July

July

“ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார்.” – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார். சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இரு நாள் விவாதத்தை கோரினோம். தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்து நாட்டு மக்கள் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தெரியாமல் மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இருநாள் விவாதம் கோரினோம்.

இருநாள் விவாதம் அவசியமில்லை. சனிக்கிழமை (01) முழு நாள் விவாதத்தை நடத்தலாம். தேவையாயின் விவாதத்துக்கான காலத்தை நீடித்துக் கொள்ளலாம் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்ற இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தன்னிச்சையாக செயற்திட்டம் மீதான வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார். வாய்ப்பு கோரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை புறக்கணித்து ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு சபாநாயகர் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார்.

சபாநாயகர் ஒருவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுகிறார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்போம் என்றார்.

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டாரா..? – மைத்திரிபால சிறீசேன வழங்கிய பதில்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் சில வாரங்கள் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளா‍ர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.  நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

இறுதி யுத்தத்தின் வெற்றியில் தனக்கும் கணிசமான பங்கு இருப்பதாக கடந்த காலங்களில் தெரிவித்து வந்த மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய இக்கருத்து முற்றிலும் முரணாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாபம் போட்ட சாணக்கியன் !

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (1) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதலாவது மோசடி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என அறிந்தும் வெளிநாட்டு கடன் டொலரில் செலுத்தப்பட்டது.

தற்போது கடன் மறுசீரமைப்பு ஊடாக மற்றுமொரு மோசடி இடம்பெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என்றார்.

மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் – யாழில் உறவுகள் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

“கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முயற்சி.” – சுகாஷ் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திட்டமிடப்பட்ட இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசு, அதன் தொடர்ச்சியாக இவ்வாறான செயல்பாகளையும் முன்னெடுத்துள்ளது.

போதைப்பொருள், சட்டவிரோத மதுபான சாலைகளை அமைத்து கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைப்பு காட்டியுள்ளது.

பிரதேச அமைப்புக்கள், பொது மக்களின் எதிர்புக்களையும் தாண்டி மக்கள் குடியிருப்புக்குள் இவ்வாறு மதுபான சாலைகளை அமைத்துள்ளனர்.

இதற்கான முறையான அனுமதி பெறப்படாததனை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, உணவுக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையும் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் 200 ஏக்கர் காணி தாய்லாந்தின் Sutech Sugar Industries Ltd நிறுவனத்திற்கு !

வவுனியாவில் 200 ஏக்கர் காணியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சீனி உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த பாரிய திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சீனி கைத்தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

தாய்லாந்தின் சுடேச் சுகர் (Sutech Sugar Industries Ltd) நிறுவனத்திற்கு வவுனியா மாவட்டத்தில் பரந்த நிலப்பரப்பை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த பாரிய திட்டத்தின் மூலம் 20% அல்லது 120,000 மெட்ரிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் இலங்கையின் சர்க்கரைத் தேவையின் கணிசமான பகுதியை நிவர்த்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது.

200 ஹெக்டேர் பரப்பளவில் குறுங்காடுகளை கொண்டுள்ள இந்த நிலம், பசுமை வயல் சர்க்கரை மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடித்தளமாக நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

பெண்ணிடம் தகாத முறையில் பேசிய பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கிய இளைஞர்கள் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் அதனை தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

 

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று (30) பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் கடத்திச் சென்றனர்.

 

அவரை கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

 

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்தவின் கீழ் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையில் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

 

குறித்த பழக்கடை வியாபாரி பழம் வாங்கச் சென்ற பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அதுதொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார்.

 

அதனால் தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு சிகரெட்டின் விலை 125 ரூபா – புகைப்பிடித்தலை கட்டுப்படுத்தவே நடவடிக்கையாம் !

சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தல் விகிதங்களைக் கட்டுப்படுத்துவதையும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் சிகரெட்டின் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வழக்கறிஞர்கள் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர்.

புகைபிடித்தல் விகிதங்கள் மற்றும் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைக் குறைப்பதில் சாத்தியமான நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

மறுபுறம், விலை உயர்வை விமர்சிப்பவர்கள் இது சட்டவிரோத வர்த்தகம் மற்றும் சிகரெட் கடத்தல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

புகைத்தல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும் 1.2 மில்லியன் பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

உலகின் 1.3 பில்லியன் புகையிலை பாவனையாளர்களில் 80%க்கும் அதிகமானோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன.

2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி உலக மக்கள் தொகையில் 22.3% பேர் (36.7% ஆண்கள் மற்றும் 7.8% பெண்கள்) புகைப்பழக்கம் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது.”- நாடாளுமன்றத்தில் சுமந்திரன் !

இலங்கை அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியமானது திருடப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்..;

“அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது. காலங்காலமாக பல்வேறு முறைகளில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

 

ஏனெனில் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளனர்.

 

அனைத்து வெளிநாட்டு முதலீடுகளையும் அம்பலப்படுத்தும் அரசாங்கம் ஏன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதில்லை? குறிப்பாக தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது.

 

அதுமட்டுமல்லாது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்துவது மற்றிலும் தவறான விடயமாகும்” என தெரிவித்துள்ளார்

இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பாராளுமன்ற குழு !

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக டிரான் அலஸ் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 

அதற்கமைய, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, புத்திக பத்திறண, (வைத்திய கலாநிதி) கயாஷான் நவனந்த, துஷார இந்துனில் அமரசேன, (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, அசங்க நவரத்ன, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, தவராஜா கலை அரசன் மற்றும் மஞ்சுலா திசாநாயக ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.