16

16

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிசாருக்கு விசாரணை !

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த காவல்துறையினர் இருவருக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதியன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதன்போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு வீதி போக்குவரத்து காவல்துறையினரும் பல்கலைகழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று குடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த காவல்துறையினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளதுடன் அவை சிங்கள ஊடகங்களிலும் வைரலாகின.

இந்த நிலையில், குறித்த இரு காவல்துறையினர் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களை கடந்த முயன்றதாக கூறப்பட்டு மக்கள் தாக்கிய நபர் ஒரு மனநோயாளி !

இன்றையதினம், காலை யாழ்ப்பாணம், நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர்  மடக்கி பிடிக்கப்பட்டு – அவரை அப்பகுதி மக்கள் அடித்து பின் யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இன்றையதினம் யாழ்ப்பாணம், நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபர் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்த மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரியும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு தாமரைத் தடாக சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கோட்டாபாயவுக்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக்கப்பட்டது ஏன்..? – பொதுஜன பெரமுன விளக்கம்!

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை.இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண ஆளுநர்கள் செயற்படுகிறார்கள். ஆளுநர் நியமனம், பதவி நீக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த போவதாக குறிப்பிடப்படுகிறது. யாரை ஆளுநராக நியமிக்க வேண்டும்,யாரை பதவி நீக்கம் வேண்டும் என நாங்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கவில்லை.

நாட்டில் ஜனநாயகம்,சட்டம்,ஒழுங்கு ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.ஜனநாயகம்,சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மாத்திரம் ஜனாதிபதியிடம் முன்வைத்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய நிலையான அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

நிலையான அமைச்சரவை நியமனம்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தவில்லை.ஜனாதிபதியின் அதிகாரத்தை சவாலுக்குட்படுத்த போவதில்லை என்றார்.

21 வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை !

இந்துருவ, அட்டவலவத்த சுனாமி கிராமத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின்போது தந்தையால் மகன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்துருவ, அட்டவலவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தந்தை சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகனின் கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மகனை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது 65 வயதுடைய சந்தேக நபரான தந்தை விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இலங்கையில் உருவாகவுள்ள முதலாவது அணுமின் நிலையம் !

இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணுசக்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது

இதேவேளை ஒட்டு வேலை (Welding) மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் இந்தக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுக்கு பாரியளவு கேள்வி உள்ளதாகவும், இலங்கையில் இத்துறையில் முறையான அங்கீகாரத்துடன் பயிற்சிபெற்ற நிபுணர்களை உருவாக்குவதற்கு உரிய பொறிமுறையொன்றின் அவசியம் தொடர்பில் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக குஷானி ரோஹந்தீர !

தலைமைப் பணியாளர் மற்றும் பாராளுமன்ற துணைப் பொதுச் செயலாளரான குஷானி ரோஹந்தீர பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குஷானி ரோஹந்தீரவை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

சட்டத்தரணி குஷானி ரோஹந்தீர, 2020 டிசம்பரில் பாராளுமன்றத்தின் தலைமைச் செயலாளராகவும் பிரதிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளர் (நிர்வாக சேவைகள்) ஆகவும் பணியாற்றினார்.

1999 ஆம் ஆண்டு பாராளுமன்ற அதிகாரியாக பாராளுமன்ற சேவையில் இவர் இணைந்தார்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.

சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கையர்களை நாடுகடத்தியது குவைத் !

குவைத்தில் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று, அந்த நாட்டின் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 32 பெண்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த 32 பெண்களும் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி குவைத் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பணிபுரியும்போது, ​​தூதரகத்திற்கு வந்து தாங்களாகவே இலங்கை செல்வதற்காகப் பதிவு செய்த இலங்கைப் பெண்களின் குழுவே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெண்கள் அனுராதபுரம், வவுனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த பெண்கள் 250 குவைத் தினாருக்கும் அதிக சம்பளம் பெறுவதற்கு, சட்டவிரோத உறவுகள் அல்லது தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள், பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருடன் கலந்துரையாடி, தலையிட்டு தற்காலிக விமான அனுமதியின் கீழ், இவர்களை இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.