20

20

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததால் தேசத்தின் சமாதானம் உறுதியானது – ஜெனரல் விக்கும் லியனகே

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சொல்லொணா சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பெருமளவில் பங்களித்தார்கள் என்றும் இதனை இலங்கையர்கள் தொடர்ந்தும் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்தல், பேரிடர் மற்றும் கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது, தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், இராணுவம், மீட்பு மற்றும் உதவிக்கு வந்தது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை !

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது,

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவு !

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கு வழிவகுத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள அமைப்பில் தரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

புதிய பட்டதாரிகளின் ஆளுமை, ஆர்வம், அறிவு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது  முக்கியத்துவமுடையதாகும்.  அனைத்து துறைகளிலும் சரியான நேரத்தில் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.

Prednisolone கண் சொட்டு மருந்து கறுப்புப் பட்டியலில் !

ஒவ்வாமை ஏற்பட்டமையினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தை,  மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த மருந்துகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துக்கு பதிலாக மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கண் சொட்டு மருந்து பயன்படுத்தபடுவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தியதன் பின்னர் நோயாளர்கள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டமையினால், அது உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு !

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்துச்சென்ற ஆசிரியர் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு – ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றிவரும் ஆசிரியரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

அவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த  தனியார்  வகுப்பில், கிரான் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்தார்.

குறித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து,  அவரை பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றபோது கையும் மெய்யுமாக அவர் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களின் மீது சந்தேகமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள், விடுதி வரை பின்தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த இலங்கை பெண் – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை !

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உடலம் நேற்றிரவு இலங்கை கொண்டு வரப்பட்ட நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, குறித்த பெண் உயரமான பகுதியில் இருந்து விழுந்ததனால், தலை மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், இதனாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொடுவ பகுதியைச் சேர்ந்த நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம்.ஹில்மி அஷீஸ் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகள் !

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டான, ஹல்பே கோபியாவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை உரிமையாளரான ஓமான் பிரஜையொருவர் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் பதிவாகாமல் இருப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் உள்ள சில இடங்களுக்குள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, கண்டி மாவட்டத்தை கேந்திர மையமாகக் கொண்டு, இவ்வாறான முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் பலவற்றை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகள் இந்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் மாத்திரம் அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் வெளியிடங்களிலும் அவை ஸ்தாபிக்கப்பட்டன.

இந்நிலையில், முதலீட்டு வலயங்களுக்குள் பிரத்தியேக பாதுகாப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் மீது வெளியாட்கள் யாரும் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், ஏற்றுமதி முதலீட்டு வலயங்களுக்கு வெளியில் அமைந்துள்ள வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும், ஏதேனுமொரு தரப்பினரிடமிருந்து அநாவசியமான அழுத்தங்கள் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

“வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை மட்டுமல்ல யுத்தத்துக்கான தீர்வையும் எதிர்பார்க்கின்றனர்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை மட்டும் எதிர்பார்க்கவில்லை, யுத்தம் எதற்காக ஏற்பட்டதோ அதற்குரிய தீர்வையும் விரும்புகின்றனர்.” இவ்வாறு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ரணில்,

“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இருப்பினும், அபிவிருத்தியை மாத்திரம் தமிழ் மக்கள் விரும்பவில்லை, யுத்தம் எதற்காக ஏற்பட்டதோ அதற்குரிய தீர்வையும் எதிர்பாக்கின்றனர்.

இந்தியா போன்ற சர்வதேச நாடுகளின் விருப்பமும் அதுவாகவே உள்ளதுடன், எனது விருப்பமும் அதுவே.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்து விட்டாலும், இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை.

தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது, அதற்காக விரைந்து நாம் செயல்படவேண்டும்.

குறித்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை எனக்கு வழங்க வேண்டும்.” என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

சக மாணவனை கொடூரமாக தாக்கி அதனை tiktok இல் பதிவிட்ட பாடசாலை மாணவர்கள் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை வெள்ளிக்கிழமை வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவ புளியங்குளம் வீதியில் வைத்து ஒரு மாணவனை தலைக்கவசம், கொட்டன்தடி கொண்டு சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து டிக்டொக்கில் சாகசம் காட்டி பதிவு செய்துள்ளனர்.

https://fb.watch/kEzgH8eooY/

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஓர் மாணவனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதுடன், இன்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு மாணவனையும் கைது செய்து தடுப்புகாவலில் வைத்துள்ளார்கள்.

மேலும் இச் சம்பவத்தின் முக்கிய ஆதரமான காணொளியை கொண்டு இதனுடன் தொடர்புடைய ஏனையவர்களை தேடும் பணியினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ,விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.