14

14

அரச வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் தரையில் வீழ்ந்து இறந்த சிசு !

சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால் நாட்டில் அண்மைக்காலமாக பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளது. மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர்; பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் தரையில் வீழ்ந்துவிட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே வீழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, வாகனத் திருட்டு மற்றும் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையில் சமீபத்திய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடன் தொடர்புடையது.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், போதைப்பொருள் குற்றவாளிகள் நாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பொலிஸாரால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.போதைப்பொருள் குற்றவாளிகளை கையாள்வதன் மூலம் குற்ற விகிதம் கணிசமாக குறையும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கான ஆழமான அறிவை வழங்குவதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகள் கைது !

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் வார இறுதியில் போலந்திற்குள் செல்ல முயன்றன என போலந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் குடிமக்களை போலந்திற்கு கொண்டுசெல்வதற்கு உதவ முயற்சித்த மூன்று உக்ரேனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்கனவே 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அடையாளங்களோ மேலதிக விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

“13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும்.”- பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களின் ஆணையை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை அறிவித்துவிட்டு 13வது திருத்தத்தை  முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கோருங்கள் என அவர்தெரிவித்துள்ளார்.

மக்கள் அதற்கான அதிகாரத்தை வழங்க தயார் என்றால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தற்போது அதற்கான ஆணையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இதற்கான ஆணையில்லை, அவர்கள் தேர்தல் மூலம் இந்த பதவிகளை பெறவில்லை முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலர் மூலமே அவர்கள் இந்த ஆதரவை பெற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கோயிலில் ஏலமிடப்பட்ட மாம்பழத்தை 95,000 ரூபாவிற்கு வாங்கிய லண்டன் தம்பதியினர் !

வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நடைபெற்ற ஏலத்தின் போது மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.
வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் நேற்று (13) விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் இடம்பெற்ற ஏலத்தில் மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச் சென்றதுடன் இவ்வளவு தொகைக்கு மாம்பழம் ஏலம் விடப்படுவது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் பெறப்படும் பணம் ஆலயத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.