14

14

புதிதாக கட்டப்பட்ட Golden Gate Kalyani பாலத்தில் 28 கோடி ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மாயம் – போதைப்பொருள் பாவனையாளர்களே காரணமாம் !

ஜப்பான் அரசின் கடனுதவியில் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் 28 கோடி ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆணிகள் மயமாகியுள்ளன.

போதைக்கு அடிமையானவர்கள் இவற்றை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் ரகசியமாக செப்பு கம்பிகள் அகற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது 28 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்கள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

கடந்த செவ்வாய்கிழமை (11) ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் இது தெரியவந்துள்ளது.

 

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

புதிய களனி பாலத்தில் கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொறுப்பான துறைகளுக்கு உத்தரவிட்டதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

இந்தப் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்ற பரிந்துரைத்துள்ளாதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

இந்நிலைமையின் புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியின் பாதுகாப்பை ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

கட்டுநாயக்கா – கொழும்பு நெடுஞ்சாலையில் மின்சார கேபிள்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு வலைகள் கூட வெட்டி இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோல்டன் கேட் கல்யாணி பாலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 2021 நவம்பர் 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண் பொலிஸ் நிலையத்தில் வைத்து மரணம் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

இளைஞன் உயிர் மாய்த்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே. தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் (12) ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார், இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு நேற்றைய தினம் (13) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்

 

அதன் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் சென்றிருந்த பெண்மணி, திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

 

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் பெண்மணியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது, பெண்மணி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

 

உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

 

அதன் போது, வயோதிப பெண்மணியின் உறவினர்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் தனியாகவே வசித்து வந்ததாகவும், மலர் என அழைக்கப்படும் அவரது வயது 75 என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை உயிர்மாய்த்த இளைஞன், கடந்த சில தினங்களாக மனவிரக்தியில் காணப்பட்டதாகவும், 12 ஆம் திகதி இரவு சத்தி எடுத்தார் எனவும், அவருக்கு தேநீர் ஊற்றி கொடுத்து விட்டு, தூங்க சென்ற பின்னர் இளைஞன் இவ்வாறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை என வயோதிப பெண்மணி பொலிஸாருக்கு தெரிவித்து, இளைஞனின் உயிர் இழப்பில் கவலையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்

சுகாதார அமைச்சின் ஊழலால் நாட்டில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள் – இரா.சாணக்கியன்

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு ஒழிப்பு ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

 

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்

 

பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலையாகும். அந்த வைத்தியசாலையில் 10 எம்.எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

 

அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள்; மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

 

அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் !

வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான காணியைப் பெற்றுத்தருமாறு, நான் யாழ் மாவட்ட செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் ஃபேர்-2023 நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

 

இதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்கவும், பல்வேறு கடத்தல்களில் சிக்குபவர்களை தடுக்கவும், தொழில் வாய்ப்புகளுக்கு பயிற்சி பெற்றாதவர்களுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லவும், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு தேவையான விழிப்புணர்வு வசதிகளை ஏற்படுத்தவும் நாம் செயல்பட்டு வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.

 

கொழும்புக்கு வந்து எமது அமைச்சின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் நாம், நீங்கள் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றோம்.

 

ஊழியர் சேமலாப நிதி , ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பான விடயங்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தூதரகத் துறையின் சேவைகள் முதலானவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் குளோபல் ஃபேர்-2023 யில் செய்யப்பட்டுள்ளன – என்றார்.

குருந்தூர்மலையில் பொங்கல் செய்ய சென்ற தமிழ் மக்களை தடுத்த பௌத்த பிக்குகளும் பெரும்பான்மை மக்களும் !

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

குறித்த பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

 

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.

அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி வேண்டினர்.

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்தனர். தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தீமூட்ட தயாரான போது, முல்லைத்தீவு காவல்துறையினர் பொங்கலுக்கு தடையேற்படுத்தினர். சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான நேர்முக தேர்வு !

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான நேர்முக தேர்வு யாழ்ப்பணத்தில் நடைபெறவுள்ளது.

அரபு நாடுகள் உடன் மலேசியா,சிங்கப்பூர், யப்பான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலைகளுக்கான நேர்முக தேர்வு வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நேர்முக தேர்வானது எதிர்வரும் 15.07.2023, 16.07.2023 ம் திகதிகளில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அங்கீகாரம் பெற்ற 25 பதிவுசெய்யப்பட்ட முகவர் நிறுவனங்கள் பங்குபெறவுள்ளதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற விரும்பும் தொழிலாளர்கள் தங்களது கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரை உடன்நாடவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்டத்தரணிகள் சங்கம் எம்.ஏ. சுமந்திரனுக்கு பயந்து போயிருக்கிறதா..? – சரத்வீரசேகரக கேள்வி..!

நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நடந்துகொள்ளும் முறைமை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குண்டர்களால் பௌத்த உரிமை நாசமாக்கப்படுகின்றது. அவற்றை வடக்குக்கு சென்று பார்த்துவருமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

பௌத்த உரிமைகளை நாசமாக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்காக முன்னிலையாகுவதற்கு முன்னர், இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்க்குமாறும் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தை மதிக்கிறோம்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், உயர்நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா, அவருக்குப் பயந்து தானா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இலங்கையின் நீதித்துறை குறித்து வெளியிடப்பட்ட அவமானகரமான மற்றும் அருவருப்பான அறிக்கைகள் தொடர்பில், தானாக முன்வந்து ஜெனீவா சென்று கண்டித்ததாகவும் சரத் வீரசேகர அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.