மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது தென்னிலங்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தினால், மக்கள் மத்தியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்தோடு, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளதாகவும், அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். எனினும், இந்தியாவுடன் தற்போது காணப்படும் இராஜதந்திர தொடர்புகள் காரணமாக எம்மால் அதனை உதாசீனப்படுத்த முடியாது.
எனவே, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எனவே இது மக்கள் மத்தியில் மீண்டும் இன மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும்.
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கமும் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நாமும் அது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் முதலில் அரசாங்கத்தின் முன்மொழிவே அவசியமாகும்.
சர்வகட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனால் மாகாணசபைகளில் ஆயுதங்கள் அற்ற பிரஜா பொலிஸ் சேவையை வழங்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.
எனவே, இதனைப் போன்ற யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தினால் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று நாம் கட்சி ரீதியாக கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்போம்.
எவ்வாறிருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை வரலாற்று சம்பவங்கள் ஊடாக நன்கு அறிந்திருக்கின்றோம்.
எனவே, மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எனவே, அரசாங்கம் இது குறித்த முன்மொழிவுகளை முன்வைக்கும் போது, முறையான திட்டமிடல்களை வழங்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.
எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் சர்வகட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். அரசாங்கம் யோசனையொன்றை முன்வைத்தால் , கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.