04

04

“ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.” – அமெரிக்க தரப்பிடம் சீனா எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ இராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க கூடாது: சீனா  எச்சரிக்கை | Tamil News China warns NATO-like alliances could lead to  conflict in Asia-Pacific

இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கூறும்போது,

ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.

இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும். இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளின் மக்களும் இரண்டு உலக போர்கள் கொண்டு வந்த கடுமையான பேரழிவுகளை மறந்து விடக்கூடாது. இது போன்ற சோகமான வரலாறு மீண்டும் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார். தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டவரைபானது தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்யவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்களின் விளைவாகத் தமது அன்புக்குரியவர்களை இழந்த சிறுபான்மையின தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிக்கட்டப்போரின்போது வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோர் உள்ளடங்கலாகப் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்தும் அதேவேளை, தமக்குரிய நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும்மேல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டதையொத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும் அடிமட்டத்தில் எதுவுமே நிகழவில்லை. மேலும் அவர்கள் சில புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யாருடனும் கலந்துரையாடாமல் இருக்கின்றார்கள்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டவரைபொன்றை முன்வைத்த அவர்கள், அதுகுறித்து அபிப்பிராயம் கூறுமாறு என்னிடம் கேட்டார்கள்.

இருப்பினும் அதுபற்றிக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதில் பொறுப்புக்கூறல் குறித்தோ அல்லது மன்னிப்பு அளித்தல் குறித்தோ எதுவும் இல்லை.

மேலும் காணாமல்போனோரின் உறவினர்களில் பெருமளவானோர் இதுவரையான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 15 ஆணைக்குழுக்களின் முன்னிலையில் ஆஜராகி, தமது உறவுகள் குறித்து சாட்சியமளித்திருக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் அதில் முன்னேற்றங்கள் எவையுமில்லை. பரணகம ஆணைக்குழுவில் முன்னிலையானவர்களே மீண்டும் மீண்டும் அழைக்கப்படுகின்றார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது !

பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனனர்.

மேலும் குறித்த மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

“பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக செயற்பாடுகள் விரைவில்..” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி மாநாடு இன்று (04) நிறைவடையவுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம் என்றும் அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அறிவுருத்தினார்.

தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும், மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன, இந்த மாநாட்டின் வாயிலாக நீதித் துறையினர், கொள்கை தயாரிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வியாபாரத் துறையினர் மத்தியிலான கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அத்தோடு ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம். மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர், சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து 75 வருடங்களின் பின்னர் அபிவிருத்தி அடைந்த இலங்கை தொடர்பிலான எதிர்பார்ப்புகள் தற்போது முதல் முறையாக ஏற்பட்டுள்ளதென தெரிவித்த தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பைசர் முஸ்தபா யுத்தம் மற்றும் தவறான பொருளாதார கொள்கைகள் என்பனவே பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

அதனால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்க சகலரும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த ஜயவர்தன, இந்நாட்டின் பொருளாதாரத்தைப பலப்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கணகேஸ்வரன், பைசர் முஸ்தபா மற்றும் சந்தக ஜயசுந்தர உள்ளிட்டோர் மேற்படி முக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டனர்.

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் ,உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இந்நாட்டு சட்டத்துறையின் முக்கியஸ்தர்களும் வியாபார நிறுவனங்களின் உயர் முகாமைத்துவ குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் கருணா அம்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை !

33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினாலேயே குறித்த குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இக்காவல்துறையினரின் கொலையை கருணா தான் செய்ததாக பெங்களுரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலாவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜூன் 11, 1990 அன்று நடந்த இக்கொலை சம்பவம் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பதும், படுகொலையில் இரண்டு காவலர்கள் மட்டுமே உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட முயற்சி ..? – அறிக்கையை கோரும் பொது பாதுகாப்பு அமைச்சு !

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை (திங்கடகிழமை) நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக காணொளிகள் வெளியாகி இருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமாச்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தில் !

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது,.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்கள் உட்பட 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்துள்ளது.

16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் குற்றவாளிகள் தொடர்பில் அரசாங்கம் வெளியட்டுள்ள அறிவிப்பு !

சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சிறுவர் குற்றவாளிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஜெனீவா குழு இலங்கைக்கு வழங்கிய பரிந்துரைகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் புதிய திருத்தங்களுக்கமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

தற்போது சிறைச்சாலையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நீதி அமைச்சுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 37 பேர், சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர்  பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

“தமிழ்த்தலைவர்களே புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்.” – அமைச்சர் அலி சப்ரி !

“ தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்.” என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண்பதற்கு தற்போது அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வீரகேசரியிடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  பொறுத்தவரையில் அவர் முற்போக்கான ஒரு தலைவர். அவருடைய காலத்தில் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை காண்பதற்கு மிகவும் அரிதான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த சக்திகளுக்கு மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. அவர்கள் இலங்கையில் நிரந்தரமானதொரு தீர்வினை எட்டுவதற்கு இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்பது பல செயற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் அவர்களது வகிபாகத்தினை தக்க வைத்துக்கொள்வதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளை எமது நாட்டிலும் தமிழ் தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தலைவர்கள் சிக்கிக்கொள்வதால் தமிழ் இளையோரின் எதிர்காலமே பாதிக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அத்தலைவர்களால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர்களுக்கு எதிராக இளைஞர்கள் மாறியதுடன், அவர்கள் தலைவர்களால் செய்ய முடியாததை தாம் ஆயுத வழியில் நிகழ்த்திக் காண்பிப்போம் என்று புறப்பட்டார்கள்.

இந்தத் தீர்மானம் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சிதைத்துவிட்டது. அதிலும், தமிழ் மக்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் மிகவும் மோசமாக பாதித்துவிட்டது.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தினை பொறுத்தவரையில்  பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, படிப்படியாக விடயங்கள் தீர்க்கப்படுவதற்கே நாமும் செயற்படுகின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,  அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. எஞ்சிய சொற்ப அளவிலானவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் உள்ளிட்டவை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையானது அனைத்து சமூகங்களுக்குமானதாக உள்ளது. ஆகவே, அந்த விடயமும் உரிய அணுகுமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

முன்னதாக, நான் நீதியமைச்சராக கடமையாற்றியபோது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனினும், அதற்கு சிறிய குழுவினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

அதேநேரம், மாற்றுத்திறனாளிகளாக உள்ள முன்னாள் போராளிகளுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவையாக உள்ளன. அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற பகுதியளவிலான உதவிகளை பெற்று, வாழ்க்கையை முன்னகர்த்துபவர்களும் உள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக நான்கு விண்ணப்பங்கள் !

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க, நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவரும், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்கின்ற – பதவிக்கால நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கின்ற பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் அதே பதவிக்காக விண்ணப்பித்துள்ளார்.

அவரை தவிர, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் இருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோரே ஆவர்.

அத்துடன், கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா விண்ணப்பித்துள்ளார்.

தற்போதைய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனால், புதிய துணைவேந்தரை நியமிக்கும் நோக்கில் பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்திருந்தது.

அறிவிக்கப்பட்டிருந்த இந்த கால இடைவெளியிலேயே இந்த நான்கு விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தின் முற்பகுதியில் நடத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையிலேயே தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்புள்ளிகளின் அடிப்படையில்  முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதனையடுத்து, பல்கலைக்கழக சட்டத்தின்படி, ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை தெரிவுசெய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக  துணைவேந்தராக ஜனாதிபதி நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.