01

01

போதைப்பொருள் கடத்தியதற்காக குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு !

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக குவைத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையரின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹல்மில்லேவ, அதிராணிகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வயது 43 நபருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் தனது பெற்றோருடன் 14 வருடங்களுக்கு முன்னர் பிரியங்கரகம என்ற கிராமத்தில் குடியேறி தனது முதல் மனைவியைப் பிரிந்து மறுமணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், அவர் களுத்துறைக்கு இடம்பெயர்ந்ததாகவும் ஆனால் அவரது முகவரி அவரது உறவினர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, குற்றவாளியின் தாயாரின் கோரிக்கைக்கு அமைய சடலம் கையளிக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனுராதபுரத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் அவர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என குவைத்தில் உள்ள இலங்கை தூதுவருக்கு அறிவித்துள்ளார்.

29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் !

2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் எஸ்.அன்வர் இன்று (31) உத்தரவிட்டார்.

தற்போது ஓய்வு பெற்ற 61 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, ​​அவருக்காக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

இதற்கு முன்னர், நான்கு மாணவிகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர், மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் போது, ​​அவர் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் பேசவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்  அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை  ரணில் விக்ரமசிங்க விளக்குவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் தடையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.