இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியுள்ளது.
உலக ரக்பி பேரவை மற்றும் ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.
நிர்வாக சிக்கல்களை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.
எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.
உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாக செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.
இதே நேரம் இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஐ.சி.சி அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக 2023. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.