10

10

“இரா.சம்பந்தன் அவதானமாக உள்ளதால் ரணில் விக்கிரமசிங்க அரசால் தமிழர்களை ஏமாற்ற முடியாது.” – சந்திரிகா குமாரதுங்க

தமிழ் மக்களின் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முனைந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்தக் கலந்துரையாடல் தோல்வியிலேயே நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது என்றும் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள் என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் !

2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

மே மாதத்தில் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 2022 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 175 மில்லியன் டொலர்கள் அதிகம் என்றும் 2022 மே மாதத்தில் இலங்கைக்கு 304.1 மில்லியன் டொலர் கிடைத்ததாகவும் அறிவித்துள்ளது,

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான மொத்தம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து 33 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம் !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக ஜே/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில், அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

.

ஐ.எம்.எப் 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகளே பூர்த்தி !

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளது.

மேலும் பந்தயம் மற்றும் கலால் வரிகளை அதிகரிப்பது ஆகிய இரண்டு உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணைய முறையை உருவாக்குவது என்ற உறுதிப்பாடும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு ஒரு சாபக்கேடு .” – பொன்.ஐங்கரநேசன்

“விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு ஒரு சாபக்கேடு என்று தான், நான் அவருடன் பயணிப்பதை நிறுத்தி கொண்டேன்” என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

“விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்ற போது பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் நான் அவரை வரவேற்றேன். அப்போது அவரிடம் ஒரு ஜனோவசியம் இருந்தது. ஆனால் இன்று அவர் அத்தனை பிற்போக்குதனங்களும் கொண்ட ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் நான் அதை உணரவில்லை என்றாலும் பின்னர் உணர்ந்துகொண்டேன்.

அதிலொன்று தான் விக்னேஸ்வரனின் மின்னஞ்சல் விவகாரம். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றது என்ற சந்தர்பத்தில் 2019 ஆம் ஆண்டளவில் இந்த சம்பவம் நடந்தது.

அதிலிருந்து தெரிந்துகொண்டேன்,விக்னேஸ்வரன் பிற்போக்குதனமான எண்ணம் கொண்டவர். அவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் போது அவர் இன நலன்களை பேணும் வகையில் செயற்பட வேண்டுமே தவிர சுயநலன் கருதி பேசக்கூடாது.

எனவே விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு ஒரு சாபகேடு என்று,நான் அவருடன் பயணிப்பதை நிறுத்தி கொண்டேன்.”என தெரிவித்துள்ளார்.

முன்னதாக “தென்மராட்சியைச் சேர்ந்த அருந்தவபாலனின் சாதியைக் குறிப்பிட்டதுடன், நீங்கள் என்ன சாதியெனக் குறிப்பிட முடியுமா என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.” என்ற சர்ச்சையான கருத்தை பொன்.ஐங்கரநேசன் வெளியிட்டிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

“விடுதலைப்புலிகளுக்கு அடிபணியாதோர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.” – அமைச்சர் அலிசப்ரி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார்.

ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார்.

அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது,

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியில் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு  அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.

விடுதலைபுலிகளை பல்வேறுகாலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும்  ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்துள்ளனர்இஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்ட சரியாக சிந்திக்கும் அனைவரும் ஆனந்தசங்கரியின் அர்ப்பணிப்பையும் துணிவையும் பாராட்டியுள்ளனர் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

20 வீதத்தினால் குறைகிறது மொபைல் போன்களின் விலை – வெளியாகியுள்ள அறிவிப்பு !

மொபைல் போன்களின் விலைகளை 20 வீதத்தினால் குறைப்பதற்கு மொபைல் போன் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை நாணயத்தின் டொலருக்கு எதிரான தற்போதைய நிலையை கருத்தில்கொண்டே மொபைல் போன் விற்பனையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

டொலர் அதிகரிப்பு காரணமாக மொபைல் போன் கொள்வனவு 40 வீதத்தினால் குறைவடைந்தது என சங்கத்தின் செயலாளர் சர்மித் செனெரத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு பதிலாக மக்கள் பழைய மொபைல் போன்களை திருத்தி பயன்படுத்தினர். எனினும், இலங்கை ரூபாயில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால் மொபைல் போன்களை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டொலர் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் மொபைல் போன்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம்.

மொபைல் போன்களை இலங்கையில் எவரும் தயாரிப்பதில்லை என்பதால் இந்தியாவையும் சிங்கப்பூரையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது என்றார்.