25

25

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை கிழித்து வீசிய மாணவர்கள் – கேட்டகப்போன ஆசிரியர் மீது சரமாரியான தாக்குதல் !

கடந்த 18.05.2023 அன்று புத்தளம் தில்லையடி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த உடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை கிழித்து பாதையில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியருக்கு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் புத்தளம் தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஆசிரியரைத் தாக்கிய சில மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் ஏனௌயோரை தேடுமாறும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக வல்லரசு போட்டியில் இலங்கை யார் பக்கம்..? – ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

உலக வல்லரசுகளின் போட்டியில் ஆசிய நாடுகள் பக்கம் சாய்வதைத் தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (25) ஆரம்பமான ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில் (Nikkei Forum) கலந்து கொண்டு சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

ஜப்பானிய நிக்கேய் பத்திரிகை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த மாநாடு இன்றும் நாளையும் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

ஆசியாவின் பன்முகத்தன்மை, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் காரணியாகும் என்பதோடு அது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய உலகளாவிய சக்தியாகும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கும் இந்து சமுத்திரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசிய-பசுபிக் பிராந்தியமானது ஒரு கட்டமைக்கப்பட்ட பிராந்திய அமைப்பாகும் எனவும் இந்து சமுத்திர வலயமானது வளர்ந்து வரும் பிராந்தியம் எனவும் குறிப்பிட்டார்.

1955 ஆம் ஆண்டு பெண்டுங்கில் நடைபெற்ற ஆசியா-ஆபிரிக்க உச்சி மாநாட்டிலும் இந்து சமுத்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திலும் இந்து சமுத்திர பிராந்தியம் அமைதிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இந்தோ-பசிபிக் பிராந்திய தொடர்புகளை மேம்படுத்தும் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

போதைப்பொருள் பாவித்த 15 சாரதிகள் கைது !

போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் பஸ்களைச் செலுத்தியதாகக் கூறப்படும் 15 பஸ் சாரதிகள் கடந்த இரு தினங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் பஸ்களைச் செலுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல்மாகாணத்தை மையமாகக் கொண்டு 106 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரின் பங்களிப்புடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

775 பஸ்களை சோதனை செய்து, அந்த பஸ்களின் சாரதிகளின் எச்சிலை சோதனை செய்ததில், இவர்களில் 15 சாரதிகள் போதைப்பொருள் பாவித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் வாகனங்களைச் செலுத்திய சாரதிகளின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் – மக்களே அவதானம் !

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,150 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத்யாப்பா குறிப்பிட்டார்.

 

கொழும்பில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளது.

 

2021 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 552 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்க பெற்றிருந்தது. கடந்த வருடம் 1,337 ஆக அதிகரித்துள்ளது.

 

இருப்பினும் தற்போது அதனளவு சடுதியாக அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,156 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்த புள்ளிவிவரங்களின் பகுப்பாய்விலிருந்து நாம் சில முடிவுகளைப் பெறலாம்.

 

மக்கள் மிக விரைவாக தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். மக்களை ஏமாற்றி, வெளிநாட்டு வேலைகளை காட்டி இந்த பணத்தை சட்டவிரோதமாகவோ அல்லது மோசடியாகவோ பெற்றுக் கொள்ளும் வகையில் சில ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் செயற்பட்டு வருகின்றனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வாக செயற்பட வேண்டும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டுவர முற்பட்ட வேளையில் நேற்று (24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

3 1/2 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை இலங்கைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட அவர் 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தியுள்ளதாக சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.