இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார்.
நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் “காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்” தொடர்பிலும் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.
பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ,கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேநேரம் “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி நேற்று(23) கலந்துகொண்டார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் அவர்களின் தலைமையில் இரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பமாகியிருந்ததோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன பிரதமர் லீ கியாங், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ், உலக வங்கியின் பிரதானி அஜய் பெங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா, ஆகியோரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், வெளிநாடுகளின் அமைச்சர்கள் உள்ளடங்களான பிரதிநிதிகள், நிதிசார் பிரதானிகள் மற்றும் காலநிலை அலுவல்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.