06

06

அதிகரித்த வறட்சி – வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 90ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு !

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 27 ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

37 ஆண்டுகளுக்கு பின்பு 1,800 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படுகிறது தலைமன்னார் துறைமுகம்!

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த துறைமுகம் அழிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.முதலீட்டின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,800 மில்லியன். துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு இணையாக, துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்படும்.இந்த புதிய அபிவிருத்திகளின் கீழ், நவீன பயணிகள் முனையம் மற்றும் கிடங்கு வசதிகள் கட்டப்படும். தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கை யாத்ரீகர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கும் குறைந்த கட்டணத்தில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வசதியாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையிலான சரக்கு பரிமாற்றத்தை எளிதாக்குவதுடன், வட இலங்கை மக்களின் உற்பத்திகளை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.