30

30

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் மூன்றாவது நாள் நடைபவனி மன்னாரில் !

மலையக எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை   பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான நடைபவனி மன்னாரை வந்தடைந்தது.

இந்த நடைப்பயணம் இன்று காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

அப்போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பேரணி காணப்பட்ட இடத்துக்கு சென்று, நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆசி வழங்கியதோடு தொடங்கிய நடைபவனி, முற்பகல் 11 மணியளவில் மன்னார் நகரை அடைந்தது.

அதனையடுத்து, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்த பேரணியினரை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

இந்த நடைபவனியின் 4ஆம் நாளான நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து முருங்கன் நோக்கி பேரணியினர் பயணிக்கவுள்ளனர்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில், ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த  வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், காலை 11  மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்தது.

மலையக மக்கள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்களின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை அந்த தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், நடைபயணம் மூன்றாம் நாளான இன்றைய தினம் (30) காலையில் மீண்டும் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகி, மன்னார் நகரை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.