14

14

கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் ஆதரவளிக்க தயார் – ஜனாதிபதி ரணில்

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிகரம் விருது வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் தனித்துவமான பணியை ஆற்றும் பழைய மாணவர்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் முதலாவது விருது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மல்வத்து தரப்பு அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க, திலக் கருணாரத்ன உள்ளிட்ட 11 பேர் இங்கு விருதுகளைப் பெற்றனர்.

முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பிலும் நவீனமயப்படுத்தலின் தேவை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய உடனடித் தீர்வகளை கண்டறியுமாறும் கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

இந்த 10 வருட கால அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் தயாரிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு பழைய மாணவர்களிடம் மேலும் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்யாவிட்டால் கொழும்பு பல்கலைக்கழகம் அந்த விசேட செயற்பாட்டிற்கு பங்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஜே.எம்.எஸ். பண்டார உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகள் பூர்த்தி – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதி அமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டங்களை நாமே தயாரித்தோம் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயற்பாடுகளை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்த நீதியமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை (13) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் அனைவரும் ஒவ்வொரு மட்டத்திலிருந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம். நாம் வகிக்கும் பதவியும், எமக்குரிய பொறுப்புக்களும் வேறுபடலாம். இருப்பினும், எம் அனைவரினதும் இலக்கு ஒன்றுதான்.

நாடு என்ற ரீதியில் நாம் அபிவிருத்தி அடைய வேண்டுமானால், முதலில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததன் விளைவாக தங்கச் சுரங்கங்களைக் கொண்ட பல ஆபிரிக்க நாடுகளால் இன்னமும் அபிவிருத்தி அடைய முடியவில்லை. தற்போது நாமும் அந்நாடுகளை ஒத்த நிலையிலேயே இருக்கின்றோம்.

எமது நாட்டில் இல்லாத வளம் என்று எதனையும் கூறமுடியாது. எம்மிடம் உள்ள வளங்கள் இந்தியாவில் கூட இல்லை. இருப்பினும், நாம் இன்னமும் உரிய இடத்தை அடையவில்லை. ஜப்பான், கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் எம்மை விடவும் பின்னடைவான நிலையிலேயே இருந்தன. அந்நாடுகளின் தலா வருமானம் எமது நாட்டை விட குறைவான மட்டத்திலேயே காணப்பட்டன.

கல்வியறிவு வீதம், சிசு மரண வீதம், கர்ப்பிணித்தாய்மாரின் மரணவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து எமது நாடு முன்னேற்றகரமான மட்டத்தில் உள்ளது.

எது எவ்வாறிருப்பினும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதென்பது ஏனைய நாடுகளுக்கு இலகுவானதொரு விடயமாக இருக்கவில்லை. இருப்பினும், இலங்கையை பொறுத்தமட்டில் நிதியமைச்சும் திறைசேறியும் மிகச் சரியாக செயற்பட்டு, இந்தக் கடனுதவிக்கான இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றன என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஆனால், இவ்விடயத்தில் நீதியமைச்சு சரியாக செயற்பட்டிருக்காவிட்டால் இந்த இணக்கப்பாட்டை எட்டுவதில் மேலும் ஒரு வருட காலதாமதம் ஏற்பட்டிருக்கும் என்ற விடயம் மக்களுக்குத் தெரியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்திசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

அதேபோன்று எமது நாடு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழந்திருந்த காலப்பகுதியில், அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நிபந்தனைகளில் நூற்றுக்கு அறுபது சதவீதமான நிபந்தனைகள் எமது அமைச்சினாலேயே நிறைவேற்றப்பட்டன.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சட்டங்கள் எமது அமைச்சினாலேயே தயாரிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டினார்.

மது போதையில் அலுவலகத்துக்குள் நுழைந்த கிராமசேவையாளர் – வவுனியாவில் சம்பவம் !

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கிராமசேவையாளர் ஒருவர் மதுபோதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் அலுவலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால் பொது மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது அந்த மண்டபத்திற்கு சென்ற குறித்த இடத்திற்கு பொறுப்பான கிராமசேவகர் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்கு இடையூறுகளை விளைவித்துடன், மதுபோதையில் வந்து, பெண்களையும் திட்டியதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, பிரதேசசெயலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலவரத்தை சுமூகமாக்கியதுடன் குறித்த கிராமசேவகரை அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தார்.

எனினும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டனர்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 8 பேர் அடையாளம் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு கொரோனா மரணங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று (சனிக்கிழமை) 08 பேர் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் 672,283 பேர் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் ஙகொரோனா அச்சுறுத்தல் தொடர்பான அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை – இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – Remove term: ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை (13) சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்றது.

ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அதன்படி, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.

அதேவேளை வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெலை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை முன்னிறுத்தி இதுவரையான காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதிலும், பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை அமைச்சர் அலி சப்ரி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் இலங்கையின் வலுவான வர்த்தகப் பங்காளியாக திகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கையினால் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை வந்த தாய்லாந்து பௌத்த தேரர்கள் !

