05

05

திருமண நிகழ்வின் மின்சார கட்டணம் 2.6மில்லியன் ரூபாவை செலுத்தாத நாமல் ராஜபக்ச !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் மின்கட்டணம் செலுத்தாதது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு  இலங்கை மின்சாரசபையை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து துல்லியமான விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர் அந்த தகவல்கள் தான் பதிலளிப்பதற்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நாமல்ராஜபக்சவின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் 2.6மில்லியன்  என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் நளின்ஹேவகே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கே  இலங்கை மின்சாரசபை இதனை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மின்சாரபாவனைக்கான கட்டணம் இன்னமும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ச இன்னமும் குறிப்பிட்ட மின்கட்டணத்தை செலுத்தவில்லை என அறிந்த பின்னர் உண்மையை அறிய முயன்றதாக நளின்ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாமல் குறிப்பிட்ட மின்கட்டணத்தை செலுத்தவில்லை என நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சிலமாதங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தேன் – அதற்கு நாமல் அவ்வாறான மின்கட்டணம் குறித்து தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்திருந்தார் என நளின்ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை அளித்துள்ள பதிலில் வீரகெட்டிய வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு விளக்குகள் மின்பிறப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியமைக்காக 2.6 மில்லியன் செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அதனை உரிய நபர்கள் செலுத்தவில்லை என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இருந்து 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்பு திருட்டு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சீமெந்து தொழிற்சாலைக்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டு இருந்த குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய அண்மையில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் வீதிவிபத்துக்களில் 05 பேர் பலி !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரை, திக்வெல்ல மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எம்பிலிபிட்டிய மித்தெனிய வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பெண் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், கலகெதர கந்தகும்புர பிரதேசத்தில் கப் ரக வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகரை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அக்கராயமன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கப் ரக வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, திக்வெல்ல நகருக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 84 வயதுடைய பெண் ஒருவர் காரில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.