August

August

காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு !

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.

இத்தினத்தன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதிக்கட்ட போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2300 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக எதிர்வரும் புதன்கிழமையன்று வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அவர்கள், தமது உறவுகளுக்கான நீதி நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

அதேபோன்று உள்ளகப் பொறிமுறையின் மீது தாம் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், நம்பத்தகுந்த சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தும் அதேவேளை, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை உள்ளடக்கி தெற்கில் இயங்கிவரும் அமைப்பான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளது.

அதுமாத்திரமன்றி அன்றைய தினம் மாலை ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போவதற்கு இடமளிக்காதிருப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுகூரல் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

வவுனியாவில் 162,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட கோயில் மாம்பழம் !

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

Gallery

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இவ் மாம்பழத்தை வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் கடந்த 13.08.2023 அன்று விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் இடம்பெற்ற ஏலத்தில் மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

“குருந்தூர் மலை வழிபாடு தொடர்பான பிரச்சினையை தீர்க்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.” – பேராசிரியர் சன்ன ஜயசுமன

குருந்தூர் மலையில் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதிகரித்து வருவதால் அதற்கு நிரந்தரமான தீர்வொன்றை பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்மொழிந்துள்ளார்.

அவருடைய முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குருந்தி மலையானது (குருந்தூர் மலையானது) தொல்பொருளியல் பகுதியாகும். அதற்கான சான்றாதாரங்கள் பல காணப்படுகின்றன. ஆகவே அந்தப் புராதன இடத்தினை பேணுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.  எனினும், குறித்த பகுதியில் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வழிபாடுகளைச் செய்துவந்ததாக வரலாற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.

ஆகவே, தற்போதைய நிலைமையில், இந்த விடயத்தினை மையப்படுத்தி பௌத்தர்கள், இந்துக்கள் இடையே முரண்பாடான நிலைமைகள் வலுவடைவதற்கு இடமளிக்காமல், நிரந்தரமானதொரு தீர்வினை காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில், குறித்த மலையின் கீழ்ப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் தொல்பொருளியல் விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், இரு சமயத் தலங்களை நிர்மாணிப்பதே பொருத்தமானதாகும்.

குறிப்பாக, மலையின் கீழ்ப் பகுதியில் தலா ஒவ்வொரு ஏக்கர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்து மற்றும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதன் ஊடாக இரு தரப்பினரும் தமது இறை நம்பிக்கைக்கு அமைவாக வழிபாடுகளை முன்னெடுக்க முடியும்.

இதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். அதன் மூலமாக பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என்றார்.

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” – துரைராசா ரவிகரன் விசனம் !

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” என  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28,626 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பானது 2415 சதுர கிலோ மீற்றர் தரையாகவும், 202 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர்ப் பிரதேசமாகவும் காணப்படுகிறது.

இதில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் 222006 ஏக்கர், 36.72 சதவீதமான நிலம் வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 167484 ஏக்கர் 30.37 நிலப்பரப்பை வனவள திணைக்களம் மேலதிகமாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது காடு பேணல் சட்டத்தின் கீழ் ஒதுக்கக்காடுகளாக மீண்டும் 42,631 ஏக்கர் 7.15 சதவீதமான நிலப்பரப்பை வனவள திணைக்களம் கோரியுள்ளது. அவ்வாறு குறித்த நிலப்பரப்பும் வனவள திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.

மிகுதி நிலப்பரப்பில் பெரும்பகுதியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியமணல் திணைக்களம், படையினர் உள்ளிட்ட தரப்பினர் ஆளுகை செய்கின்றனர்.

குறிப்பாக வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில், மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைக்காக சுமார் 50,000 ஏக்கர் காணி தேவை எனவும், அவற்றை விடுவித்து தருமாறு மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் முறையான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், வேறு திணைக்களங்கள் காணிக் கோரிக்கை முன்வைக்கும்போதும், குடியேற்றங்களுக்காக காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் காணிகளை விடுவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருக்க காணி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

நீண்ட காலமாக இவ்வாறு மேய்ச்சல் தரைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோதிலும் இதுவரை மேய்ச்சல் தரைக்குரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அந்த வகையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் குடியிருக்க காணி இல்லாததோடு, கால்நடைகளுக்கும் மேய்ச்சல் தரைக்கான காணிகள் இல்லை என்கிற நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.

பொலிஸார் எடுத்த mugshot புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருக்கிறார் – ஜோ பைடன்

போலீஸார் எடுத்த மக்-ஷாட் (பொலிஸ் பதிவு படம்.) புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீஸார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை போலீஸார் எடுத்த ‘மக்-ஷாட்’ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

 

இந்த நிலையில், ட்ரம்ப்பின் புகைப்படம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ட்ரம்ப் மிகவும் அழகான நபர் என்று பதிலளித்துவிட்டு சென்றார்.

யாழ்ப்பாணத்தில் மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் !

மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று 24 ஆம் திகதி பொழுதை கழித்துள்ளனர்.

அதன் போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 6 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் திருட்டுக்கும்பல்களின் அடாவடி !

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருட்டு கும்பல் ஒன்று கத்தியினை காட்டி மிரட்டி அடாவடி புரிந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணிளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தியினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக அடாவடிபுரிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருட்டுக் கும்பல் அடாவடி - அதிகாலையில் நடந்த சம்பவம் (படங்கள்) | Theft Police Investigating Srilanka Jaffna

எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய் குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

இதே போன்று நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி அச்சுறுத்தி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவு !

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வடமாகாணத்தில் தற்போது தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விளக்கியிருந்தார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவது சரியானது.” – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

“பொலிசாரை கண்டபடி விமர்சித்து விட்டு இன்று அவர்களிடமே தஞ்சமடைந்துள்ளார் கஜேந்திரகுமார்.” – உதய கம்மன்பில

துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிசாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,  கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“பொலிசாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது பொலிசாரை தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்பிற்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.

வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியிலும் இனவாத கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார். கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முன்கூட்டியே பெருமளவு காவல்துறையினரை தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.

கஜேந்திரகுமாருக்கு துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிசாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும்” என சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடத்தை  நேற்று முற்றுகையிட்ட தமது நகர்வு இலங்கையில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையின் ஆரம்பம் என பௌத்த பிக்கு தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழு சூளுரைத்துள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்களை முற்றுகையிடுமாறு கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்த நகர்வை அடுத்து நேற்று இந்த முற்றுகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தை அடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடப்பகுதியில் அதிகளான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.