03

03

ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – எலான் மஸ்க் அதிரடி!

டேட்டா ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் மேனிப்புலேசன் ஆகியவற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த ட்விட்டர் பதிவுகளைப் படிக்க கட்டுப்பாடு விதிப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

 

அதன்படி, இனி ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே ட்விட்டரை முழுமையாக பயன்படுத்த முடியும். எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட் பதிவில், ப்ளூ டிக் பயனர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். மற்ற பயனர்கள் 600 பதிவுகளைப் படிக்க முடியும். புதிய Unverified பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

 

எனினும் இது தற்காலிக நடவடிக்கை என்றும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின் இந்த வரம்பு அதிகரிக்கப்படும் எனக் கூறியுள்ளார். அப்போது ப்ளூ டிக் பயனர்கள் 10,000 பதிவுகளைப் படிக்கலாம் என்றும் ப்ளூ டிக் பெறாத பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்க முடியும் என்று மஸ்க் கூறியுள்ளார்.

 

எனினும் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் பதிவுகளைப் படிக்க கூட கட்டுப்பாடா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

முன்னதாக, நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென ட்விட்டர் தளம் முடங்கியது. ட்விட் பதிவிட முடியாமல் பயனர்கள் தவித்தனர். பல்வேறு பயனர்கள் இது குறித்து புகார் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரங்களில் ட்விட்டர் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிறுநீரில் இருந்து குடிப்பதற்காக நீர் – நாசாவின் முயற்சி வெற்றி!

விண்வெளி வீரர்கள் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து நீரை மறு சுழற்சி செய்யும் முயற்சியினை நாசா முன்னெடுத்து வந்திருந்த நிலையில் அதில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் இம் முயற்சியை தீவிரப்படுத்தினால் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான நீரை உடல் கழிவைச் சுத்திகரிப்பு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சி முழுமையாக வெற்றி அடைந்தால் வரும் காலங்களில் விண்வெளி வீரர்களின் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்யமுடியுமெனவும், மனித கழிவுகளையும் கனிசமாகக் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இச் சோதனை முயற்சி வெற்றியடைந்தால் எதிர்காலத்தில் விண்வெளிப் பயணம் மேலும் எளிதாகும் எனவும் நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்துகளால் விபரீதம் – தவிர்க்குமாறு வலியுறுத்துகிறது சுகாதார அமைச்சு!

கடந்த வாரம் ராகம வைத்தியாசாலையில் 23 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்துகளை பயன்படுத்துவதை விலக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

ராகமவைத்தியாசாலையில் தடுப்பூசிசெலுத்தப்பட்டதை தொடர்ந்து 23 வயது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்து ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணமாகயிருக்கலாம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது.

அவருக்கு தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக்கின் ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணம் என சந்தேகம் நிலவுவதாக ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்தினால் கடும் ஒவ்வாமை ஏற்படுகின்றது என கடந்தகாலங்களில் முறைப்பாடுகள் வெளியான போதிலும் வழமையான ஒவ்வாமை என அந்த முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபிள்ளையின் தாயாரான ஜாஎல வடக்கு பதகமவை சேர்ந்த 23 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரின் நோயை குணப்படுத்துவதற்காக தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்தே இதற்கு காரணம் என பிரேதபரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் தரமற்ற மருந்துகளினால் நோயாளிகள் மரணிப்பது அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

 

சில மருத்துவகிசிச்சைகளும் இதற்கு காரணம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

 

ஆனால் இவை மறைக்கப்படுகின்றன ஆனால் வழமையானவை என நிராகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பொதுமக்களிடமிருந்து இது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக சுயாதீன குழுவொன்றை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் ஒரே வாரத்தில் நான்கு சிசுக்கள் மரணம் – வைத்தியர்களின் அசமந்தப்போக்கே காரணம்..?

கிளிநொச்சியில் ஒரே வாரத்தில் நான்கு சிசுக்கள் மரணம் – வைத்தியர்களின் அசமந்தப்போக்கே காரணம்..?

