17

17

இலங்கை நாட்டை முடமாக்கிக்கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல – அரச அதிகாரிகளும் தான் !

இலங்கை அண்மையில் எதிர்கொண்டிருந்த மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிக்கும் – இலங்கையில் இன்னமும் மில்லியன் கணக்கிலான  மக்கள் ஏழைகளாகவே இருப்பதற்கும் இலங்கையின் அரசு நிறுவனங்கள் முறையாக இயங்காமையே முக்கியமான காரணமாகும். இதனை அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட இரண்டு விடயங்களின் ஊடாக தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

01. மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி.

02. பாவிக்க கூடிய நிலையிலும் யாருக்கும் கையளிக்கப்படாத நிலையில் கிளிநொச்சியில் தேங்கி கிடக்கும் உழவு இயந்திரங்கள்.

அரிசி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவியோடு இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டிருந்தது.  எனினும் பல இடங்களில் இவை மக்களுக்கு விநியோகிக்கப்படாது பதுக்கப்பட்ட தன்மையினை காண முடிந்தது. அவ்வாறு பதுக்கப்பட்ட அரிசி புழு மொய்த்தும் வண்டுகள் நிறைந்ததாகவும் காணப்பட்ட நிலையில் பல இடங்களில் பாவனைக்கு உதவாது குப்பையில் கொட்டப்பட்டிருந்தன. இவற்றை முறையாக கண்காணித்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் கொடுக்காதுவிட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்திருந்தது. வவுனியாவின் ஆசி குளம் கிராம உத்தியோகத்த பிரிவில் உள்ள அரச கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழ்நாடு அரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1272 கிலோ அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இதனைப் போலவே அரசு அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அன்பளிப்புகள் முறையாக மக்களின் கைகளுக்கு போய் சேராத ஒரு நிலை இன்று வரை இலங்கையின் சாபக்கேடாக தொடர்கிறது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சமநிலை சேவைகள் நிலையம் ஒன்றில் இயங்க முடியாத நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட உழவு இயந்திரங்கள்  இயங்க முடியாத நிலையில் கமநல சேவைகள் அறையினுள் போட்டு மூடப்பட்டிருப்பதான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன.

(குறித்த சமூக வலைத்தள பதிவை காண)

https://www.facebook.com/100001431522803/posts/6435197643204556/?mibextid=QyDEvNoB73lyOOK6

குறித்த சமூக வலைதள பதிவுகளை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சியில் உள்ள குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மிக விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதுமட்டுமன்றி ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது இருந்தமைக்கான மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இதனை போலவே வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து சுமார் 12 ஏக்கர் காட்டை அழிக்க துணை போன வவுனியா கட்டையர்குள பகுதி கிராம உத்தியோகத்தர் தொடர்பான விவகாரம், வடக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மண் அகழ்வை கண்டும் காணாது இருக்கும் அரசு உத்தியோகத்தர்கள் , கம்பளையில் பிரதேச அரச வைத்தியசாலையில் ஏற்கனவே எழுதப்பட்ட மருந்துச்சிட்டையினை மீள பயன்படுத்தியதால் 7 வயது குழந்தை பலியான சம்பவம் என அரச அதிகாரிகளின் அசமந்த போக்கை தினசரி இலங்கையர்கள் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக சேவையாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் வாங்கும் சம்பளத்துக்காக சரி உண்மையாக வேலை செய்வதில்லை. காலை எட்டு மணிக்கு வேலை ஆரமப்மாகும். மக்கள் காத்திருப்பது கணக்கேயில்லாமல் சரியாக 10-11 மணிக்கிடையில் தேநீர் இடை்வேளை, சரியாக 1 மணிக்கு மதிய உணவு மதியம் 3,  4 மணிக்கு அலுவலகம் மூடப்படும். பின்பு சனி,ஞாயிறு முழுமையான விடுமுறை . இதறகிடையில் சம்பளம் போதாது – சம்பள உயர்வு வேண்டும் என போராட்டங்கள் வேறு.

மக்களுக்காக வழங்கப்படுகின்ற இந்த இலவசமான உதவி திட்டங்களை கூட மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்கின்ற அளவிற்கு இந்த அரச அதிகாரிகள் நிலை இருக்கின்றது. அலுவலகங்களில் கூட இலங்கையின் அரசு அதிகாரிகள் பெரிதாக வேலை செய்வது கிடையாது. இன்னமும் பழமையான ஆவணப்படுத்தல் முறைமைகளை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவதனை பெரிய ஒரு தொழிலாக அடையாளப்படுத்தி மக்களின் உழைப்பை இந்த அரசு அதிகாரிகள் சுரண்டி கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்காக இவர்கள் எதனையும் ஆக்கபூர்வமாக செய்தது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆகச் சிலரை தவிர அரசு உத்தியோகத்தினை மக்களுக்கான சேவையாக வழங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை கூட இலங்கையில் குறைந்துவிட்டது. சாதாரணமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக தகவலை கோருகின்ற மனுக்களுக்கு கூட சரியான பதில் கிடைப்பது இல்லை. சரியான பதிலை வழங்கி விட்டால் தங்களுடைய உண்மையான நிலை தெரிந்து விடுமோ என்ற அச்சம் தான் இதற்கான உண்மையான காரணம்.

