11

11

குழந்தைப்பேறு வேண்டி கை மருத்துவரிடம் சென்ற பெண் மரணம்!

கை மருத்துவம் பார்க்கும் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தை 03 நாட்கள் உட்கொண்ட பின்னர் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசார​ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

சிகிரிய – தியகெப்பில்ல பகுதியை சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குழந்தைப்பேறு இன்மையால், கிரிதலே பகுதியில் கை மருத்துவமும், வழிபாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த யுவதி தனது தாயுடன் சென்றுள்ளார்.

 

இதன்போது, அங்கிருந்த பெண்ணால் யுவதிக்கு 03 நாட்களுக்கான மருந்து வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை உட்கொண்ட யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கு முற்பட்ட பிரச்சினை – மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் !

ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினையொன்றுக்குப் பழிதீர்க்கும் விதமாக மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப் பகுதியில் எரிபொருள் நிரப்புவது தொடர்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலை அங்கிருந்தவர்கள் தீர்த்து வைத்துள்ள போதிலும், இருவருக்கும் இடையில் முரண்பாடு பிற்பட்ட நாட்களில் காணப்பட்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நேற்றைய தினம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நேற்று இரவு முகமூடி அணிந்த கும்பலொன்று எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் அதனைத் தடுக்கச் சென்ற ஊழியரின் சகோதரர்கள் இருவர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற  கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட !” – முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் சரத்வீரசேகரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04.07.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு வருகை தந்த சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07.07.2023 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

 

இவ்வாறான பின்னணியில் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம்(11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி விலகல் போராட்டத்தை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே!, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே !, தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட ! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம்

12 உயிர்களை காவு கொண்ட மனம்பிட்டிய பேருந்து விபத்து – போதைப்பொருள் பாவித்திருந்த சாரதி..?

மனம்பிட்டியவில் இடமபெற்ற பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை எதிர்வரும்24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகதித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சாரதி, போதை பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துக்கு காரணமான பஸ் நிறுவனம் சச்சின் போக்குவரத்து நிறுவனத்தினுடையது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நிறுவனத்தின் பேருந்துகள் எப்போதும் அதிவேகமாகவே பயணம் செய்வதாகவும் – பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்துவது கிடையாது எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.

இதேவேளை அரச பேருந்துகளின் சாரதிக்களும் – தனியார் பேருந்துகளின் சாரதிகளும் போட்டிக்கு பேருந்துகளை ஓடும் போக்கு அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றி காசு பார்ப்பதில் தொடங்கும் இந்த போட்டி பல பயணிகளின் உயிர்களை காவு கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையே தொடர்கின்றது. மேலும் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதற்காக கைதாகும் சாரதிகள் சில நாட்களிலேயே சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக மீண்டும் பேருந்துகளை ஓட்டும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.