18

18

நாடு திவால் நிலைமைக்குச் சென்றமை தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவில் எதரிக்கட்சியினருக்கே தலைமை பதவி வேண்டும்.” – அநுரகுமார திஸாநாயக்க

நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவி, எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு திவால் நிலைமைக்குச் சென்றமைக்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கமானது, மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன்தான் இயங்கி வருகிறது. இந்த கட்சியின் செயலாளர்தான், நாடு திவால் நிலைமைக்குச் சென்றமை தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ தான், இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர். அந்தக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் காணப்படுகிறார். நாடு திவாலானமைக்கான உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில், அதே தரப்பிடம் இந்த பொறுப்புக்களை ஒப்படைக்கக்கூடாது.

இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனில், எதிர்க்கட்சியிடம்தான் தெரிவுக்குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பொருளாதாரக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களுக்கு பதிலாக வேறு நபர்களின் பெயர்கள்தான் குறிப்பிடப்படும்.

எனவே, உண்மைகள் வெளியே வரவேண்டுமெனில், எதிர்க்கட்சியினருக்கு தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் விரைவில் – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் உறுதி !

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

புதிய பயங்கரவாத சட்டம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை வரைவுக் குழு இன்று(18) மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் இதுதவிர, ஊழல் ஒழிப்புச் சட்டம், நாளை 19ஆம் திகதி பாராளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆப்கான் பாடகி பாகிஸ்தானில் வைத்து சுட்டுப்படு கொலை !

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத ஆயுத தாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி(38). இவர் பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

பாடகி ஹசிபா நூரி (வயது38) கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கான் தலிபான்களிடம் இருந்து தப்பித்து, பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஒரு நேர்காணலில், தலிபான்களால் தனக்கும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி பேசியுள்ளார். அவர் தனது தாயுடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 14 இலட்சம் அகதிகள் பாகிஸ்தானில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. பாடகி ஹசிபாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“இலவச சுகாதாரசேவைகள் குறித்து நம்பிக்கை இழக்ககூடாது.“ – இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

சமீபத்தைய சுகாதார பிரச்சினைகள் குறித்து மக்கள் அச்சமடையக்கூடாது என இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தரம் குறைந்த மருந்துகள் தொடர்பிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மக்கள் அவ்வாறான சம்பவங்களினால் அச்சமடையக்கூடாது இலவச சுகாதாரசேவைகள் குறித்து நம்பிக்கை இழக்ககூடாது என இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் சுகாதார துறை சவால்களை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஒரு சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து முழு சுகாதார சேவையையும் மதிப்பிடுவது நியாயமில்லை என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு தரமற்ற மருந்துகளே காரணமா என உரிய விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் தீர்மானங்களிற்கு வரவேண்டும் என வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அரசாங்க மருத்துவமனைகளிற்கு கிசிச்சைகளிற்காக தொடர்ந்தும் வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களனி பாலத்தின் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டசம்பவம் – தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள் !

புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதனை புகையிர நிலையங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ பொலிஸாருக்கோ மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதால், விசேட அதிரடிப் படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன.

புகையிர கடவைகளில் காணப்படும், சிறிய இரும்பு கூட திருடப்படுகிறது. இதனால், புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் காணப்படுகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த விசேட செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், களனி பாலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கணக்கெடுப்பு சரியானதா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது.

எங்கிருந்து இந்த புள்ளிவிபரங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியாது.

எமது அமைச்சு இதுதொடர்பாக கூறவில்லை. இந்த நிலையில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வைத்தே இவர் இந்த புள்ளிவிபரங்களை தயாரித்துள்ளார்.

எவ்வாறாயினும், களனி பால விவகாரம் தொடர்பாக விசாரணைகள் தற்போது இடம்பெற்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை பாதுகாக்க விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

இதுதொடர்பான சரியான புள்ளிவிபரங்களை நான் விரைவிலேயே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கிறேன். என்றார்.

 

“நான் கற்பித்ததை மாணவி கிரகிக்காததால் எஸ் லோன் பைப்பினால் தாக்கினேன்.” – தீவக பகுதி அதிபரை விடுவித்தது நீதிமன்றம் !

நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

9 வயது மாணவியை தாறுமாறாக அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை முற்படுத்தப்பட்ட போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எஸ் லோன் பைப்பினால் மாணவியை 20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக மேலதிக வகுப்பு நடத்தியாகவும், அப்போது ஒரே விடயத்தை 3 தடவைக் சொல்லியும் தவறிழைத்ததால், நிதானமிழந்து மாணவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் அதிபர் தெரிவித்துள்ளார்.

நிதானமிழப்பதும் ஒரு வகை நோயே, இதற்கு உளவள சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்திய நீதவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் அதிபரை விடுவித்து, வழக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இதேவேளை, இந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய 9 மாணவிகளுக்கும் அதிபர் அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.