29

29

“பௌத்த மதத்தை அவமதிப்பவர்களை சட்டம் தண்டிக்காவிட்டால் பௌத்தர்கள் தண்டிப்பார்கள்.” – சரத் வீரசேகர எச்சரிக்கை !

“பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும்.” என ஐக்கிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர்,

“பௌத்த மதத்தை அவமதிப்பதும், பின்னர் மன்னிப்புக்கோருவதும் நாட்டில் வழமையான செயற்பாடொன்றாக மாறியுள்ளது. பௌத்தத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறானவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் பணங்கள் கிடைக்கின்றன, அதுபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் டிக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்றால் பௌத்தர்கள் இவர்களை தண்டிப்பார்கள். பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். பணத்துக்காக பௌத்தத்தை அவமதிப்பவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.” என சரத் வீரசேகர கடுமையாக சாடியுள்ளார்.

இன, மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்கள் மீது சட்டம் பாயுமா..? – மனோ கணேசன் டவீட் !

இன, மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மதத் தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெறக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ மற்றும் சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பௌத்த மார்க்கம் உட்பட ஏனைய மத நம்பிக்கைகளை அவமதித்தார்கள் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாரதிபதி அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் ஆகியோரின் நிழற்படங்களை பகிர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், இனவாதத்தை கக்கும் தேரர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி !

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, கனரக வாகன சாரதி கைதான சம்பவம் இன்று திங்கட்கிழமை (29) மதியம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் நடந்த இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது:

யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் யாழ் நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனமொன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, கனரக வாகன சாரதியை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்தோடு, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதையடுத்து, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கைது!

கொழும்பில் இடம்பெற்ற நடாசா எதிரிசூரியவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை அடையாளம்கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர்.

நடாசாவின் இந்த நிகழ்வில் பௌத்தத்தை அவமதிக்கும்  கருத்துக்கள் வெளியானதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படும் நிலையிலேயே சிஐடியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் சைபர்குற்ற பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரியவை  ஜூன் ஏழாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.இலங்கையிலிருந்து வெளியேற முயன்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரிக்க விசேட பொலிஸ் பிரிவு !

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நாட்டின் பல இடங்களிலிருந்து  இவ்வாறான குழுக்கள் தோன்றி அரசாங்கத்தை  சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயற்படுவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற நாசகார செயல்களை கண்காணித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் சமூகத்தை சென்றடையும் முன்பே தடுக்கும் பொறுப்பு புதிதாக நிறுவப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக புதிய பொலிஸ் பிரிவு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசு அதிகாரிகள் எவ்வாறு கையாள்வது..? – யாழில் கலந்துரையாடல் !

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை(29) பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பொது மக்களின் எதிர்ப்பு போராட்டங்களைக் கையாள்வதில் அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மே மாதம் 12ம் திகதி  கொழும்பில் வெளியிட்டது.

பிராந்திய மட்டத்தில் இவ்வழிகாட்டுதல்களை அறியப்படுத்துவதும் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக்களை பெற்று இவ்வழிகாட்டுதலை மெருகேற்றுவதும்  இக்கலந்துரையாடலின் நோக்கமாக காணப்பட்டது.

துருக்கியில் தொடர்ந்தும் எர்டோகன் ஆட்சி !

துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அதுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக கடந்த 15-ந் திகதி அங்கு தேர்தல் நடந்தது. இதில் எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். இரு தரப்பினரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நேற்று காலை முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் வாக்களித்தனர். அங்கு நீண்ட கால ஆட்சி புரிந்தவர் என்ற நிலையில் எர்டோகன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறாரா? அல்லது ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார், அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.

வட மாகாணத்தில் உணவுப்பாதுகாப்பின்மை உயர் மட்டத்தில் – உணவு விவசாய ஸ்தாபனம்

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின்  அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான  மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களி;ல் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உணவுநுகர்வில்  ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி , நுவரேலியா , மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே  அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.