July

July

நல்லூர் சங்கிலியன் தோரணவாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தால் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு !

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரணவாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

No photo description available.

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுரிமை சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயல் திட்டம் இதுவாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தனது சொந்த நிதியில் தோரண வாசலை புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரதீப், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், சிவபூமி அறக் கட்டளை நிறுவுநர் ஆறு.திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துல ஜீவவும் கௌரவ விருந்தினர்களாக யாழ் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், அரசியல் தலைவர்கள், மூத்த கல்விமான்கள், தொல்லியல் துறை உத்தியோகத்தர்கள், தொல்லியல் மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரி மனை வாளகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

அரச வைத்தியசாலைகளில் அதிகரிக்கும் மரணங்கள் – விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழு !

சுகாதாரத்துறைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிபுணர் குழுவில், மருத்துவம், செவிலியர், ஒவ்வாமை ஆகிய இரண்டிலும் விரிவான அறிவும் புரிதலும் உள்ள பேராசிரியர்கள் உட்பட 5 பேர் இடம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச மருத்துவமனைகளில் நடந்த அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்போம். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர் மேலும், இந்தக் குழுவினால் வழங்கப்படும் அறிக்கை நாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் எதிர்பார்ப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளால், மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரத் தயங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் சுகாதாரம் சீர்குலைந்திருக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.பேராதனை போதனா வைத்தியசாலை, பேராதனை சிறுவர் வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையை அவதானித்ததன் பின்னர் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியாருக்கு விற்கப்படுகின்றதா இலங்கை தபால் திணைக்களம்..?

அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே தவிர , அதனை தனியாருக்கு விற்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனத் தெரிவித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார , முத்திரை கட்டணங்களையோ , தபால் கட்டணங்களையோ அதிகரிக்க எதிர்பார்க்கவுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தபால் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக புதிய சட்ட மூலம் தயாரிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இவ்வாண்டுக்குள் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானத்தை விட செலவு இரு மடங்காகும்.

இவ்வாண்டுக்குள் வரவை மீறிய செலவினை  குறைப்பதற்கு திட்ட்மிடப்பட்டுள்ளது. 2024 இல் வரவு மற்றும் செலவினை சமநிலைப்படுத்தவும் , 2025இல் தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிறுவனமாக்குவதற்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

10 பில்லயனாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் 9 பில்லியன் தனியார் முதலீடும் , 1 பில்லியன் அரச முதலீடுமாகும்.

அதற்கமைய அரச , தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படுமே தவிர , ஒருபோதும் அதனை தனியாருக்கு விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்காது.

தற்போது முத்திரைகள் ஊடாக வருடத்துக்கு 4000 மில்லியன் ரூபாவும் , முத்திரை குத்துதல் ஊடாக 668 மில்லியன் ரூபாவும் , தபால் பரிமாறத்தின் ஊடாக கடந்த ஜூன் 31ஆம் திகதி வரை 130 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளது.

இவை தவிர தபால் பொதி சேவை , வீடுகளுக்கே தபால் பொதிகளை விநியோகித்தல் , ஏனைய பதிவு சான்றிதழ்களை விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளையும் தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

தபால் பொதி சேவையை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு விரைவில் 1000 முச்சக்கரவண்டிகளைக் கொள்வனவு செய்து, அவற்றின் ஊடாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தபால் , முத்திரை கட்டணங்களை மீண்டும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிபரால் கடுமையாக தாக்கப்பட்ட சிறுமி – விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் !

யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில்  அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று  திங்கட்கிழமை (17) பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்  குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையி, இன்றைய தினம் தீவக கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலையில் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில், அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்ட நான்கு மாத பெண் குழந்தை உயிரிழப்பு !

தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாக கூறப்பட்டும் நான்கு மாத பெண் குழந்தையொன்று ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல கொமுவ பிரதேசத்தைச் சேரந்த  டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வாயில் இருந்து சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் திகதி ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் குறித்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும்  மறுநாள் குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குழந்தையின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியதால் பொலிஸ் நிலையம் முன்பாக தற்கொலைக்கு முயன்ற தந்தை.” – யாழில் சம்பவம் !

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடித்து தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். ஆவரங்கால் – சர்வோதயா பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அயல் வீட்டுப் பெண்ணை காதலித்து இருவரும் சுய விருப்பில் திருமணம் செய்ய சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் வீட்டார் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனின் வீட்டார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணின் தந்தை மற்றும் பெரிய தகப்பனார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில்  சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வீட்டார் உள்ளிட்ட மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்யவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் குறித்த 5 சந்தேகநபர்களையும் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ள நிலையில், தவறு செய்யாத தாம் ஏன் முன்னிலையாக வேண்டும்? தனது மகளை அவதூறாக பேசிய அயல் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி தனக்குத்தானே பெற்றோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? – தேசம் திரை வீடியோ!

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற மதம் ஒரு “அபின்” என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகள் பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

 

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவன் என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தேசம் திரை வீடியோவை காணுங்கள்

 

“இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை இந்தியா திணிக்க கூடாது.” – சிவாஜிலிங்கம்

இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் அவரிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் நிரந்தர அரசியல் தீர்வை காண ஐ.நா.வின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இலங்கையில் பொது வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகாலங்களில் இடமபெற்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் உத்தரவாதம் வழங்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு அவசியம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க அரசாங்கம் தீர்மானம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒருவருடகால விசாரணையின் பின்னர் விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவொன்று வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தடையை நீக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏப்பிரல் 2021ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஐந்து இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்தார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறுபேருக்கு எதிராகவும் தடைகளை அறிவித்தார்.

புலனாய்வு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் உறுப்பினர்களின் நடவடிக்கைகளிற்கு தாங்கள் பொறுப்பு என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடைகள் நீக்கப்பட்ட பின்னரும் இந்த அமைப்புகளை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பாக அவர்களிற்கான நிதி மற்றும் அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவேண்டும் எனவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தடைகளை மீண்டும் விதிக்கவேண்டும் எனவும் நிபுணர்குழுபரிந்துரைத்துள்ளது.

9 வயதான மாணவியை தாக்கிய யாழ் – தீவக வலய பாடசாலை அதிபர் கைது !

யாழ் – தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

யாழில் பாடசாலையில் வைத்து மாணவிக்கு நடந்த கொடுமை - அதிபர் கைது | Principal Assaulted Student In The School Jaffna

குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், ஊர்காவல்துறை காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபரை நாளை திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

தீவக பாடசாலையில் மாணவி மீது தாக்குதல்: அதிபர் இன்று கைதாவார்! - Pagetamil

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.