04

04

தொடர்பை துண்டித்த ஃபேஸ்புக் காதலி – யாழ்ப்பாணத்தில் இளைஞன் தற்கொலை!

யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இளைஞனின் சடலமானது நேற்றையதினம் (03.07.2023) தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் முகநூல் வழியாக பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவர் தொடர்பை துண்டித்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

இணைய வழி பிரமிட் திட்டத்தால் நேர்ந்த விபரீதம் – பாடசாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த ஆசிரியர்!

அம்பாந்தோட்டையில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விடயம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கரஸ்முல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையின் விளையாட்டு அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இணையத்தின் மூலமாக பிரமிட் திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த ஆசிரியர், இவ்வாறு தற்கொலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்த அவர், ​​விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் கரஸ்முல்லை அறிவித்ததன் பேரில் காவல்துறையினர் சென்று சடலத்தை அகற்றியுள்ளனர்.

இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன்னர் சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பலன் கிடைக்காவிட்டால் உயிரை மாய்க்கவுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேசமயத்தில், இவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலீடு செய்திருப்பது அவரது மனைவி அல்லது உறவினர்களுக்கு தெரியாது.

இது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பலர் இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பணத்தை முதலீடு செய்த பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் ஆலோசனையின் பேரில் கரஸ்முல்ல காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

ஒரு வருடமாக முடங்கிப் போயுள்ள திரிபோஷா திட்டம் !

திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடங்கும் வரை, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று உணவாக முட்டை அல்லது பிற தானியங்களை வழங்குமாறு அரசாங்கத்தின் குடும்ப நலச் சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோருகிறது.

ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது சுமார் ஒரு வருட காலமாக முடங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் திரிபோஷா கொடுக்கும் வரை, முட்டை, தானியங்கள் மற்றும் பிற சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு மாற்று உணவாக வழங்குவது முக்கியம் என்று குடும்ப நலச் சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

குழந்தைகளுக்கான திரிபோஷா தயாரிப்பதற்கு ஏற்ற சோளத்தை பெற முடியாத காரணத்தால், திரிபோஷ தயாரிக்க முடியாது என திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கிடைக்கும் மக்காச்சோளத்தின் இருப்பு திரிபோஷா தயாரிப்பிற்கு ஏற்ற தரத்தில் இல்லை என்றும் நிறுவனம் குறிப்பிடுகிறது.

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சார விடுதிகள் – கண்டுகொள்ளாத பொலிசார் !

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் விபச்சார விடுதியாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொதுமக்கள் பெண்கள் உட்பட மூவரை மடக்கி பிடித்துள்ளனர்.

குளப்பிட்டி சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் வீதியில் உள்ள குறித்த வீடானது விபச்சார விடுதியாக செயற்படுவதாக பொதுமக்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும், சம்பவம் தொடர்பில் பொலிசார் கண்டுகொள்ளாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டை முற்றுகையிட்டு பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

கொக்குவில் குளப்பிட்டி பிரதேச மக்கள் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, அங்கிருந்த மேலும் இருவர் வீட்டின் பின்பகுதியில் இருந்து தப்பி ஓடியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது மட்டுமின்றி யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்தி தொடக்கம் ஆனைக்கோட்டை பகுதி வரை வரிசையாக இவ்வாறான முறையற்ற விடுதிகள் இயங்கி வருவதாகவும் இதுவரையில் எந்தவொரு விடுதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

இந்நிலையில், குளப்பிட்டி கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் நெல்லியடி, மற்றும் யாழ்ப்பாண நகர்ப்புற பகுதியிலும் இவ்வாறு இயங்கிய விபச்சார விடுதிகள் மக்களால் போலீசாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மூடப்பட்டிருந்த நிலையில் யாழ் கொக்குவில் பகுதியில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுண்டிகுளிப்பகுதியிலும் கடந்த மே மாதம் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டிருந்தது. இதன் போது கொழும்பிலிருந்து இப்பகுதிக்கு வருகை தந்து வீடு ஒன்றை வாடகை கேட்டு 10 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாக போலீஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை பார்வையிட்டார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி!

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நீதிபதியுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினர், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குருந்தூர் மலைக்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா காவல்துறையினர் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் எழுத்துமூல அறிக்கைக்காக வழக்கு விசாரணைகளை 2023.08.08 ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்கும் மெட்டா நிறுவனம் !

ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் ட்விட்டர் செயலியை போன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் Threads எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும்.

பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க் வாங்கினார்.

சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று ட்விட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவுகளை பார்க்க எலன் மாஸ்க் அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ட்விட்டரின் உரிமையாளரான எலான் மாஸ்க்கிற்கும் இடையேயான கருத்து மோதலுக்கு மத்தியில் Threads செயலி அறிமுகம் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் – அருட்தந்தை மா.சக்திவேல்

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதி யுத்த காலம் வரை போராட்ட இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டு அரசியலையும் போரியலையும் நியாயமென கூறியவர்கள் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தனது உண்மையான அரசியல் முகத்தை வெளிக்காட்டி போராளிகளை ஜனநாயக துரோகிகள் என வெளிப்படையாகவே கூறும் அரசியல் வாதிகளையே தற்போது காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் முன்னாள் போராளிகளையும், அரசியல் கைதிகளையும் அவமானப்படுத்தும் செயல் எனவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகருக்குள் மதுபான சாலைகள் வேண்டாம் – மக்கள் போராட்டத்தில் !

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரஜைகள் குழு, மகளீர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்தே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் நகர பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை நீடித்தது.

மன்னாரில் உள்ள கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்கள், பாடாசாலை மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான பகுதிகளில் மதுபான சாலைக்கு அனுமதி வழங்குவதினால் அப்பகுதியில் விபத்துக்கள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் காணப்படுவதாக போராட்டக்காரர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், இந்து ஆலய குருக்கள், சட்டத்தரணிகள், நகரசபை உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் இறுதியில் மதுபான சாலை அமைக்கு திட்டத்தை நிறுத்த கோரியும் மன்னார் நகர பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை – த.சத்தியமூர்த்தி

வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக பணியாற்றுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. தற்போதுள்ள நிலையில் புதிதாக பணியாளர்களை உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.