இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதக் குறைப்பின் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளதால், உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் (LCBs) வணிகங்களுக்கான கடன் வட்டி வீதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மதியவங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று (01) மதியவங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை அறிவிப்பதற்காக கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
நாணய மதிப்பு அதிகரிப்பு, எரிபொருளின் விலை போன்றவற்றால் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னேற்றமடைந்த இலக்கு வரம்பை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி பண நிலைமைகளைத் தளர்த்துவதற்கான தீர்மானத்திற்கு வந்ததுடன், கொள்கை வீதங்களில் வலுவான சீர்திருத்தத்தை மேற்கொண்டது எனவும் தெரிவித்தார்.
”மத்திய வங்கியானது கடந்த மூன்று வருடங்களின் பின்னர் முதன்முறையாக வட்டி வீதங்களைக் குறைத்து, நிலையான கடன் வசதி வீதம் (SLFR) மற்றும் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) என்பன முறையே 14.00 வீதம் மற்றும் 13.00 வீதமாகக் குறைத்துள்ளது.
பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைதல், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக குறைதல் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை மேலும் நிலைப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஏற்ப பண நிலைமைகளை எளிதாக்கும் முயற்சியில் புதன்கிழமை (மே 31) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய வங்கி இந்த வருடத்தில் இதுவரை நிகர அடிப்படையில் 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்துள்ளது.
அதேவேளையில் மே மாதத்தில் மாத்திரம் 662 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க முடியும் என்றும் மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த வருடம் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது.” என தெரிவித்தார்.