July

July

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஆகியவையே உரித்துடையவை.

 

ஆனால் கடந்த காலங்களில் தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ் இணைக்கப்பட்டன.

 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கேள்விக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் ஜனாதிபதிசெயற்படும் சிறப்புரிமைகள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி, இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகளை வழங்கும் போது, ஜனாதிபதி சிறப்புரிமை சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்க வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

‘யாழ் நிலா’ அதி சொகுசு புதிய ரயில் சேவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பம் !

நாட்டின் வடக்கு பகுதியை மையமாக கொண்டு கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா’ எனும் அதி சொகுசு புதிய ரயில் சேவையொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

வார இறுதிகளில் செயற்படவுள்ள இந்த புகையிரத சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என்றும், காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை ரயில் நிலையத்தை வந்தடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

இந்த அதி சொகுசு ரயிலில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளதாகவும், ரயிலின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

‘யாழ் நிலா’ ரயிலில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன், மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

 

இந்த ரயில் சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டு தற்கொலை செய்த சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத சம்பளம் ரூபா ஐயாயிரமே..!

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை, முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) எனும் சிறுமி, வேலை பார்த்து வந்த வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை முடிவடைந்து, மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு உடற்கூற்று மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கையில்,

 

சிறுமியின் குடும்பம் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டது பொருளாதார நெருக்கடியினால், சிறுமி தனது பாடசாலை கல்வியை இடை நிறுத்திய நிலையில் சிறுமியின் தாயார் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று வேலை செய்வதற்கு பணிப்பெண்ணாக சிறுமியை வேலைக்கு சேர்த்துள்ளார்.

 

வேலைக்கு சிறுமியை எடுக்கும் போது, சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் தருவதாக வீட்டார் தாயாருக்கு உறுதி அளித்துள்ளனர்.

 

ஆனால் சிறுமி வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் சிறுமியை தாயார் சந்திக்க முடியாது என தடை ஏற்படுத்தினார்.

 

தொலைபேசியில் தாயாருடன் மாதத்தில் ஒரு தடவை மாத்திரம், சில நிமிடங்கள் உரையாட அனுமதிக்க முடியும் என அனுமதித்தனர்.

 

சிறுமியிடம் தொலைபேசி இல்லாத அதேவேளை, தாயாரிடமும் தொலைபேசி இல்லை. வீட்டின் உரிமையாளர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தாயாரை தொடர்பு கொண்டு சிறுமியை சில நிமிடம் பேச அனுமதிப்பார்.

 

சிறுமி தாயுடன் பேசும் போது, வீட்டின் உரிமையாளர் அருகில் நிற்பார். சில நிமிட உரையாடலுடன், தொலைபேசியை சிறுமியிடம் பறித்து விடுவார்கள்.

 

இவ்வாறாக சிறுமியை மனரீதியாக துன்புறுத்தி வந்ததுடன், சிறுமிக்கு அதிகளவான வேலைகளையும் வழங்கி வந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஒரு மாத காலம் கழிய சிறுமியின் சம்பளம் என 5 ஆயிரம் ரூபாயே வழங்கியுள்ளனர். மிகுதி 20 ஆயிரம் ரூபாயை வழங்கவில்லை.

 

இது தொடர்பில் சிறுமியின் தாய் கேட்ட போது, முழு சம்பளத்தையும் தந்தால் சிறுமி வேலையை விட்டு போய்விடுவா, அதனால் 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

 

அடுத்த மாதமும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கி 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறாக 4 மாத சம்பளத்தை வழங்கவில்லை.இது தொடர்பில் சிறுமியின் தாய் கேட்ட போது, முழு சம்பளத்தையும் தந்தால் சிறுமி வேலையை விட்டு போய்விடுவா, அதனால் 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

 

அடுத்த மாதமும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கி 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறாக 4 மாத சம்பளத்தை வழங்கவில்லை.

