June

June

ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய யாழப்பாணத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் தேர்தல் !

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகமானது ஒவ்வொரு முறையும் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுகிறது.

Gallery

அந்தவகையில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றையதினம் இடம்பெற்று வருகிறது.

இந்த தேர்தலானது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் இடம்பெறுகின்றன.

 

Gallery

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயராஜ்(அமெரிக்கா), கலாநிதி வாணி செல்வராஜ்(கனடா), கலாநிதி காருண்யன் அருளானந்தம்(அமெரிக்கா) உள்ளிட்டவர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம்பெத் வான், தேசிய பாதுகாப்பு சபையின் இலங்கை,  நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பணிப்பாளர், செனட் அலுவலகத்தின் வெளி விவகார குழுவின் சிரேஷ்ட பணிப்பாளர், உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.

இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் மேற்கண்டவாறு உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடயம் சம்பந்தமாக அமெரிக்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கால எல்லை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்கான சர்வதேசத்தின் கரிசனை தொடர்ச்சியாக இருக்குமா என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவை பொறுத்தவரையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்கான அர்ப்பணிப்பான பங்களிப்பை அளிக்கின்றது.

அதன் பிரகாரம், இலங்கையின் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கை செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன், இலங்கையில் தற்போது அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. இந்த குழப்பான சூழலை ஒரு எதிர்மறையான விடயமாக கருதாமல் அமெரிக்கா அனைத்து இன மக்கள் மத்தியிலும் மேற்கொண்டுள்ள உரையாடல்களின் அடிப்படையில் தற்போதைய சூழலை, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு எவ்வாறு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் வெவ்வேறு இனங்களைக் கொண்ட இலங்கையின் பிரஜைகள் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்துள்ளமையை அடையாளம் காண்பதற்கு முடிந்துள்ளது.

இதேநேரம், தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்துக்கு பிரதான இடத்தினை கொண்டுள்ளார்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தேசிய இனப் பிரச்சினையின் மைய விடயமான அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இருப்பினும், இந்தியா தொடர்ச்சியாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பிரதான விடயங்களில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளை பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இம்முறை வழமைக்கு மாறாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் அழைப்பின் பேரில் நாம் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்றிருந்தோம்.

அச்சந்திப்புக்களின்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியான மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவாக வெளிப்படுத்தினோம்.

உள்நாட்டு யுத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதித்தது.

இருதரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

2006ஆம் ஆண்டு துணைச் செயலாளராக இருந்த ரிச்சட் பௌச்சரும், 2015இல் இராஜாங்க செயலாளராக இருந்த ஜோன் ஹரியும் மட்டுமே அதிகாரப்பகிர்வு விடயத்தினை பற்றி அழுத்தங்களை பிரயோகித்தனர்.

இந்நிலையில், இந்தியாவைப் போன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

புலம்பெயர் மக்கள், ஏனைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பொருளாதார ஆதரவைப் பெறுவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வினை காண்பது முக்கியமானதாகும்.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னரும் இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் நிலைநிறுத்துதல், சர்வதேச சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா பிரதமரின் உருவ பொம்மைகளை எரித்து வவுனியாவில் போராட்டம் !

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள –  தமிழ் – மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று (24.06.2023) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கனடா

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் , ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா , படுகொலை எங்கே நடந்தது.? ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம் , எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும் இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள் , கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இவ் போராட்டத்தில் தமிழ் , முஸ்ஸிம் , சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

காதலை ஏற்க மறுத்த திருமணமான பெண் மீது வன்புணர்வு – திருகோணமலையில் சம்பவம்!

காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது !

தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் 31 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று காலை வாகனத்தில் சென்ற போது வெல்லம்பிட்டியவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகும் போது அவரிடமிருந்து 350 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்களிடையே அதிகரிக்கும் செல்வாக்கு – பொதுசன வாக்கெடுப்புக்கு தயாராகும் ரணில் தரப்பு !

ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லாது பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசீலித்து வருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பில் அரச தரப்புக்குள் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், மேலதிக ஆலோசனைக்காக 10 பேரடங்கிய நிபுணர் குழுவொன்று அமைக்கப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

செலவு கட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களைக் கருத்தில்கொண்டே ஜனாதிபதி இவ்வாறு சிந்தித்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.

மக்கள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையிலேயே, தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கின்றார்.

எனினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமி துஷ்பிரயோக வழக்கில் கைதான நபர் தூக்கிட்டு தற்கொலை!

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

48 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் சகோதரருடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்கூடத்திற்குள் அடைக்கப்பட்ட சந்தேகநபர், இன்று (24) அதிகாலை தூக்கிட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

66 வயது தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்ட காலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது விடுதலைப்புகளின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய குற்றசாட்டில் கைதாகினர்.

இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாசன் தன்னை விடுவிக்குமாறு கோரியும், தனது வழக்கிற்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் பல உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.

அதேவேளை, தனக்காக தானே சில வழக்கு தவணைகளில் வாதாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் !

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார்.

 

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

 

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் “காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்” தொடர்பிலும் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

 

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ,கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

 

அதேநேரம் “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி நேற்று(23) கலந்துகொண்டார்.

 

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் அவர்களின் தலைமையில் இரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பமாகியிருந்ததோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன பிரதமர் லீ கியாங், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ், உலக வங்கியின் பிரதானி அஜய் பெங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா, ஆகியோரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், வெளிநாடுகளின் அமைச்சர்கள் உள்ளடங்களான பிரதிநிதிகள், நிதிசார் பிரதானிகள் மற்றும் காலநிலை அலுவல்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

“ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் அதன் மீதான நம்பிக்கை போகிறது.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வரும் தமக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே ஐ.நா சபை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டடார்.

நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தை கொண்டுவந்து இழப்பீடு தருவதாக கூறப்பட்டுள்ளதே தவிர இதுவரை குறித்த அலுவலகத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை ஏறும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றாலும் அவர்கள் தம்மை திரும்பி பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு உள்ளமை வேதனையை தருவதாகவும் அவர் குறிப்பிட்டடார்.