24

24

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் இன்று புதன்கிழமை(24) காலை 11 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றதுடன் தொடர்ந்து கலாநிதி இந்திரபாலா தொல்லியல் கண்காட்சியும் தொல்லியல் அருங்காட்சியக இணையத்தளமும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு ஏனைய பீட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்றுத்துறை முதல் பேராசான் கலாநிதி கா.இந்திரபாலாவால் அடித்தளமிடப்பட்டது.

 

இலங்கையின் பிரபல கலைஞர் வீட்டில் இறந்த பெண் – நாடாளுமன்றில் மனோ கணேசன் கவலை !

இலங்கையின் பிரபல கலைஞர் சுதர்மா ஜெயவர்தனவின் வீட்டில் பணிபுரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஏ.ராஜ்குமாரியின் மரணம் தொடர்பில் கவலை தெரிவித்தார்.

பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இறந்த வீட்டுப் பணிப்பெண்ணின் உடலை தோண்டி எடுக்க புதிய நீதித்துறை அதிகாரி விசாரணையை கோறியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நிபுணர்கள் குழுவிடம் புதிய விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குவதாக உறுதியளித்தார்.

மே 11 அன்று கலைஞரின் வீட்டில் திருடப்பட்டமை தொடர்பான புகாரின் பேரில், மே 15 அன்று வீட்டுப் பணியாளர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்,

முறைப்பாட்டையடுத்து, பதுளை தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பெண் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

23 வீதத்தால் குறைக்கப்பட்டது மின்சாரக் கட்டணம் !

வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை 0-30 யூனிட் வகைக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யூனிட் விலை 25 ரூபாவாக மாற்ற புதிய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்க முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

31 முதல் 60 யூனிட் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0-30 யூனிட்களை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல்களுக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“தையிட்டி விகாரையை தமிழ் பௌத்தர்களிடம் ஒப்படைக்க தயார்.” – பொகவந்தலாவ ராகுல தேரர்

யாழ் – தையிட்டி திஸ்ஸ விகாரையை யாழ்ப்பாண மக்களிடமே ஒப்படைக்க தாம் தயார் என பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

எனது நோக்கம், தமிழர்களா, சிங்களவர்களா, முஸ்லிம்காளா, கிறிஸ்த்தவர்களா  என்பதைவிட அனைவரும் மனிதர்கள் என்பதுதான். தமிழ் பௌத்த தேரர் ராகுல ...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர்,

இலங்கையிலே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருக்கின்றன. திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்தக் காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள்.

அந்த விகாரை கட்டப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள் என கூறியிருக்கிறார்கள். எனினும் இதுதொடர்பாக எங்களுக்கு சரிவர தெரியவில்லை.

அவர்களோடு நாங்கள் அமர்ந்து பேசத் தயாராக இருக்கின்றோம். யாழ். மாவட்டத்திலே தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். நாங்கள் ஒரு பரிபாலன சபையை அமைத்து அந்த விகாரையை உங்கள் கையிலே ஒப்படைக்கிறோம்.

நாங்களும் வருகின்றோம். அதன்பிறகு அந்த விகாரை பொது மக்கள் கையில் ஒப்படைக்கப்படும்.

தமிழ் பேசுகின்ற அனைத்து உறவுகளும் சென்று அந்த இடத்திலே உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளலாம்” – என்றார்.

கடத்தலில் ஈடுபட்டு கைதாகி விடுதலையான அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்றில் யாருக்கு வாக்களித்தார் ..?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு எதிராக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வாக்களிக்களித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, ​​ இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் அவரை கைது செய்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சரக்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதேவேளை இன்று விடுவிக்கப்பட்ட அவர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு ஜனக ரத்நாயக்கவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவியில் இருந்து நீக்க 123 வாக்குகள் !

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று (24) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இதனை சமர்பித்தார்.

கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.

இதேநேரம்,  22 இலட்சம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

27 வீதத்தால் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பரிந்துரைக்கும்போது, அரசாங்கமோ 3 வீதத்தால் மாத்திரம் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என குற்றம் சாட்டினார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு என தாம் குரல் கொடுக்கவில்லை என்றும் மாறாக, நாட்டு மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை நடாத்தியதன் பின்னணில் சிங்கள அரசியல்வாதிகள்.” – சந்திரிகா குமாரதுங்க பகீர் !

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை  இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை  பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்,என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம்,  வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

சிவிலியன்களின் போராட்டங்களை கையாளும் போது அரசாங்கம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன..?

சிவிலியன்களின் போராட்டங்களை கையாளும் போது அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதலை மேலும் விரிவுபடுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மின்னஞ்சல் முகவரியான rm.director.hrcsl@gmail.com என்ற முகவரிக்கு ஜூன் 9 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து முன்மொழிவுகளும் 1,500 வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிங்கள மொழியிலும் பிரேரணைகள் மற்றும் கருத்துக்கள் “lskoola Pota” எழுத்துகளிலும் தமிழ் பிரேரணைகளை “லதா” எழுத்துகளிலும் ஆங்கில பிரேரணைகள் “டைம்ஸ் நியூ ரோமன்” எழுத்துகளிலும் அனுப்பப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை https://www.hrcsl.lk/hrcsl-issues-recommended-guidelines-on-dealing-with-civilian-protests/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆணையம் அனுப்பியுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விருப்பமென்றால் தமிழருக்கு ஜஸ்டின் ரூடோ கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொடுங்கள்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம். மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற  பந்தயம்,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச் ) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை மேற்கோள்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உலகளாவிய ரீதியில் மிக கொடிய அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை  முடிவுக்கு கொண்டு வந்து 14 ஆண்டுகளை கடந்துள்ளோம் பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

இராச்சியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்ட  விடுதலை புலிகள் அமைப்பை நாட்டுக்காகவே முடிவுக்கு கொண்டு வந்தோம்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் டயஸ்போராக்கல் மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.இதற்காக ஐரோப்பிய நாடுகள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது.அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே அவர் இவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்துக்கு இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடனாவில் புலம் பெயர் தமிழர்கள் வளம் பெற்றுள்ளார்கள்.இவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே  கடனாவின் பிரதமர் இலங்கை தொடர்பில் முறையற்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையை காட்டிலும் கனடா பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.ஈழத்தமிழர்கள் தொடர்பில் கடனாவின் பிரதமருக்கு உண்மையில் கரிசனை,அக்கறை காணப்படுமாக இருந்தால் கனடாவில் ஈழ இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் ஈழத்தை கோரவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இன்றும் ஈழத்துக்காக போராடுகிறார்கள்.

நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள்.எங்கும் பிரச்சினையில்லை.அரசியல்வாதிகள் மாத்திரமே பிரச்சினைகளை உருவாக்கி குறுகிய இலாபம் பெறுகிறார்கள் என்றார்.