07

07

“ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை யோசித்துப்பாருங்கள்” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த செயற்பாடு மிகவும் தவறான ஒன்றாகும். ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேர்ந்த ஒரு இடையூறான செயற்பாடாகவே இது கருதப்படுகிறது.

நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து, உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாவதாக அவர் கூறிய நிலையிலேயே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கொலை குற்றத்திற்காக நீதிமன்றில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்த சிவநேசத்துறை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சிறையில் இருக்கும்போதுகூட வருகைத் தந்தார்.

இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று நாடாளுமன்றுக்கு வருகை தருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியை நீதிமன்றம் விசாரிக்கட்டும். எனினும், கட்சி பேதம் பாராமல் அவரது சிறப்புரிமை மீறப்பட்டமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரைப் பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்துமாறுக் கூறுவது நியாயமான ஒன்றாகும். ஏனெனில், அவரது தந்தையார் இரண்டு பொலிஸாரினால்தான் கொழும்பில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

எனவே, தன்னை பின் தொடர்ந்து பொலிஸார் வருவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சந்தேகம் எழுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அத்தோடு, இன்று நாடாளுமன்றுக்கு வருகைத்தந்து உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சபாநாயகர் அறிவித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் இன்று இதுதொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், ஏனைய உறுப்பினர்களும் இதற்கெதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும்.

நாம் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் நாடாளுமன்றில் தாக்குதல் நடத்தினார்கள். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மீது தண்ணீர் போத்தல்களினாலும், புத்தகங்களினாலும் தாக்குதல் நடத்தினார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வில் சில்வா, அரச அதிகாரியொருவரை மரத்தில் கட்டி வைத்தார். இவையணைத்துக்கும் காணொளி ஆதாரங்கள்கூட இவற்றுக்கெதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன?

ஏன், கடந்தாண்டு மே 9 ஆம் திகதி பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் மஞ்சள் நிற டி சேட் அணிந்து வந்த நபர் ஒருவர், போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தினார். இவர் கைது செய்யப்பட்டரா?

அத்தோடு, வெறுப்பு பிரசாரம் குறித்து இன்று சமூக செயற்பாட்டாளர் புருனோ திவாகர கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையான வெறுப்புப் பிரசாரத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால், அன்று மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து ஆற்றிய உரையைப் பாருங்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்காக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரைக்கூட பயன்படுத்தாத ஒருவர். ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள்.

இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நேர்ந்த நிலைமையை பார்த்தால், நாட்டுக்கு எவ்வாறு முதலீட்டளார்கள் வருவார்கள்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக கணினி செயலிகள் விரைவில் !

இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில்  குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் 01 ஆம் இலக்க குழு அறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பி கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி இங்கு முன்மொழிந்தார்.

குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமனம், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்காக ஹர்ஷ டி சில்வாவின் பெயரும் வேறு சில உறுப்பினர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன. மயந்த திசாநாயக்க எம்.பி தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் எதிர்க்கட்சிகள் முன்மொழிவதாக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அரச நிதிக்குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். ஐஎம்எப் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் அதற்கமைய எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.

குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் விதிகள் குறித்து அந்தக் குழுக் கூட்டங்களில் எம்.பி.க்கள் கூடி முடிவு எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் குழுக் கூட்டத்திற்கு இடமில்லை என்றால் எமக்கு வேறு கட்டிடம் ஒன்றை பெறமுடியும். இதில் பங்கேற்பவர்களுக்கு தனியான கொடுப்பனவு செலுத்த முடியும். பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் முன்னர் குழுக்களில் குறைந்தது ஒரு வாரமாவது ஆராய்ந்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுடன் முன்வைக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நாளை சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை இன்று எம்.பி.க்களிடம் கொடுத்தால் பயனில்லை. அதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது எம்.பி.க்களுக்கு அவகாசம் கொடுப்பது உகந்தது.