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூறும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து பௌத்த தேரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

திருகோணமலை நகர இறங்குதுறைக்கு இயந்திரப்படகுகள் மூலமாக இன்று (14) வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் உட்டதுறைமுக வீதிவழியாக கண்டி நோக்கிய பாத யாத்திரையை தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த தேரர்கள் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த தேரர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்த 5 நாள் போர் நிறுத்தம் !

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, “5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்“ என்றார்.

“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணிகளை அபகரிப்பது நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” – ரவூப் ஹக்கீம்

“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் காணிகளை அபகரிக்க இடமளித்தால், அது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

காணி அபகரிப்புகள் அந்த மக்களை வறுமை நிலைக்கும் வேறு பிரச்சினைகளுக்கும் தள்ளிவிடுகின்ற பிரதான பிரச்சினையாகும்.  யுத்தத்துக்கு பின்னர் காணி அபகரிப்பு பிரச்சினை குறிப்பாக, வடக்கில் பாரியளவில் இடம்பெற்று வருகிறது. அதனால்தான் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் அரசியல்  கட்சிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

காணி அபகரிப்பு வடக்கு, கிழக்கில் இன்னும் இடம்பெற்று வருவதை காண்கிறோம்.

மேலும், திருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுக்க முற்பட்டால் பாரிய அழிவு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். இது பாரிய அச்சுறுத்தலாகும். இதனை சாதாரணமாக கருத முடியாது.

அதேநேரம் இந்த அச்சுறுத்தலை விடுக்கும் சரத் வீரசேகர எம்.பி.தான் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்.  இப்படி அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு தலைவரிடமிருந்து முன்மாதிரி, அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எமக்கு எழுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அதேநேரம் கிழக்கில் சில பிரதேசங்களை பெளத்தமயமாக்கும் இவ்வாறான சித்த விளையாட்டினால் நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை இன்னும் படுமோசமான முறையில் பாதிக்கப்படப் போகிறது.

மேலும், திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் தொல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விமானப்படையினர் சுவீகரித்துக்கொள்ள முயற்சி இடம்பெறுவதாக அறியக் கிடைத்தேன்.

அந்த பிரதேசத்தின் ஒரு பகுதியில் குடிமக்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதியில் கடல் அமைந்திருக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் பாரிய நிலப்பரப்பை, பாதுகாப்பு தேவைகளுக்காக என தெரிவித்துக்கொண்டு விமானப்படை சுவீகரிக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால், உல்லாச பயணிகளின் தேவைகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கே இதனை சுவீகரிக்கப்போவதாக தெரியவருகிறது. இதனால் அங்கு தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். இவ்வாறான நடவடிக்கை கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்தன; தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதே பிரச்சினை திருகோணமலை அரிசிமலை பிரதேசத்திலும் இடம்பெற்று வந்தது. இந்த காணிகளை பாதுகாத்து தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அத்துடன். இந்த காணிகளை அபகரிக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மதகுருமார்களும் சேர்ந்து வருகின்றனர். துப்பாக்கிகளுடனே வருகின்றனர்.

இப்படியான அநியாயங்களுக்கு வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தொடர்ந்தும் இடமளித்தால், இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு என்ன நடக்கும்?

சர்வதேசத்தின் முன்னிலையில், ஜெனீவாவில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதற்கு மத்தியில் இவ்வாறு காணிகளை அபகரிக்கும் விடயங்கள் தொடர்ந்தால், மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் பயன் இல்லாமல் போகும் என்றார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறேன் – இரா.சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பிலான நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பை தாம் பயன்படுத்திக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்தாது விட்டவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தாம் தயாரில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்படுகின்ற அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட இணக்கப்பாடுகள் நாடாளுமன்றத்தின் அங்கீகரத்தைப் பெற்று சர்வஜனவாக்கெடுப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் மீண்டும் மீளப்பெறமுடியாத வகையில் நிரந்தரமாக காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு தென்னிலங்கை தலைவர்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் இதற்காக தாமும் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் தமிழர் பகுதியில் புத்த விகாரை அமைக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் கூறிவிட்டார் – எம்.ஏ.சுமந்திரன்

திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

கண்டி, அஸ்கிரிய பீடத்தின் ஏற்பாட்டுக்கு அமைய தாய்லாந்திலிருந்து வரும் 40 பௌத்த தேரர்கள் அடங்கிய குழு திருகோணமலை நெல்சன் தியேட்டருக்கு முன்பாக இருக்கும் நிலத்தில் புத்தர் சிலையொன்றை கொண்டுவந்து வைத்து, பிரித் ஓதி, அங்கிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இந்துக் கோயிலான வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான காணி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சனிக்கிழமை (13) காலை இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது குறித்த பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என்றும் வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடவேண்டாம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திருப்தியளிக்கிறதா என்று வினவியபோது அதற்கு பதிலளித்த சுமந்திரன்,

“காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது எனும்போதிலும் அது உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்விடயத்தில் இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

ஏனெனில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட இதனையொத்த உத்தரவுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதுடன், அவை உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. எனவே, தற்போது காணி விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், அவ்விடயத்தில் மாத்திரம் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக கருதமுடியும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், நாளைய தினம் (15) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்றும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாம் நாள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ள நிலையில், அச்சந்திப்பு நாளைய தினம் (15)மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.