 

இது தொடர்பில்  மரண விசாரணை அதிகாரியிடம் மரண விசாரணையின் போது தெரிவித்தோம். மரண விசாரணை அதிகாரி, 20 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாத காலமாக பிடித்து வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்காவது மாத சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் என 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று தந்தார்.

 

சிறுமியை வீட்டில் வேலைக்கு சேர்ந்து விட்ட பிறகு நான்கு மாத காலமாக சிறுமியை தாயார் பார்க்க கூட அனுமதிக்கவில்லை.

 

வேலைக்கு சேர்த்து விட்ட பின்னர் சிறுமியை நான்கு மாதம் கழித்து தாயார் சடலாமாகவே சிறுமியை பார்த்துள்ளார்.

 

சிறுமியின் மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. மன ரீதியாக வீட்டு உரிமையாளர்கள் துன்புறுத்தி, அதிக வேலைகளை வழங்கி மன அழுத்தத்தை சிறுமிக்கு ஏற்படுத்தி உள்ளனர்.

 

வீட்டின் உரிமையாளர்கள் கல்வி கற்ற, சமூக செல்வாக்கு மிக்கவர்களாகவும், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி சிறுமியின் மரணத்தை மூடி மறைத்து தாம் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

 

இந்நிலையில் வடமாகாண ஆளுநர், சிறுமியின் மரணம் தொடர்பான பூரண விசாரணை அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பணித்துள்ளமை எமக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.

 

சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகளை இனி வரும் காலங்களில் அடிமைகளாக பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு பாடமாக அமைய வேண்டும்.

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வோர் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை காக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் உள்நாட்டில் பணிப்பெண்களை அடிமைகள் மாதிரி வேலைக்கு அமர்த்துவோரும் உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

யாழ்.ஊர்காவற்துறையில் அரை நிர்வாணமாக மது போதையில் நின்ற அரச பணியாளர் செய்த அட்டகாசம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் அரை நிர்வாணமாக மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

 

ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று (25) பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

 

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடல் பாதையில் கடமை நேரத்தில் நிறை போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரச ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியரை தாக்கியுள்ளார்.

 

இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்ட போது குறித்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மது போதையில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணியாளர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“வவுனியா, செட்டிகுளத்தை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் மல்வத்து ஓயாத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் நான் கதைத்த போது தெரிவித்திருந்தனர்.

 

குறித்த திட்டத்திற்கு கடந்த அரசாங்கத்தால் 23000 மில்லின் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக தற்போது அந்த நிதியை பெற முடியாத நிலை உள்ளது.

 

அதனால் எதிர்காலத்தில் சீனாவின் உதவி மூலம் அதனை செய்ய முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

500 மில்லியன் நிதி கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு கிடைத்து உள்ளது. அதில் 200 மில்லின் செலவிற்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதால், அடுத்து மழை காலத்திற்கு முன்பாக 2 மாதங்களுக்குள் மிகுதி 300 மில்லின் நிதிக்குரிய வேலைத்திட்டத்தை, அப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவதற்கு உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம் மக்களது காணி கையகப்படுத்தப்பட்டால் மாற்று காணிகளும் வழங்கப்பட வேண்டும்.

 

அதற்கு பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோர் சம்மந்தப்பட்ட திணைக்களத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத் திட்டத்திற்கான நிதி எதிர்காலத்தில் சீனாவால் வழங்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் முல்லைத்தீவில் கைது !

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவரே நட்டாங்கண்டப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார், காடழிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் காடழிப்பிற்கு பயன்படுத்திய மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

 

சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 68 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிசார், இருவர் மீதும் அரச காணியை அத்துமீறி பிடித்தல் மற்றும், பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கைளை முன் வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதேவேளை இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார், குறித்த வழக்கை வரும் 08ம் மாதம் 09ம் திகதி மாங்குளம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

13ஆவது திருத்த சட்டத்தின் படி மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

 

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என்பதைசுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக குறிப்பிட்டார்.

