22

22

மன்னார் – உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக பௌத்த விகாரை !

மன்னார் – உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவில், புதிதாக பௌத்த விகாரையை அமைப்பதற்கான வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் – உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (22.05.2023) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரையை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக காரணங்களாக உள்ளது. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் போன்ற இடங்களில் 5 பௌத்த விகாரைகள் உள்ளது.

ஆனால் இங்கே பௌத்த குடும்பங்கள் 50 கூட இல்லை. பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்த விடயத்தை உடனடியாக நான் புத்தசாசன அமைச்சருடைய கவனத்திற்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்துகின்றேன்.

மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த நிலையிலே நேரடியாக குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பயனாளிகளின் தரவுகளை கைமாற்றிய விவகாரம் – மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் !

உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில் அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனம் தனது ஐரோப்பிய பயனாளிகளின் தரவுகளை அமெரிக்காவிற்கு அனுப்பியதை மையப்படுத்தி அயர்லாந்தை தளமாக கொண்ட தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று இந்த அபராததொகையை அறிவித்துள்ளது.

தனது நிறுவனத்துக்கு இவ்வாறு ஒரு பாரிய அபராதத்தொகை விதிக்கபட்டால் முகநூல் நிறுவனம் ஐரோப்பாவை விட்டு வெளியேறும் என அதன் தாய் நிறுவனமான மெட்டா அச்சுறுத்தல் விடுத்திருந்தாலும் இந்த அச்சுறுத்லை அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று காலை இந்த அபராதத்தை அறிவித்ததுடன் முகநூல் நிறுவனத்தின் விதிமீறலையும் கண்டனம் செய்துள்ளது.

ஐரோப்பாவை பொறுத்தவரை மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட 1.2 பில்லியன் யூரோ என்ற இந்த அபராததொகை ஒரு சாதனை அளவாகும்.

எனினும் முகநூல் வலைத்தளத்தில் பயனாளிகளாக உள்ள ஐரோப்பியர்களின் அடிப்படை உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்கு ஆபத்துக்களை உருவாக்கும் வகையில் அவர்களின் தரவுளை அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

அத்துடன் ஐந்து மாதங்களுக்குள் ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை அமெரிக்காவிற்கு மாற்றும் நகர்வுகளை நிறுத்த வேண்டும் எனவும் அதேபோல ஆறு மாதகாலத்துக்குள் அமெரிக்காவில் முகநூல் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ள தரவுசேகரிப்பு களஞ்சியங்களில் இருந்து ஐரோப்பிய பயனர்களின் தரவுகள் அகற்றப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது

இந்த நிலையில் அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் இந்த அபராத நகர்வு நியாயமற்ற ஒரு நடவடிக்கையென விமர்சித்துள்ள மெட்டா நிறுவனம்; இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போததாகவும் குறிப்பிட்டுள்ளது

சடுதியாக வீழ்ச்சியடைந்த இலங்கையின் பணவீக்கம் !

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆகக் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2% ஆக இருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் 15. 6 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மார்ச் மாதத்தில் 42.3% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், மார்ச் மாதத்தில் 54.9% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 39% ஆக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கால்பதிக்கும் சீனாவின் சினோபெக் – உறுதியானது ஒப்பந்தம் !

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியிடம் சேட்டை விட்ட இராணுவ சிப்பாய் – நையப்புடைத்த மக்கள் !

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பலாலி காவல்துறையினர் மற்றும் இராணுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து காவல்துறையில் ஒப்படைத்ததுள்ளனர்.

வடக்கின் புதிய ஆளுநராக பதவியேற்றார் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் – வழங்கியுள்ள உறுதிமொழிகள் என்ன..?

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத் தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி, அதற்கு தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பேன்.

இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்குமான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில், அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம் அவர்களால் மாகாண மக்களின் குறிப்பாக, யாழ். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதை முன்னெடுத்து செல்லும்படியும் கூறியிருக்கிறார். அது தொடர்பாகவும் நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியில் ஒரு பெரும் பிரச்சினையாக உணர்ந்திருக்கின்றேன். எனவே, அந்த பிரச்சினையை தீர்க்க நிச்சயமாக முக்கிய கவனம் எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

“மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன்.” – வசந்த முதலிகே

“மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன்.” என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே நேற்று தெரிவித்தார்.

என் நேரம் முடிந்துவிட்டது. நான் விரக்தியிலிருந்து வெளியேறவில்லை. இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மதுஷன் சோயுரத் இந்த தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது உறுதி. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

மார்ச் 6, 2021 அன்று நான் ஏற்பாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போதிருந்து, பல்கலைக்கழகங்களில் கற்கும் சகோதர சகோதரிகளின் பிரச்சினைகள் மட்டுமல்ல, துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளும் பேசப்பட்டன. அதுமட்டுமின்றி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

என்னை கொல்ல திட்டமிட்டார்கள். அந்தச் சவால்களையெல்லாம் சளைக்காமல் எதிர்கொண்டேன்.

மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன். ஏனென்றால் அவர்களில் பலமான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த ஒரு தலைவர் மதுஷன் என்று அழைக்கப்படுகிறார்.

நான் போனதால் போராட்டம் நிற்காது. இந்தப் பிரச்சினைகள் தீரும் வரை அவை தொடரும். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்காகவும் குரல் எழுப்புவேன்.” எனத் தெரிவித்தார்.

இலங்கை நிர்வாகத்தை கொண்டு நடத்த 15 அமைச்சுக்களே போதுமானது – ஆய்வில் வெளியான தகவல் !

இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தை 30 அமைச்சுக்களுடன் கொண்டு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

இருப்பினும், நிர்வாகத்தை 15 அமைச்சுக்களுடன் நடத்த முடியும் என வெரிடே ரிசர்ச் எனும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்ற மே 17 அன்று ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட தகவலில், தற்போது சுமார் 30 அமைச்சுக்கள் உள்ளதுடன், அதனை விரிவுப்படுத்தாமல் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் அமைச்சரவை அமைப்பதற்கான ஒரு பகுத்தறிவு முறை என்ற தலைப்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, செயல்பட போதுமான 15 அமைச்சுகளை வெரிடே ஆய்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேசமயம், துண்டு துண்டாக – தொடர்புடைய துறைகள், வெவ்வேறு அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு, தவறான சீரமைப்பு காரணமாகவே கடந்த காலங்களில் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் தாமதங்களை உருவாக்கியிருந்தன.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தனியாரிடம் !

வாக்குச் சீட்டுகள் உட்பட தேர்தலின் போது செய்யப்படும் அனைத்து அச்சிடும் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க அச்சகம் போன்ற நிறுவனங்கள் இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக எதிர்வரும் தேர்தலில் அச்சடிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளுக்கு பணம் பெறும் முறை தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டார்.