June

June

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் காலதாமதம் – சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் !

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் குழு தீர்மானித்தது.

 

சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ தலதா அத்துகோரள தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

 

2015 முதல் 2020 வரை நடைபெற்ற சிறுவர், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் இறுதி தீர்மானம் எட்டமுடியாமல் போன விடயங்கள் குறித்து மீளவும் கவனம் செலுத்தக் குழு தீர்மானித்தது.

 

பாடசாலை பாடநெறிகளில் சட்டம் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்பது இக்குழுவில் அடையாளம் காணப்பட்டது. இதற்கு அமைய இந்த விவகாரத்தை கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

 

பெண்கள் வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்வதால் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைத்தாலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சமூக பிரச்சினைகளால் மறைமுகமாக அரசுக்கு ஏற்படும் செலவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பாமல், அவர்களுக்கு தொழில்சார் பயிற்சி அளித்து, சிறந்த தொழில் துறைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

 

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டப்பூர்வ பிரச்சினைகள் மற்றும் தூதரகங்களில் உள்ள முறைகேடுகள் காரணமாக உரிய முறையில் தீர்வு காணப்படாத வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான செயல்முறையை ஒழுங்குபடுத்த ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. சில நாடுகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நிலையங்கள் இன்மையினால் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

 

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, உத்திக பிரேமரத்ன, ராஜிகா விக்கிரமசிங்ஹ, மஞ்சுளா திஸாநாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைக்க விசேட குழு நியமனம் !

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பான சட்ட மூலத்தின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரருடன் இணைந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.

 

ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுசுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (01) கூடிய போது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதியால் சட்ட மூலம் தொடர்பில் முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த சட்ட மூலங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்குமாறு ஒன்றியத்தின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே கோரிக்கை விடுத்தார்.

 

அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, கலாநிதி றோஸ் விஜேசேகர, கலாநிதி ரமணி ஜயசுந்தர, கலாநிதி விஜய ஜயதிலக்க, விசேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க மற்றும் உதேனி தெவரப்பெரும ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு – இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை !

ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைவிதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதநிலானி ரத்நாயக்க, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விரைவில் கொள்வனவு செய்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை இவ்வாறு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு,  இவ்வாறு கொள்வனவு செய்யப்படும்  மருந்துகள் விரைவில் சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆரம்ப வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனிடையே நாடளாவிய ரீதியில்  அமைந்துள்ள பல் வைத்திய நிலையங்களுக்கு அவசியமான  மருந்துகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் வி.ஐ.பி வசதியை இரத்து !

தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,அவரின் சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பெற்று சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் கருத்தை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான பணிப்புரைகளை தாம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை நாட்டிற்குள் சுதந்திரமாக கொண்டு வருவதற்கு இனி இடமில்லை.” – மத்திய சுற்றாடல் அதிகார சபை

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருகையில் அதனை உரிய அனுமதியுடன் மாத்திரமே கொண்டுவர தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுங்கத்துறையுடன் இணைந்து இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (ஜூன் 5) கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி தொடர்பான வரம்பற்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நிர்வகிப்பது தொடர்பில் சுங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை நாட்டிற்குள் சுதந்திரமாக கொண்டு வருவதற்கு இனி இடமில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மூலப்பொருட்களை யாரேனும் இலங்கைக்கு இறக்குமதி செய்தால் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றை அகற்றுவதில் திருப்தி இல்லை என்றால், மீண்டும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மலையகத்திற்கு விஜயம் !

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அங்கு மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

இன்று நான் மலையகத்தில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் இடையூறுகள் , சிறந்த வீடு கல்வி தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிவதற்காக அந்த பகுதி  குடும்பங்களைசந்தித்தேன் (இவர்களில் பலருக்கு 200 வருடகாலவரலாற்றை அந்தபகுதியுடன் தொடர்புள்ளது) என ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மகளிர் அமைப்புகளை சேர்ந்த சிறியளவு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தேன், அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சிகள் குறித்து தெரிவித்தார்கள் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு ‘கோல்டன் விசா’ !

இலங்கையின் இளம் பாடகி யோஹானி டி சில்வா துபாயில் ‘கோல்டன் விசா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருது ‘கோல்டன் விசா’ என அழைக்கப்படுகிறது.

யோஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார், மேலும் ‘கோல்டன் விசா’ கலைச் சிறப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அளவில் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகளுக்கு பரீட்சை மண்டபத்தில் பர்தா அணிய மறுப்பு – இம்ரான் மகரூப் விசனம் !

க.பொத. சா/த பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க  தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

பர்தா விவகாரம் : மாணவிகளின் மனநிலையை உளவியல் ரீதியாக புரிந்துகொள்ள  வேண்டும்" - Daily Ceylon

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகளுக்கு பரீட்சை மண்டபத்தில் பர்தா அணிய மறுப்பு தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் மாணவிகள் பலரும்  முறைப்பாடுகள் கையளித்துள்ள  நிலையிலேயே அவர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கும் பரீட்சை முறைகேடுகளை தவிர்ப்பதற்கும் பரீட்சை மண்டபத்திற்குள் பர்தா அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை முறைகேடுகளுக்கு பர்தா ஆடை காரணம் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் முறை குறித்து முன் கூட்டியே தேவையான விளக்கங்களை பரீட்சை திணைக்களம் பாடசாலைகளுக்கு வழங்கி இருந்தால் இந்த தேவையற்ற பிரச்சினைகளை குறைத்திருக்க முடியும்.

தாம் வழக்கமாக அணிந்துவரும் பர்தா ஆடையை திடீரென நீக்கிக்கொள்ளுமாறு பணிக்கும்போது மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், அவர்களால் பரீட்சையை திருப்தியாக எழுதமுடியாமையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, மாணவிகளுக்கு உரிய முறையில் பரீட்சை மண்டபத்தில் தெளிவுபடுத்துவதன் ஊடாக அவர்களின் மனஉளைச்சலை தவிர்க்க முடியும்.

சில பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களும், பரீட்சை தொடர்பான அதிகாரிகளும் முஸ்லிம் விரோதப் போக்கில் செயற்படுவதான குற்றச்சாட்டுக்களும் எம்மிடம் முன் வைக்கப்படுகின்றன. இது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

பர்தாவுக்கான தடையை அனுமதிக்க முடியாது. பரீட்சை மண்டபத்தில் ஏற்படும் இந்த பிரச்சினை தொடர்பில் மாற்றுத் தீர்வொன்றுக்கு செல்லவேண்டியிருக்கிறது.

எனவே, இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகளுடன் அடுத்தவாரம் சந்திப்பொன்றை முன்னெடுக்கவிருக்கிறோம். அதன்பின்னர் இதுவிடயமாக பாராளுமன்றம் ஊடாக சிறந்த தீர்வொன்றை பெற்று மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தொடர்பில் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு !

தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகர் ஜெரொம் பெர்னாண்டோவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை உயர் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் (05) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மனுவில் தலையிட்டு சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.