை மறைத்து ரிக்டொக் (Tiktok) செயலியில் வெளியிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் தலைமறைவாகியிருந்தனர்.

இந்த நிலையில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினர் 8 பேரை இன்றிரவு கைது செய்தனர்.

வர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும் கூலிக்கு பணம் பெற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் எட்டுப் பேரும் நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கம்பளையில் காணாமல் போன கொலை – விசாரணையில் வெளிவந்த தகவல் !

கம்பளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி ஆறு நாட்களாக காணாமல் போயிருந்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த பொலிஸார், கெலிஓயாவில் பணிபுரியும் இடத்திற்கு பஸ்ஸில் ஏறுவதற்காக யுவதியை பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், பெண்ணை தன்னுடன் காட்டுக்குள் செல்ல வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால், அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்று உடலை புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் போது, ​​சம்பவ இடத்தில் இருந்து அவரது குடையின் பாகங்கள், அவரது ஜோடி செருப்புகள் மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிபவரும் கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் பாத்திமா மூனவுவர (வயது 22) என்ற யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார்.