July

July

’13 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமாயின் நாம் ஆதரிப்போம்.” – பேராசிரியர் சரித ஹேரத்

13 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது என நித்திரையில் இருந்து எழுந்ததை போல் கருத்துரைக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த அரசாங்கங்கள் ஏன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களின்  அரசியல் பிரச்சினை,அதிகார பகிர்வு ஆகியவற்றை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்றுவித்தார்.அதனை கூட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நல்லாட்சி அரசாங்கம் பலவீனப்படுத்தி, மாகாண சபை வெள்ளை யானை போன்றது என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்தது.மாகாண சபை முறைமை நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.

13 ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் சர்வ கட்சி கூட்டத்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதிகார பகிர்வு விவகாரத்தில் ஏனைய அரசியல் கட்சிகயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையி;ல் ஈடுபட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் எத்தனையோ சர்வகட்சி கூட்டங்களை நடத்தி விட்டார்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக சர்வக்கட்சி என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை அவர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வருவதற்கு முடியுமான வகையில் கட்சியின் புதிய யாப்பு !

அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வருவதற்கு முடியுமான வகையில் கட்சியின் புதிய யாப்பு நிர்மாணிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி கலவான தொகுதி அரசியல்சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருக்கிறார். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு தொடர்பாகவும் அதில் ஏற்படுத்த இருக்கும்  புதிய திருத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட இருக்கிறார்.

குறிப்பாக நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வருவதற்கு முடியுமான வகையில் கட்சியின் புதிய யாப்பு நிர்மாணிக்கப்பட இருக்கிறது. புதிய உலகுக்கு பாெருத்தமானவகையில்  கட்சியின் புதிய யாப்பை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதேபோன்று நாட்டுக்கு பலத்தை சேர்க்கும் வகையில் கட்சியின் யாப்பு அமையப்பெறும்.

அத்துடன் யாருக்காவது நாட்டை வீழ்த்தவேண்டும் என்றிருந்தால், அவர்கள் செய்யவேண்டியது ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்துவதாகும். ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைந்ததால் முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தேசத்துக்காக முன்வந்து,, வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.

வங்குராேத்து அடைந்திருந்த எமது நாடு இந்தளவு விரைவாக இயல்பு நிலைக்கு மாறி, மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாக கொண்டுசெல்லக்கூடிய நிலை ஏற்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் முதிர்ச்சி மற்றும் திறமையுமே இதற்கு காரணமாகும். மக்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

மது போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி !

மது போதையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

இந்த சம்பவம் நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த காவல்துறை அதிகாரி | Police Officer Lying On The Street Intoxicated

குறித்த அதிகாரி தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருந்த காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இவரின் செயற்பாட்டால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

“அரசியல் செய்வதை விட, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் பொறுப்பு.” – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க

“அரசியல் செய்வதை விட, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் பொறுப்பு.” என தேசிய பாதுகாப்பு  தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இளம் தொழில் முயற்சியாளர்களின் அமைப்பு (YPO) அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சாகல ரத்நாயக்க இதனை குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர் சமூகம், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். ஆனால் அதனை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்ற முடியாது எனவும்  சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வலுவான உற்பத்திக்  கைத்தொழில் துறையையும் அபிவிருத்தியடைந்த சுற்றுலாத்துறையையும் உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு வலுவான வேலைத்திட்டம் தேவை எனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த  சாகல ரத்நாயக்க கூறியதாவது:

சிலர் அரசியல் ஆதாயத்திற்காக நாடு வங்குரோத்தடையும் வரை காத்திருக்கின்றனர். நாடு அபிவிருத்தியடைந்தால் அரசியல் ஆதாயம் பெற முடியாது. எனவே, அரசாங்கத்தின் முன்னுரிமை அரசியலாக இருக்கக் கூடாது.

அரசியல் செய்வதை விட, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வது நமது பொறுப்பு.

நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் தேவை. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளையும் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் இளைஞர் சமூகம் தேசிய பொருளாதாரத்திற்கு சில பங்களிப்பை வழங்க முடியும். என்றாலும் அதனை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்ற  முடியாது.

இந்நாட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு, ஒரு வலுவான உற்பத்திக்   கைத்தொழிலையும், வளர்ச்சியடைந்த சுற்றுலாத்  துறையையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசு ஆதரவு வழங்குவதும் அவசியம்.

நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின்  பொறுப்பாகும். மேலும், நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக பாதகமான விடயங்களைக் கைவிடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக  நலன்புரி நன்மைகள்  உண்மையிலேயே தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். எனவே, தகுதியானவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்தே  இந்த நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் வங்கிகள் வீழ்ச்சி அடையும் எனவும் வைப்புத்தொகையை இழக்க நேரிடும் எனவும் ஓய்வூதிய நிதிகள் பலவீனமடையும் எனவும் அடிப்படையற்ற  வதந்திகள் பரப்பப்படுகின்றன. இன்று வங்கிகள் வலுவாக உள்ளன, நிதியங்கள் மாற்றமின்றி   அப்படியே உள்ளன. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் தற்போதைய நிலையில் இருந்து குறைக்கப்படாது. நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை தருவதாக அரசு உறுதி அளித்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

எனவே, அரசியல் ஆதாயத்திற்காக இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது. அதை எதிர்த்து நிற்க வேண்டியது இளைஞர்களின் பொறுப்பாகும். இளைஞர்கள் உண்மையையும் பொய்யையும் புரிந்து கொள்வதற்காக மக்களுக்கு உதவ முடியும். இதன் மூலம் இளைஞர்களால்  நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது” – கனடா பிரதமர்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன.இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கறுப்பு ஜூலையின் கொடுமை பதற்றத்தை அதிகரித்து சில தசாப்தங்கள் நீடித்த ஆயிரக்கணக்கானோர் மரணமாகிய ஆயுதமோதலாக மாறியதுடன்  இதன் மனப்பாதிப்பை சமூகங்கள் தற்போதும் அனுபவிக்கின்றன.

