யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றமையினால் எதிர்வரும் ஐந்து வருடங்களில் வட மாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை இல்லாது போய்விடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கூறியுள்ளார்.
எனவே 13 ஆவது திருத்தத்தில் உள்ள பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இருப்பை நிலை நாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர்ந்த ஏனைய பீடங்கள் பெரும்பான்மை மாணவர்களை கொண்டுள்ளமை போன்று வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாற்றக்கூடிய வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு எனக் குறிப்பிட்ட வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் , தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை நோக்கியதாக அவர் கூறினார்.
கிழக்கு மாகாணம் மூன்று சமூகங்களின் பிரதேசமாக உள்ளதுடன் முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்திலும் பார்க்க கூடுதலாக காணப்படுவதாக தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொண்டால் நிலங்களையும், கடல் வளங்களையும் பயன்படுத்தி பொருளாரத்தில் பலமடைய முடியும் என்பதுடன் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் பத்மநாதன் தெரிவித்தார்.
எனவே உரிய முறையில் மாகாணசபை அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அனைத்து கட்சிகள் உட்பட கல்வியலாளர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.