26

26

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் – சமூக வலைத்தளங்களில் வெளியாகிய படங்களால் பரபரப்பு !

தமிழ்நாடு பணியாற்றும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளிடம் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று சிதம்பரத்தில் விசாரணை மேற் கொண்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்தீட்சிதர்கள் குழந்தை திருமணங் கள் செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணையில் அச்சிறுமிகளிடம் கன்னித் தன்மைபரிசோதனைக்காக, தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கடந்த 9-ம் திகதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பினர்கள் இளங்கோவன், பெனிட்டா, முகுந்தன், செந்தில் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி, இதுதொடர்பான விசாரணை அறிக்கையை தங்களது தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நேற்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சிதம்பரத்திற்கு வருகை தந்தார்.

 

நடராஜர் கோயிலுக்கு சென்று ஆதிமூலநாதர் சந்நிதி அருகே அறுபத்து மூவர் சந்தியில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ம.ராஜசேகரன் மற்றும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று சிறுமிகளிடமும், அவர்களது பெற்றோரி டமும் தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் ஜி.சந்திர சேகரன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், “இச்சம்பவத்தில் தானாக முன் வந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக தமிழக காவல் துறை தலைவரிடம் விளக்கம் பெறப்பட்டது. தமிழக தலைமை செயலரிடமிருந்தும் அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கை சரியா என்பதை விசாரித்தோம்.

முதலில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள், இரண்டாவதாக காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மூன்றாவதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் என மூன்று கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை.

விசாரணை அறிக்கையை ஆணைய தலைவரிடம் விரைவில் அளிக்க உள்ளேன். அந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தானாக முன்வந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமணம் விவகாரம் - புகைப்படங்கள் வெளியீடு

 

இவ்வாறு குழந்தை திருமணம் நடைபெறவில்லை என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமண படங்கள் வெளியாகி இன்றைய தினம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

செய்தி மூலம் – இந்து தமிழ், டேய்லி தந்தி

ஜப்பானிடம் மன்னிப்பு கோரிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

ஜப்பானின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் (LRT) இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் நேற்று (25) டோக்கியோவில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரின் உடன்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களை நிறுத்தவோ அல்லது ரத்துச் செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

ஜனாதிபதியை ஜப்பான் பிரதமர் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், ஜப்பானிய பிரதமரின் உதவிக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும்  இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் பழக்கடை நடத்துவோர் மீது வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று (25) இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“மன்னாரில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன.” – சார்ள்ஸ் நிர்மலநாதன்

“முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 37 கிராமங்கள் மகாவலி வலயத்திற்குள் உள்வாங்குவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.” என இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

“மகாவலி அதிகார சபையால் தமிழர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு, அவற்றை தென்பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழர் பகுதி நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பகுதிகளில் புதிய பிரதேச செயலகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.

ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவர்களுக்கு பிணை !

பாடசாலையொன்றின் ஒழுக்காற்று ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் அனைவரும் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்போது, ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையும் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், எந்த காரணத்திற்காகவோ முறைப்பாட்டாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சமூக ஊடகங்களின் பாவனை காரணமாக ஆளுமை வளர்ச்சியிலும் பாதிப்பு – எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம் !

இரண்டு வயதுக்குட்பட்ட சிறார்கள் எந்தவிதமான இலத்திரனியல் திரைகளுடனும் நேரத்தை செலவிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர் வைத்தியர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு வயதுக்குட்பட்ட சிறார்கள் இலத்திரனியல் திரைகளில் நேரத்தை செலவிடுவது அவர்களின் அறிவுச்சார் திறன்களின் வளர்ச்சியில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மீதான தாக்கம் அவர்களுக்கு 10 முதல் 12 வயதாகும் போதே தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, இரண்டு வயது முதல் 5 வயது வரையான சிறார்கள், தமது பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலயம் மாத்திரமே இலத்திரனியல் திரையை பயன்படுத்த முடியும். அதேநேரம், பதின்ம வயதுடைய இளைஞர் யுவதிகளின் அதிகரித்த சமூக ஊடகங்களின் பாவனை காரணமாக அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித மூளையின் பின் பகுதியில் உள்ள உணர்ச்சி மூளை எனப்படுவது. உணர்ச்சிகள் தொடர்பான விடயங்கள் விரைவாக வளரும். அவை மனித விருப்பத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன. இதன்காரணமாக, பதின்ம வயதுடையவர்களின் மூளையில் அறிவுசார் திறன்கள் தொடர்பான பகுதிகள் வளர சிறிது தாமதமாகுவதுடன் அதிகரிகத்த சமூக ஊடகங்களின் பாவனையால் அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2023ல் மட்டுமே அதிக கொலைச்சம்பவங்கள் !

இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்கள் குழு அனுமதி.” – முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (26) பிற்பகல் அரச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் இடம்பெற்றது.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“முதலீட்டு சபை கஞ்சா பயிர்செய்கையை ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குகிறது. அதற்கான முதலீட்டாளர்களை தேடி வருகிறோம். சமீபத்தில் வெளியான நிபுணர் குழு அறிக்கையில் முதலீட்டு சபையின் கீழ் முன்னோடி திட்டம் ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் சோதனையை தொடங்குவோம். அதற்கு நாம் ஒரு பகுதியை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் அது ஒரு வலயமாக இருக்ககூடும். அதிக அன்னியச் செலாவணியைக் கொண்டுவரும் சில முதலீட்டாளர்களுடன் இதைத் தொடங்க உத்தேசித்துள்ளோம். அவர்கள் கஞ்சாவை வளர்ப்பது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச தயாரிப்புகளையும் செயலாக்க வேண்டும். அதுதான் நாட்டின் வருமானம். அதை செயற்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஏனெனில் சட்டம் இயற்றப்பட்டவுடன், சர்ச்சைகள் இருக்கக்கூடாது. குழு அறிக்கையின்படி, அதை எப்படி செயற்படுத்துவது என்பது குறித்து எமக்கு அமைச்சரவை பத்திரம் தேவை.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க நாம் தயார் – ரஷ்யா

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் (Levan S. Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா தயார்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு நோக்கி அகதிகளாக செல்லும் இலங்கை தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இலங்கையில் இருந்து மேலும் மூவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தின் மூவரே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகு மூலம் தலைமன்னார் வழியாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையை இவர்கள் சென்றடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தஞ்சமடைந்துள்ள மூவரும் மண்டபம் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.