02

02

இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடவுச்சீட்டு – அறிமுகமாகிறது புதிய திட்டம் !

ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

 

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி வரும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 19 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

இந்தநிலையில், ஒருநாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எரிக்கப்பட்ட யாழ்.நூலகமும் – எரியூட்டப்பட்ட திகதி தெரியாத தமிழர்களும் !

மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்:

 

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

இக்கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே உள்ள Link ஐ Click செய்யுங்கள்..;

 

 

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது !

யாழ். நகரில் அண்மையில் இரவு வேளை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடை பூட்டியதன் காரணமாக உரிமையாளர் தர மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொண்டதாக கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

“மதங்களை அவமரியாதை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பல்வேறு முரண்பாடுகளுக்கு அடிப்படையான அறிக்கைகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் மதங்களை அவமதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை தொடர்பில் வெட்கப்படுகிறேன்.” – யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன்

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கல்வி வலய சங்காணை மேற்கு பிரதேசத்திலே சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் வேர்ல்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று(02) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் உரையாற்றுகையில்,

“கல்வியில் முதலிடத்திலிருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

 

மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. பிள்ளை தனது பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை.

இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர். இது குறித்து பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் மாத்திரமின்றி சட்ட விரோத போதைப் பொருள் பாவனை சார்ந்த முறைப்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனைவரும் இது குறித்த விடயங்களில் அவதானமாக செயற்படுங்கள்.

எமது மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த மாவட்டத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அபிவிருத்தி சார் நடவடிக்கைகள், சமூகம் சார் பிரச்சினைகள் சம்பந்தமாக தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்ட படியே இருக்கின்றேன்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பல கலந்துரையாடல்களையும் சமூக பிரச்சினைகளைத் தடுப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் என்பது அதிகரித்ததொன்றாகவும் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய பிரச்சினையாகவும் காணப்படும் அதேவேளை அதனை அலட்சியப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி.” -கனகரட்னம் சுகாஷ்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடக்கும் பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அரசியல் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

 

குறித்த சந்திப்பு தொடர்பில், பரீட்சை மண்டபத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் சிலர் ஒன்று கூடியுள்ளதாக காவல்துறை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் சென்று இருந்தனர்.

அவர்களது கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சென்றவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலானய்வு உத்தியோகத்தர்களிடம் அடையாள அட்டையைக் கோரி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய, அவரிடம் தனது அடையாள அட்டையை காண்பிக்க முயன்ற வேளை, அங்கிருந்த நபர்கள் புலனாய்வு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதனை அடுத்து, அவருடன் கூடச் சென்ற மற்றைய புலனாய்வு உத்தியோகத்தரை மடக்கிப் பிடித்து சில மணி நேரம் வைத்திருந்த பின்னர் , மருதங்கேணி காவல் நிலையத்தில் உத்தியோகத்தரை கையளித்துள்ளனர்.

அதேவேளை, பரீட்சை மண்டபத்திற்கு அருகில் அரசியல் கூட்டம் நடத்தியமை மற்றும் காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தரை தாக்கியமை , அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்டவை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயார் ஆகி வருவதாக காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

“மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்ய வேண்டும்.” முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது.

மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியற் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வாறான வெறுப்புப் பிரசாரங்களின் ஊடாக அரசியல் செய்யும் கலாசாரத்தை நாட்டிலிருந்து இல்லாது செய்ய முடியும்.

 

வெறுப்புப் பிரசாரங்களை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அடிப்படைவாதிகளால் நிதி அனுப்பப்படுகிறது.

 

இதனைக் கண்டறிந்து முதலில் அரசாங்கம் நிறுத்த வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கண்டறிய வேண்டும்.

நல்லிணக்கம், ஜனநாயகம், மனிதாபிமானத்தை உறுதிப்படுத்தினாலேயே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.