23

23

வெள்ளை வேன் கடத்தல் ஊகங்களும் – ஊடகங்கள் கிளப்பி விட்ட புரளிகளும் – YouTube வீடியோ !

அண்மைய நாட்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கக்கூடிய சிறுவர்களையும் – அவர்களின் பெற்றோரையும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தகவலாக மாறியுள்ளது வெள்ளை வான் கடத்தல் தொடர்பான செய்திகளாகும். அப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றதா..? நடைபெறவில்லையா..? உண்மையிலேயே அது கடத்தல் தானா ..? போன்றவற்றின் உண்மைத்தன்மையை தேசம் திரை இந்த காணொளியில் ஆராய்கிறது.

கடத்தல் தொடர்பான செய்திகள் முதன் முதலில் ஆரம்பித்தது மன்னார் மாவட்டத்தில் இருந்தே. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் அவர்கள் மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் அவை சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதே நேரம் மன்னாரில் சிறுவர்களை கடத்த ஒரு குழு முயற்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடத்த முற்பட்டோர் கைதாகிய நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பான உண்மைகளும் – வதந்திகளும் சமூக வலைத்தளங்களிலும் – வாட்ஸ் அப் குழுமங்களிலும் அதிகம் பகிரப்பட்டது. இந்த இடத்தில் மக்களை இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் ஆகும். சாதாரணமாக காணாமல் போன செய்திகளை கூட கடத்தல் செய்திகளாக ஊடகங்கள் மாற்றி தங்களுக்கான பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டன. அதிலும் சில தனியார் யூடியூப் பக்கங்கள் சம்பவத்தை நேரடியாகவே பார்த்தது போலவும் புரளிகளை கிளப்பி விட ஆரம்பித்திருந்தனர்.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள link ஐ Click செய்யவும்..!

 

“நீங்கள் கிறீம் பூசினால் அழகா இருப்பீங்க.” – யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் தொடர்பில் முறைப்பாடு !

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமையின் நிமித்தம் சென்ற யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பேசிய தகாத பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ். வலய ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்குக் கடமையின் நிமித்தம் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற ஆண் ஆசிரியர் ஆலோசகர், குறித்த பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ ஒவ்வாத வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள், “யார் நீங்கள்” என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது பதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர், “நான் தீவக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றிய பின்னர் யாழ். வலையத்திற்கு வந்த ஆசிரியர் ஆலோசகர்” என்று கூறியுள்ளார்.

திடீரென ஒரு வகுப்புக்குச் சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் வினாக்களைக் கொடுத்தபோது, சில தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததுடன், “நீங்கள் கிரீம் பூசுவது இல்லையா, பூசினால் அழகாய் இருப்பீர்கள்” எனவும் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

நியூ டயமன்ட் கப்பல் எரிந்த விவகாரம் – இலங்கையிடம் நட்டஈடு கோரிய இந்தியா !

நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கியபோது வழங்கிய உதவிக்காக இலங்கை 890 மில்லியன் இந்திய ரூபாவை, இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் எழுத்துமூலம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நியூ டயமன்ட் கப்பலின் தீயை அணைப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கும் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படையினர் கடுமையாகப் போராடினர்.

நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கியபோது வழங்கிய உதவிக்காக இலங்கை 890 மில்லியன் இந்திய ரூபாவை, இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் எழுத்துமூலம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நியூ டயமன்ட் கப்பலின் தீயை அணைப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கும் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படையினர் கடுமையாகப் போராடினர்.

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை !

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தங்கவேலு நிமலன் என்ற நபருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள், 1 1/2 கிலோ C-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, குற்றவாளிக்கு கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

போதைப்பொருள் பாவனை – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது !

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதேவேளை அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தையிட்டி விகாரை – வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்தப்பட்ட பா.உ செல்வராசா கஜேந்திரன் !

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை, அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தால் நாம் கனடா படுகொலையை நினைவுகூருவோம்.” – விமல் வீரவன்ச

“கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே  எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம்   அனுஷ்டிக்க வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மே 18 இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டு கனடா நாட்டு பிரதமர் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி  நாட்டை அவமதித்துள்ளார். இலங்கை தொடர்பில் கருத்துரைக்கும் கடனாவின் வரலாற்று பக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  21 ஆம் திகதி  கனடா  நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது. எதிர்ரும் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்’ என பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்.

இலங்கையில் இடம் பெறாத இனப்படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

இலங்கையிலுள்ள அகதிகள் இலங்கையிலுள்ள UNHCR முன்பு போராட்டம் !

இலங்கையில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் அதன் செயற்பாடுகளை இலங்கையிலிருந்து நிறுத்திக் கொள்வதற்கு முன்னதாக இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வேறு நாடுகளுக்கு புகலிடம் பெற்றுத் தருமாறு கோரி கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு (  UNHCR ) முன் புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆசியாவின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் – வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள்!

பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை, வளர்ந்து வரும் ஒரு நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் நாணய மதிப்பிழப்பு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாட்டால் மனிதாபிமான அவசரநிலை போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நிலைவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள், இந்த அளவீட்டின் அடிப்படையில் ஆசியாவிலுள்ள 20 ஏழ்மையான நாடுகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வறுமையானது உணவு, சுத்தமான நீர், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூக சேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான அணுகல் உட்பட பல பரிமாணங்களையும் உள்ளடக்கியது.

2023இன் முதல் ஐந்து வருடங்களுக்குள் இலங்கை வந்த 5 லட்சம் சுற்றுலாப்பயணிகள் !

2023 இல் இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 500,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை 57,142 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை மொத்தம் 15,052 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதேவேளை மே முதல் மூன்று வாரங்களில் ஜேர்மனியில் இருந்து 5,318 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 5,273 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,812 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,039 பேரும், சீனாவில் இருந்து 2,935 பேரும், கனடாவில் இருந்து 2,516 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,263 பேரும், பிரான்சிலிருந்து 1,693 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்