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய்மார்களில் கடந்த வாரம் மாத்திரம் பிறப்பின் போது நான்கு தாய்மார்களின் சிசுக்கள் இறந்துள்ளன. அத்தோடு தாய் ஒருவரின் கருப்பையும் அகறப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எழுத்து மூலம் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளதோடு, மருத்துவர்களின்அக்கறையின்மை மற்றும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகளை வழங்காதுவிட்டடைமேயே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

அதாவது, மருத்துவக் காரணங்களால் தான் தங்களது குழந்தைகள் இறந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் நான்கு குழந்தைகள் இறந்த தருணங்களிலும், பிரசவத்தாயாரது கருப்பை அகற்றப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஒரு குறித்த பயிற்சி மகப்பேற்றியல் வைத்திய நிபுணரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இது தொடர்பில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், எனவே தாம் இது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை ஆரம்பம் – கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று (01) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.

 

இதனை, இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ ( Aruna Rajapaksha ) தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும் இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 நேற்று இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

ஒரு வழிக்கட்டணமாக 22 ஆயிரம் ரூபாவும், இருவழிக்கட்டணமாக 41500 ரூபாவும் அறவிடப்படும்.

இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

“வவுனியாவில் உருவாகவுள்ள சீனித்தொழிற்சாலை இந்தியாவுக்கு எதிரானது என்றால் கட்டாயம் எதிர்ப்போம்.” – செல்வம் அடைக்கலநாதன்

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்ட பட வேண்டாம். வவுனியா மக்கள் வேணாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4 ஆவது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

 

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.

 

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

 

ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.

 

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

 

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.

 

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

 

எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

 

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.

 

கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு !

நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுவரெலியா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில், 11 பேர் குணமடைந்த அதேநேரம் இரண்டு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

 

எனினும் தற்போது அந்த நிறுவனத்தின் மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த மருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

இந்த நிறுவனம் இலங்கைக்கு கடந்த 7 ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றது. இலங்கைக்கு மாத்திரமின்றி 53 நாடுகளுக்கு குறித்த நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.

 

எனினும், துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நட்ட ஈடு வழங்கப்படும்.

மேலும் நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் உள்நாட்டில் கனிசமான அளவு வைத்தியர்களின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60இலிருந்து 63ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு முதுகலை பட்டதாரிகளை வைத்தியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடந்த 03 வருடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்காக தகுதி வாய்ந்த 5,000 மாணவர்கள் நாளை (04) முதல் அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மாணவர்களின் தேவை அதிகரித்தால் பர்ரேட்சையின் Z மதிப்பெண் முறை பயன்படுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இலங்கையின் பணக்காரர்களையன்றி ஏழை மக்களையே பாதிக்கிறது.” – ஹர்ஷ டி சில்வா

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்பது சாதாரண உழைக்கும் மக்களை மாத்திரமல்ல பணக்காரர்களையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு செய்யாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை எதிர்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பொதுவாக இந்த வருங்கால வைப்பு நிதி என்பது உழைக்கும் மக்கள் ஓய்வு பெற்ற பிறகு எதிர்காலத்தில் செலவழிக்க வேண்டிய ஒரே நிதியாகும். இந்த நிதி என்ன ஆனது என்பதை நான் தொடர்ந்து காண்பித்தேன். எடுத்துக்காட்டாக, 2022 ஆம் ஆண்டில் இந்த நிதியின் உறுதியான வருவாய், உண்மையானது. அவர்களின் சேமிப்பின் மீதான வருமானம் -47.

 

உதாரணத்திற்கு, நம் மகளுக்கு திருமணம் செய்து வைக்க 100 பேரை அழைக்க நினைத்தால், இந்த வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருமணத்திற்கு கொஞ்சம் பணம் செலவழிக்கலாம் என நினைத்தால், இப்போது 100 பேருக்கு பதிலாக 50 பேரையே அழைக்கலாம்.

 

அது உண்மை. உள்ளூர் கடன் மறுசீரமைப்பு சுமையும் அதே நிதியில் வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் நியாயம் பற்றிய கேள்வி எழுந்தது. இதை ஒட்டுமொத்தமாக அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால், ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்தலாம். இது உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, பணக்காரர்கள் மற்றும் வங்கி உரிமையாளர்களுக்கும் பொருந்தும்.

இதன் முழு சுமையும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ETF நிதியின் மீது சுமத்தப்பட்டதால் எதிர்க்கட்சியாகிய நாங்கள் அதை கடுமையாக எதிர்த்தோம்…”