அரசாங்கங்களும் – அரசியல்வாதிகளும் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக் கொண்டிருக்க போகிறார்கள். அவர்களை நொந்து எந்தப் பயனுமே இல்லை. இந்த இலங்கை நாட்டை முடமாக்கியதில் ஆகப்பெரிய பங்களிப்பு வாழ்நாள் முழுவதும் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் கதிரைகளை தேய்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு அதிகாரிகளுடையது. நாம் அதிக கேள்வி கேட்க வேண்டியது இந்த அரசு அதிகாரிகளை தான்.

அரச அதிகாரிகள் முறையாக செயற்படாத வரையில் இலங்கை மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

தாய்க்கு போதைப்பொருள் வழங்கி விட்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு !

மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதானவர் இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சிறுமி 36 வயதான தமது தாயுடன் கல்கிசை பகுதியிலுள்ள சொகுசு மாடி கட்டடத்தில் இருந்துள்ளார்.

இதன்போது அங்கு பிரவேசித்த 62 வயதான பௌத்த பிக்கு, குறித்த சிறுமியின் தாயாருக்கு போதைப்பொருளை வழங்கி அவரை மயக்கமடைய செய்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த 11 வயதான சிறுமியை பௌத்த பிக்கு வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை !

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்  ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்ருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை வழிபாடு தொடர்பில் வவுனியா நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு  !

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறையினருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலையில் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் முறைபாட்டாளார்கள் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில,

இந்த வழக்கில் தொல்பொருட்திணைக்களம் முதன்முறையாக முன்னிலையாகி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி முறைப்பாட்டாளர்கள் செயற்பட்டதாக தகவல் கொடுத்திருந்தனர்.

இன்றும் அந்த விடயத்தை கூறியிருந்தார்கள். இருப்பினும் தொல்பொருள் தொடர்பான இந்த பிரதேசத்திலே மார்ச் மாதம் இடம்பெற்ற மோசமான விக்கிரகங்கள் உடைப்பு சம்பவத்தில் தொல்பொருட் திணைக்களம் ஒரு விரலைகூட அசைக்கவில்லை.

அந்த விடயத்தை கரிசனையில் கூட எடுக்கவில்லை. அதனை மீள நிறுவும் படி நீதிமன்றம் உத்தரவை வழங்கிய பின்னரே மீள நிறுவியதால் தொல்பொருள் சேதமேற்பட்டதாக பொய்யான புகாரை தெரிவிப்பதாக நாம் எடுத்துரைத்தோம்.

அந்தவிடயத்தில் இதுவரைக்கும் சந்தேகநபராக எவரையும் குறிப்பிட வில்லை. தொல்பொருட்திணைக்களம் வனவளத்திணைக்களம் போன்றவற்றால் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுகின்ற ஒரு இடத்தில் இப்படியான விக்கிரகங்களை உடைத்தமை ஒரு விசித்திரமான விடயம் என்பதையும் கூறினோம்.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் காவல்துறைக்கு கட்டளை இட்டுள்ளார். அத்துடன் தொல்பொருளுக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இது நீதிமன்ற கட்டளையை மீறி செயற்பட்டமை தொடர்பாக இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை உரியமுறையிலே எடுக்குமாறு தொல்பொருட்திணைக்களத்திற்கு நீதிமன்றால் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொல்பொருள் அடையாளங்கள் சேதமாகின்ற வகையில் செயற்படாவண்ணம், சமய சடங்குகளை எளியமுறையிலே செய்வதற்குமான, எச்சரிக்கையும் முறைப்பாட்டாளர்களான எங்களுக்கு மன்றால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இன்றைய வழக்கில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களுடன் ஆலயத்தின் பூசகர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை !

கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கும் பொருந்தும்.

வெளிநாட்டு தடையை நீக்குவதற்கான இந்த  உத்தரவு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் என பெயரிடப்படாததால், அவர்களின் பயணத்தடையை நீக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

புதிய மாகாண ஆளுநர்களாக பி.எம்.எஸ். சார்ள்ஸ் , செந்தில் தொண்டமான், லக்ஷ்மன் யாப்பா !

வட மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

சிறுவர் கடத்தப்படுதல் தொடர்பான அச்சம் – வியாபாரத்துக்கு வந்தவர்களை தாக்கிய கிளிநொச்சி மக்கள் !

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனும் சந்தேகத்தில் வியாபாரத்துக்கு வந்த வாகனம் ஒன்றை கிராம மக்கள் இணைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

அத்தோடு வாகனத்தில் வந்த இருவரையும் தாக்கியதில் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வடக்கில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என சிறுவர்களை கடத்தும் செய்திகள் இன்று பேசுபொருளாக உள்ள நிலையில், சந்தேகம் கொண்ட கிராமத்தவர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வியாபாரத்துக்கு என வாகனத்தில் வந்த இருவரும் சகோதர மொழியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கூறும் மொழி புரியாமல் மக்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.