13

13

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது – யாழில் சம்பவம் !

தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை !

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும்போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இருப்பினும், முற்று முழுதாக போதைக்கு  அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரித்து சிகிச்சை அளிப்பதற்கென சிகிச்சை நிலையம் ஒன்று வட பகுதியில் இல்லை.  அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின், அதற்கு பல்வேறுபட்ட வசதிகள் தேவையாக இருக்கின்றன.

இந்நிலையில், இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

அதேவேளை புதிதாக ஒருவர் போதைக்கு அடிமையாகாமல் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

‘பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கே இலாபம்.” – மு. சந்திரகுமார்

“மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்றே.” என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (12) வேரவில் பகுதியில் பத்தாவது நாளாக பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ந்தும் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற  பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவுற்றுள்ளது. 

குறித்த நிறுவனமொன்றினால் கடற்கரை கிராமங்களான மேற்சொன்ன கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழம் வரை சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது மிகப்பெரும் ஆபத்தை விரைவில், கிராஞ்சி, வலைப்பாடு கிராம மக்களுக்கு உடனடியாகவும் ஏனைய அயல் கிராம மக்களுக்கு படிப்படியாகவும் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. பொதுமக்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை உருவாகும்.

ஏனெனில், கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து குறித்த பிரதேசத்தில் உள்ள நன்னீர் உவர் நீராக மாற்றமடையும். பின்னர் நிலம் உவராக மாறும். இதன்போது மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை உருவாக்கும். மேலும் தற்போது கிராஞ்சி குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரை மூலமாக கொண்டே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.  மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்றே. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள்  நன்மை பெறுவார்களே தவிர  அந்த மக்கள் வாழ்விழந்து போவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.