13

13

அதானி குழுமத்தின் முதலீட்டில் கௌதாரிமுனையில் காற்றாலை திட்டம் – அபிவிருத்திக்குழு தொடரும் குழப்பம் !

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

கெளதாரிமுனை காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விடேச கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் – ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அதானி குழுமத்தின் முதலீட்டில் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழு இரண்டு கூட்டங்களில் குறித்த நிலையத்தின் நன்மை தீமைகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்ட பின்னர் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தின் முதல் பகுதி கூட்டம் குறித்த விடயத்தை உள்ளடக்கி இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து முரண்பாட்டினால் இடை நிறுத்தப்பட்டு இனிவரும் காலங்களில்  இடம்பெறுகின்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ். சிறீதரன், அங்கஜன் இராமநாதன், அதானி குழுமத்தின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 7 இலங்கையர்கள் !

இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள நபர்களின் வரிசையில் 7 இலங்கையர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச காவல்துறையின் சிவப்பு பட்டியல் வரிசையில் மொத்தமாக 6872 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தேடப்பட்டு வரும் பட்டியலில் நான்கு இலங்கையர்கள் இலங்கையில் தேடப்பட்டு வருவதாகவும், மூன்று இலங்கையர்கள் வெளிநாடுகளில் இழைத்த குற்றச்செயல்களுக்காக அந்தந்த நாடுகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இன்டர்போல் சிவப்பு பட்டியல் என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒருவரைக் கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்ய உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.

இதனடிப்படையில், இன்டர்போல் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேடப்படும் நால்வர் கொஸ்கொட சுஜீ என்ற 38, நடராஜா சிவராஜா, 49, முனிசாமி தர்மசீலன், 50, மற்றும் விக்னராசா செல்வந்தன், 35 ஆகிய நால்வராவர்.

கொலை வழக்கு தொடர்பில் கொஸ்கொட சுஜீக்கும், மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் கதிரகாமரின் கொலைக்கு உதவிய நடராஜா சிவராஜாவுக்கும் இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மசீலன் இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளை வைத்திருந்ததற்காக தேடப்பட்டு வரும் நிலையில், செல்வந்தன் மீது திருட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மற்ற மூன்று இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இன்டர்போல் கண்டுபிடித்து வருகிறது.

அதன்படி, நவநீதன் கொலைச் சம்பவம் தொடர்பில் ருமேனியாவினால் தேடப்படும் வவுனியாவைச் சேர்ந்த குமாரசாமி, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் இந்தியாவினால் தேடப்படும் அலபொடகமவைச் சேர்ந்த 61 வயதான மொஹமட் பௌமி, கனடாவால் தேடப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் விஜயராஜா (41) ஆகியோர்களே தேடப்படுகின்றார்கள்.

இதேவேளை, மேலும் ஐந்து இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் மஞ்சள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

காணாமல் போனவர்கள், பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிவதற்கு அல்லது தங்களை அடையாளம் காண முடியாத நபர்களை அடையாளம் காண்பதற்கு மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

வவுனியாவில் 250 ஏக்கர் காணி சிங்கள மக்களால் அபகரிப்பு !

வவுனியா வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 250 ஏக்கர் காணி சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “1994 ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால் தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.

ஆனால் ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 வீதமான காணிகள் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பெரும்பாண்மையின சிங்கள மக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.

இதேவேளை, எமது மதுராக நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறுதுண்டு காணியினைக் கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்ட செயலக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 250 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். எனவே வீரபுரம் மக்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படவேண்டும்” – என்றார்.

“தமிழ் பௌத்த வரலாற்றுக்கு உரிய இடம் வழங்கப்பட்டால் அநேக பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.” – மனோ கணேசன்

இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

Thinakkural.lk

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார். அதன்போது இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள். அந்த விஜயன் வந்த இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் வாபஸ் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன்.  இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில்  இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போட்டு கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.” என அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் பல யாழ்ப்பாணம் , திருகோணமலை என பல இடங்களிலும் கிடைத்துள்ளதை பேராசிரியர்கள் பலரும் எடுத்துக்காட்டியுள்ள போதிலம் கூட தமிழ்தேசியவாதிகள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில் தொடர்ச்சியாக தயக்கம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

159 வருட பழமையான பாண் கட்டளைச்சட்டத்தை இரத்துச்செய்ய தீர்மானம் !

பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தல் மற்றும் விற்பனை செய்யப்படும் பாண்களுக்கு பழுதடைந்த மாவு கலக்கப்படுவதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது குறித்த கட்டளைச் சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகளுடன் பிரச்சினைகள் எழுகின்ற சந்தர்ப்பங்கள் இருப்பதால்;, குறித்த கட்டளைச் சட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நான்கு மாதங்களுக்குள் 8000க்கும் அதிகமான விபத்துகள் – 700க்கும் அதிகமான மரணங்கள்!

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளனா்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா்.

இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது குறித்து மேலும் கருத்து தொிவித்த அவா், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன.

குறிப்பாக 667 போ் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிாிழந்தனா்.

அத்துடன் மொத்தமாக 709 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,160 பாாிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் 3,201 சிறு விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக உயிாிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனா்களே அதிகளவில் அடங்கியுள்ளனா்.

 

உயிாிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவா்.

 

அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனா். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டாா் சைக்கிள்களால் ஏற்படுகின்றன.

 

இரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படுகின்றன.

 

இதனால் வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தொியவந்துள்ளது.

 

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளாா்.

தனியார் மயமாக்கப்படுகிறது இலங்கை ரயில் சேவை..?

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு என ஏற்படும் பாரிய செலவீனங்கள், திறமையின்மை மற்றும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்க இயலாமை என்பன திணைக்களத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றம் செய்யபடாவிடின் ரயில்வே துறை தனியார் மயமாக்குவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களை நசுக்கும் வகையில் புதிய சட்டமூலம் – அனுரகுமார திஸாநாயக்க எதிர்ப்பு !

ஊடகங்களை நசுக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்

அந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நாட்டில் தேர்தல்களை பிற்போடுவதன் மூலம் ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்” அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.