சோகமான இந்த நாளில் நாம் தமிழ் கனேடியர்களுடனும் உலகம் எங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்தி தப்பிப்பிழைத்தோரை கௌரவிப்பதுடன் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல்கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதை மீள வலியுறுத்துகின்றோம்.

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்து இவ்வாண்டில் இந்த நாள் முதல்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது.

யாழ்ப்பாணத்தில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணி புரிந்துள்ளார்.

 

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்கமுடியுமென தெரிவித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 

சடலத்தை பார்வையிட்ட தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

 

 

“1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியது.” – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

ஒருசில அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தோளில் சுமந்து இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியில் பல விடயங்கள் கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ளது.கறுப்பு ஜூலை சம்பவத்தை துரதிஷ்டவசமானதாக கருத வேண்டும்.

 

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இருந்து அரசியலமைப்பு ஊடாக இனவாரி ரீதியில் மக்கள் வேறுப்படுத்தப்பட்டார்கள்,பிரதேசவாரியாக மக்கள் வேறுப்படுத்தப்பட்டார்கள்.மக்கள் மத்தியில் இனவாதம் தோற்றம் பெறுவதற்கு அது ஆரம்பமாக இருந்தது.

 

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள்,அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்துக் கொண்டு சென்றார்கள். இதனால் இலங்கையில் வாழ்ந்த மக்கள் இலங்கையர் என்ற அபிமானத்துடன் வாழ முடியாமல் போனது.1977 ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெற்ற போது நாட்டில் பல்வேறு பகுதியில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இடம்பெற்ற இனகலவரம் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை அமைத்தது. இலங்கையர் என்ற அடிப்படையில் இருந்துக் கொண்டு சிந்திப்பதை விட சிங்களவர்,தமிழர்,முஸ்லிம் என்ற வரையறைக்குள் இருந்துக் கொண்டு செயற்படும் நிலை தோற்றம் பெற்றது. இவ்வாறான நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்ற முடியாது.

 

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு,தேசிய நல்லிணக்கம் உள்ளிட்ட காரணிகளுக்காக பல்வேறு திட்டங்களுக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்,தேர்தல் செலவினங்களை ஒழுங்கப்படுத்தல், ஊழல் எதிர்ப்பு சட்டம் என்பனவற்றை இயற்றிக் கொண்டோம்.

 

கறுப்பு ஜூலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்குதல் பிரதான சவாலாக உள்ளது.இதற்காக காணாமல் போனோர் அலுவலகம்,நல்லிணக்க காரியாலயம் மற்றும் நட்ட ஈடு வழங்கல் காரியாலயம் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

 

தென்னாபிரிக்கா நாட்டின் மாதிரியிலான வகையில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நடவடிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

 

நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளினால் பல தீர்மானங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. கறுப்பு ஜூலை சம்பவம் இலங்கையில் அல்ல உலகில் எந்த நாட்டிலும் தோற்றம் பெற கூடாது என்றார்.

கொழும்பில் கறுப்புஜூலை 40ஆவது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் பெரும் பதற்றம் – குவிக்கப்பட்ட படையினர் !

கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் இலங்கை பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் கலகமடக்கும் பிரிவினர் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கனத்தை  மயான சுற்றுவட்டத்தில் பெருமளவு பொலிஸ் வாகனங்களை காணமுடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கறுப்புஜூலை நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வு ஆரம்பமான சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரினவாத கருத்துக்களை தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புஜூலையை நினைவுகூறும் நிகழ்வை முன்னெடுத்தவர்களை புலிகளின் ஆதரவாளர்கள்  புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியுடன் செயற்படுபவர்கள் என விமர்சித்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்கமுயன்றபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்- பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தனர்.

ஒரு கட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் முன்னோக்கி நகர்ந்து கறுப்புஜூலை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை பின்னோக்கி தள்ள முயன்றனர் இதன்போது  ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட  சட்டத்தரணி சிறிநாத் பெரேரா உட்பட சிலர் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டனர் எனினும் பொலிஸார் அதனை அலட்சியப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பின்னோக்கி தள்ளுவதற்கு முயன்றனர்.

இதனை தொடர்ந்து கறுப்புஜூலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை காணப்படும் பகுதிக்கு சென்று அங்கு சுட்டி விளக்குகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் அதனை அங்கு காணப்பட்ட சிறிய கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இதனை தொடர்ந்து பொலிஸார் காலால் சுட்டிகளை மிதித்து உடைத்தனர் .

எனினும் கறுப்பு ஜுலை நிகழ்வில்  கலந்துகொண்டவர்கள் மீண்டும் விளக்குகளை ஏற்றியவேளை பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிறந்தநாள் நடைபெற்ற வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த முகமூடி குழு – ஒருவர் கொலை, ஒன்பது பேர் படுகாயம் – வவுனியாவில் கொடூரம் !

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மேலும், ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

 

உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து தீயை அணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

தீ விபத்து ஏற்பட்ட போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பிரவேசித்து வீட்டிற்கு தீ வைத்து சென்றமை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏழு மாத போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 78,169 பேர் கைது !

நாடளாவிய ரீதியாக, இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 78 ஆயிரத்து 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 32 ஆயிரத்து 334 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 389 கிலோ 721 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 32 ஆயிரத்து 361 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 34 ஆயிரத்து 709சோதனை நடவடிக்கைகளில் 5 ஆயிரத்து 654 கிலோகிராம் கஞ்சாவுடன், 34ஆயிரத்து 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஹெரோயின் , ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களுடன் 11 ஆயிரத்து 322 பேர் குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.