உலக வங்கி உதவியின் கீழ் இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ நிதி பெறப்பட்டுள்ளது. அதைத் தொடர உங்கள் உதவி தேவை. குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் பொறுப்புகளை குழுவில் கூடி முடிவு செய்து வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் உள்ளூராட்சி சபை மட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் (DRO) இருந்தனர். இந்தியாவில் வசூல் செய்யும் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் இலங்கையில் பிரதேச செயலகங்கள் விரிவடைந்ததும் மாவட்ட வருவாய் உத்தியோகத்தர்கள் காணாமல் போனார்கள்.

அதற்காக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிகாரிகள், அரசுக்கு வருவாயை வசூலிக்காமல், அரசின் பணத்தை செலவழித்தனர். எனவே, வருவாய் வசூலிக்க, குறைந்தபட்சம் இருநூறு மாவட்ட வருவாய் அலுவலர்களையாவது அரசாங்கம் நியமிக்க நேரிடும்.

மேலும், இதுவரை அரசு நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான கணினி செயலிகளை உருவாக்குவது தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்டது. அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான டிஜிட்டல் மேம்பாட்டு முகவர் நிறுவனம் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்படி, எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கான கணினி செயலிகள் யாவும் அந்த நிறுவனங்களினால் உருவாக்கப்படும். மேலும், பட்ஜெட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், அரசின் பணம் எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தி போராடிய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நுகேகொட – விஜேராம சந்திக்கு அருகில் இவ்வாறு பொலிஸாரால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனக் குறிப்பிட்டு கோட்டை , கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பல இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் , ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் , ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை , நிதி அமைச்சு , காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் , பொது மக்களை தூண்டும் வகையில் வன்முறை சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் , வாழ்க்கை செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் , பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பவற்றை மீளப் பெறுமாறும் வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ததற்காக பொலிசாருக்கு மரியாதை செலுத்துகின்றோம்.” – உதய கம்மன்பில

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ததற்காக பொலிசாருக்கு மரியாதை செலுத்துகின்றோம்.” என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பொலிசாரின் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ததாக நல்ல செய்தி கிடைத்துள்ளது.

இதற்காக எமது காவல்துறைக்கு மரியாதை செலுத்துகின்றோம்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், தாம் நீதித்துறைக்கு மேல் உள்ளதாக அது வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது அப்படி இல்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்மூலம் நாம் நினைவுபடுத்துகிறோம். முக்கியமாக கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகிய பின் காவல்துறைக்கும், இராணுவத்திற்கும் இடையூறு விளைவித்தது இது முதல் தடவை அல்ல.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வுகளைச் செய்யும் இடங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவங்களை பல தடவை நாம் கண்டுள்ளோம்.

தாம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இடையூறு விளைவிக்க அதிகாரம் இருக்கிறது என அவர் நினைக்கிறார். அது அப்படி இல்லை என ஞாபகப்படுத்த செய்யப்பட்ட இந்த கைது மூலம் காவல்துறையினருக்கு முதுகெலும்பு இருப்பதைக் கண்டு சந்தோஷமடைகிறோம்.

மேலும் காவல்துறை அதிகாரம் தொடர்பாக குறிப்பிடுகையில், கஜேந்திரகுமார் காவல்துறை அதிகாரம் மாகாண சபைக்கு கிடைக்க வேண்டும் என முதன்மையாக கருத்து தெரிவித்தவராவார்.

அவ்வாறு கிடைத்து இருந்தால், உதாரணமாக இச் சம்பவம் நிகழும் போது விக்னேஸ்வன் அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் கஜேந்திரகுமார் முதலமைச்சரை தொடர்புகொண்டு அவர் மூலம் காவல்துறை அதிகாரிகளை கீழ்படிந்து செல்லுமாறு பணித்து இருப்பார்.” என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்திலும் பல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கஜேந்திரகுமாரின் கைதை நியாயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலை !

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றக்கு அழைத்து செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதே நேரம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  அவரை விடுவிக்க கோரி இன்றையதினம்(07.06.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், வாய்களில் கருப்பு துணிகளை கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட தேரருக்கு தேரரின் விளக்கமறியல் நீடிப்பு !

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை  பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது – சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது.

தன்மீதான தாக்குதல்  தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதே நேரம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தங்கள் கடமைகளை செய்வதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.