22

22

“புலிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கொடுத்தவருக்கு டெலிகொம் நிறுவனத்தை விற்க இலங்கை அரசாங்கம் முயற்சி.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே டெலிகொம் நிறுவனத்தை விற்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம் என்றால் இன்று சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், “இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மக்கள் உணவு, பானங்கள் இன்றி தவித்து வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.

பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்து மக்களை அடக்க முயற்சிக்கிறது. அதனைக் கொண்டு ஊடகங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்பதோடு, ஊழல் தடுப்பு மசோதாவை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இவர்கள் ஒரு ஹிட்லரைப் போலவே வாழ முயற்சிக்கின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழி !

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இத்தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

“இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள்.” – ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவும்வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே நேற்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மிகவும் நலிந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலையமைப்புகள் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்

துரதிஸ்டவசமாக மிகவும் ஆபத்தான சட்டங்கள் எதிரணியினரை கட்டுப்படுத்துவதற்கும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதை கடந்த மாதங்களில் பார்க்கமுடிந்துள்ளதாகவும் ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அனேகமான தருணங்களில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், பொலிஸாரின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கில் இன்மையால் மாணவர்கள் இன்மையினால் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில்.” – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வட மாகாணத்தில் மாணவர்கள் இன்மையினால் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா – கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள், மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.

 

இதேநிலை மட்டக்களப்பிலும் ஏற்பட்டுள்ளமையை கடந்த 7 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போது அவதானிக்க முடிந்தது. முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகள் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்கள் அப்போது தெரிவித்தனர்.

 

எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். பல சமூக பிரச்சினைகள் தற்போது அதிகரித்துள்ளன. எனவே எல்லாவற்றையும் கடந்து சமூகம் இருப்பு அவசியம் என்பதை உணர்ந்து புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது. வெறுமனே உரிமை பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்லாமல் எங்களது பிரச்சினைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

 

இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

“சிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்பட்டது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.” – முல்லைத்தீவில் உதய கம்பன்பில !

சிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

 

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற உதய கம்பன்பில அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“அரசாங்கத்தின் அனுசரணையுடன், தமிழ் பிரிவினை வாதிகளால், 2100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்பொருள் இடமான குருந்தூர் மலை விகாரைக்கு சொந்தமான காணிகளை, மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

நாம் இங்கு வந்தவுடன், ஒரு விடயத்தை அவதானித்தோம். தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.

 

கொழும்பிலிருந்து வடக்கிற்கு வந்து, இனவாதத்தை பரப்பினால், அதனை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை நாம் நேரில் இன்று பார்த்தோம்.குருந்தூர் மலை என்பது விகாரை மட்டும் இருந்த இடமல்ல. இது அநுராதபுரக் காலத்தில் இருந்த பாரியதொரு நகராமாகும்.

அநுராதபுர காலத்துக்குரிய தொல்பொருட்கள் இங்கு அனைத்து இடங்களிலும், காணப்படுகின்றன.

2000 வருடங்களுக்கு முன்னர், இங்கு வாழ்ந்தவர்கள் இரும்புகளால் நிர்மாணிக்கப்பட்ட பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதனை இங்குள்ள மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத் தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும்.

இதற்கான பிரதான சாட்சியாகவே நாம் குருந்தூர் மலையை காண்கிறோம். இங்கு காணப்படும் தொல்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தமிழ் அரசியல்வாதிகள் பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இதனால்தான், இங்கு கோயில் ஒன்று இருந்ததாகவும், விவசாயக் காணி காணப்படுவதாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர், இந்திரபாலன் கார்த்திகேசு என்பவர், 13 ஆவது நூற்றாண்டுவரை இலங்கையில் தமிழர்கள் வாழவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களே இங்கு வசிக்காத காலத்தில், தமிழ் பௌத்தர்கள் வசித்ததாக ஜனாதிபதி கூறியுள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் பிழையான வரலாற்றுப் புத்தகத்தை வாசித்துள்ளார் என்றே கருகிறேன்.

 

அவர் அறிவாளி என்று நாம் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தோம். அந்த மரியாதை இன்று இல்லாமல் போயுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் தகராறு – யாழ்ப்பாணத்தில் 21 வயது தந்தை தற்கொலை!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்தார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் – கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சரிடம் அமைச்சரிடம் வேண்டுகோள்!

நட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையலேயே கல்வி அமைச்சரிடம் இதனை வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தொரிவிக்கையில்,

“நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பேராதனை பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் நடைமுறை வாழ்வில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வருடத்தின் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதுடன், தற்கொலைக்கு முயற்சித்த இருவருக்கு பல்கலைகழக உளவியல் பிரிவு ஊடாக உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் ஒருவேளை தான் உணவு உண்கிறார்கள்.

மாணவர்களின் செலவுகளுக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்துள்ளார்கள். விரிவுரைகளின் போது மாணவர்கள் மயங்கி விழுகிறார்கள்.

இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை விளங்கி துரிதகரமாக ஒரு தீர்மானத்தை எடுக்க கல்வி அமைச்சு தலையிட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோசடியாளர்களிடம் ஏமாறாதீர்கள் – எச்சரிக்கிறார் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

தமது பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம்கோரும் நபர்களிடம் ஏமாற வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில், தமது குடும்பத்தினரோ, அமைச்சின் எந்தவொரு அதிகாரியோ ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முடியும் என்றும், அந்த நிறுவனங்களை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.