 

நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருத்தமான முன்மொழிவுகளை தான் கொண்டு வருவதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

மாகாண சபை முறைமையை பேண வேண்டுமாயின், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய அவர்,. விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற அடிமட்ட நடவடிக்கைகள் உட்பட தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

 

மத்திய அரசாங்கம் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கும் அதே வேளையில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

 

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி ரணில் “- அநுரகுமார திஸாநாயக்க

அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற காலத்திலிருந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டமொன்றைக்கூட நடத்தி நாம் காணவில்லை.

 

மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வராத அவர், அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார்.

 

இன்று வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதியோ நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதாக குறிப்பிடுகிறார்.

 

மத்திய வங்கியின் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது. இதில், 68 வீதமான மக்கள் இரண்டு வேளை உணவினை மட்டுமே உற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு, கடனை திருப்பிச் செலுத்தியும் எரிபொருள், எரிவாயு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவ்வாண்டு 600 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

 

அரச சொத்துக்களை விற்பனை செய்து, அதன் ஊடாக கிடைக்கும் டொலரைக் காண்பித்து, இந்த நாடு முன்னேறி விட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“கிளிநொச்சியில் இறந்து பிறந்த குழந்தை. அகற்றப்பட்ட தாயின் கருப்பை.” – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த கணவன்!

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்களின் தாமதத்தாலும் அசமந்த போக்காலும் குழந்தை இறந்து பிறந்துள்ளதோடு தாயின் கற்ப பையை எடுக்க நேர்ந்துள்ளதாக கணவனால் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தந்தையான இராசதுரை சுரேஷ் என்பவரால் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய பின்னர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இராசதுரை சுரேஷ்,

“கிளிநொச்சி வைத்தியசாலையில் பரிசோதனையின் போது 09ம் திகதி இறுதி திகதி கொடுக்கப்பட்டு வைத்தியர் ஒருவரால் பரிசோதிக்கப்படட போது உடல் நிறை குறைவாக இருப்பதால் குழந்தை வளர்ச்சி குறைவாக இருக்கிறது.

அதனால் 12ம் திகதி சத்திரசிகிச்சை மூலமாக குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குறித்த திகதியில் வைத்தியசாலைக்கு சென்ற போது வேறொரு வைத்தியர் இருந்தார். அவர் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை முதலில் குறித்து கொடுக்கப்பட்ட திகதி 24 ஆக இருந்த போதிலும் 26ம் திகதி வருமாறு கூறினார்.

 

24ம் திகதி மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் 27 ம் திகதி காலையில் மருந்தேற்றப்பட்டது. மீண்டும் 12.00 மணியளவில் மருந்தேற்றப்பட்டது. 12.30 மணியளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. 05.30 மணியளவில் குழந்தையின் துடிப்பு குறைவடைகிறது வைத்தியரை கூப்பிடுங்கள் என்று கத்தி கூச்சலிடட போதும் யாரும் வரவில்லை.

07.30 மணியளவிலேயே வைத்தியரை தொலைபேசியூடாக அழைத்து மகப்பேற்று அறைக்கு மாற்றி ஆயுதம் போட்டு பார்த்து சரிவரவில்லை என்று சத்திரசிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் 12.30 மணியளவில் குழந்தை இறந்ததாகவும் கர்ப்பப்பை அகற்றப்பட்டதாகவும் செய்தி தரப்பட்டது.

இவ் விடயம் எனது பார்வையில் இன்னொரு குழந்தை கொலை செய்யப்பட்டதாகவே கருதுகிறேன்.” என கூறியுள்ளார்.

வடமராட்சியில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தொடர்ந்தும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தடுக்கப்பட்டுள்ளது.

 

வடமராட்சி கிழக்கு – உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையே இன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

 

குறித்த பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் 15 பேர்ச் அளவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிக்காக அரச நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் சென்றிருந்தனர். காணி உரிமையாளர், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் இணைந்து எதிர்ப்பினை வௌிப்படுத்தியதையடுத்து காணி அளவீட்டினை அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்திச் சென்றுள்ளனர்.

 

இதன்போது, பிரதேச மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.