30

30

பாடசாலையின் கழிவறையில் வைத்து மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – நடன ஆசிரியை மற்றும் அதிபர் கைது !

கலவான – கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் பதில் அதிபர் மற்றும் அதே பாடசாலையில் கடமையாற்றும் நடன ஆசிரியை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மாலை பாடசாலையின் கழிவறையில் வைத்து இரு சிறுவர்களை கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்டுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமைய இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அதே பாடசாலையில் 7ஆம்(12 வயது) தரத்தில் கலவிபயிலும் இரண்டு சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில், குறித்த சிறுவர்கள் பெற்றோருக்கு அறிவித்ததன் பிரகாரம், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கலவானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பதில் அதிபரும், ஆசிரியரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடன் தொல்லை – சிறு வர்த்தகர் ஒருவர் தற்கொலை !

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால் சிறு வர்த்தகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று (29) நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார்; அவர் உயிரை மாய்த்த சமயத்தில் அவரைதேடி வீட்டிற்கு வெளியில் கடன் கொடுத்தவர்கள் சிலர் காத்து நின்றதாகவும், வர்த்தகர் உயிரை மாய்த்ததையறிந்து வீட்டிலிருந்து அழுகுரல்கள் கேட்டதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நழுவிச் சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களின் முன்னரும் கடன்கொடுத்தவர்கள் மரக்காலைக்கு சென்று தலைக்கவசத்தால் வர்த்தகரை தாக்கியுள்ளனர். கடன் தொல்லையால் வர்த்தகர் ஏற்கெனவே ஒருமுறை தனது மரக்காலைக்குள் உயிரை மாய்க்க முயன்றபோது, மரக்காலையில் பணியாற்றியவர்கள் தலையிட்டு அவரை சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸில் முறைப்பாடு !

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் , அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண !

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“இனி எங்களால் போராட முடியுமா? என கூட எமக்குத் தெரியவில்லை” – வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஆதங்கம் !

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி  சர்வதேச நீதியை கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.  உறவுகளை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, சரணடைந்து, கையில் ஒப்படைக்கப்பட்ட, எமது உறவுகளை தேடித்தான் நாம் ஜனநாயக போராட்டத்தை அகிம்சை வழியில் 14 வருடங்களாக தொடர்ச்சியாக வீதியில் நின்று போராடி கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசாங்கமானது, பயங்கரவாத தடை சட்டத்தை எடுப்பதாக கூறி, புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டத்தை அமுல்படுத்த நினைக்கின்றார்கள்.

ஆனால் அதை செய்கின்ற போது எமது ஜனநாயக போராட்டத்திற்கான கருத்து சுதந்திரமோ , தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து போராடுவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமானது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், ஏனையவர்களிடமும் நிறைவேற்றாது நிறுத்த வேண்டும் என்பதனை ஊடக வாயிலாக கேட்டு கொள்கின்றோம்.

இலங்கை தேசத்து மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எந்த ஒரு நீதியும் வழங்காமல் இந்த சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற உறவுகளை தேடி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்ற போது இலங்கை தேசத்தை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.

உறவுகள் இனியாவது மனிதர்களாக வாழ வேண்டும். ஏனையவர்களுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காக நடக்க இருக்கின்ற கூட்ட தொடரிலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றங்கள் இழைத்தவர்களை பாரப்படுத்தி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை நாம் மிகவும் பணிவாக கேட்டு நிற்கின்றோம்.

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள் இருந்தன. தற்போது நீதிமன்ற வழக்குகள் கூட எமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக போராட சர்வதேசம் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

“தூக்கிலிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.”- ஞானசார தேரர்

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு  எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே நாட்டில் இன, மதவாதப் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய மதத்தவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. பாராளுமன்றத்தில் கூட பேசுகிறார்கள். முன்னாள் எம்.பி ஒருவர் என்னை தூக்கிலிட வேண்டுமென்கிறார்.

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் பிரிவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவொரு நல்ல விடயம் எனவும் ஞானசார தேரர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில் மட்டும் 10 பேர் வரை உயிரிழப்பு – யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை !

வீதி விபத்துகளை தடுக்க யாழ். மாவட்டத்தில் நாளை (31) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளசெனரத் தெரிவித்தார்.

யாழ் குடா நாட்டில் அதிகரித்துள்ள விதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் மே மாதம் மாத்திரம் 10இற்கும் மேற்பட்ட வீதி விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ள்ளதோடு வீதி விபத்துகளில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் விசேட நடவடிக்கை ஒன்று நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளைய தினம் முதல் யாழ்ப்பாண குடா நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு இன்றைய தினம் அறிவுறுத்தியுள்ளேன்

அத்தோடு வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடியவாறு மஞ்சள் கடவைக்கு அண்மையில் வாகனங்களை நிறுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துதல், வேகமாக வாகனங்களை செலுத்துதல் தலைக்கவசமின்றி வாகனம் செலுத்துதல் போன்ற பல்வேறுபட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நாளைய தினம் முதல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் 80 வீதமானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியே தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக தலைக்கவசம் அணியாது செல்கின்றார்கள். வேகமாக பயணிக்கின்றார்கள் நகரப்புறங்களிலும் வேகமாக வாகனங்களை செலுத்துகின்றார்கள். வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வாறு வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

எனவே, நாளைய தினம் முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸார் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிபுரிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் மாநகரப் பகுதியில் காங்கேசன்துறை வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளதால் அந்த பகுதிகள் விசேட காவல்துறை அணியினரால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விசேட வேலை திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது

எனவே, பொதுமக்கள் இந்த விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து செயற்படுவதன் மூலம் வீதி விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.