16

16

” நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன்.” – மனோ கணேசன்

” நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக் கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது,

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன?நீர் கூறுவதை கேட்டுக் கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக் கொண்டு வாயை மூடிக் கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்.பிக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது.

ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து மூடப்பட்ட பாடசாலைகள் – 85 வீதமான மாணவர்களிடம் குறைந்துள்ள எழுத்தறிவு திறன் !

கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.கல்வி அமைச்சின் தலைமையில் சுமார் 800 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பபெற்றதாகத் தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியையும், பாலர் பாடசாலைகளை இயக்குபவர்கள் தொடர்பில் கடுமையான அவதானங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.கொழும்பில் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “கல்வி அமைச்சின் தலைமையில் 800 அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டிற்கு அமைய தரம் 3 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 85 வீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை. இது அவர்களின் இடைநிலை பாடசாலையின் மாற்றத்துக்கும் அதற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இன்றியமையாததாகும்” என்றார்.“ தேசிய வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை குறிப்பாக ஆரம்பத் தரங்களுக்கு அதிகரிக்க வேண்டிய அவசர தேவை காணப்படுகின்றது.

சிறுவர்களின் அடிப்படைக் கற்றலை ஊக்குவிக்கும் அதேநேரம், கல்வியில் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய திறன் மிக்க மனித வளத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

“ கொவிட் பரவலால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஆசிரியர்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். இவ்வாறு கற்றல் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். “ கற்றல் முறைமை மற்றும் பாடசாலை தரங்களில் முதலில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. முக்கிய மாக ஆரம்பப் பிரிவில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.இதேவேளை, “ நாடளாவிய ரீதியில் பல பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வாறான பயிற்சிகளைப் பெற்று கற்பிக்கின்றார்கள் என்பதை ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது. உயர் தர பரீட்சையைவிட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமான தொன்றாக எமது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. இதனை முற்றிலும் மாற்ற வேண்டும். ஏன் இந்த மாற்றங்களை செய்வதற்கு விடுகிறார்கள் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.இங்கு உரையாற்றிய யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் கூறுகையில்,

“ எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் சமூகப் பொருளாதாரத் திறன்களே சிறுவர்கள் தமக்கான மற்றும் தமது குடும்பங்கள், சமூகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன என்று குறிப்பிட்டார்.“நாடு எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான இன்னல்களால் கல்வியை இழப்பவர்கள், மெதுவாகக் கற்றுக்கொள்பவர்கள், கல்வியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின் கற்றல் சாதனையில் விரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சின் முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்” எனத் தெரிவித்தார்.இதேவேளை, கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்கள் மற்றும் அவ்வப்போது கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை மீட்பதற்கு உதவி செய்யும் தேசிய முயற்சிக்கு கல்வி அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் தலைமை தாங்குகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதத்திற்கும் குறைவான தொகையையே இலங்கை தற்போது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இது கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 முதல் 6 வீதங்களாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச அளவுகோலுக்கு கீழ் காணப்படுவதுடன் தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகவும் குறைவாகவும் காணப்படுகின்றது.கற்றல் நெருக்கடியானது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்களையும் ஆரம்பத் தரங்களில் உள்ள சிறுவர்களையும் பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.”கற்றல் மீட்பு” தொடர்பில் அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன கடந்த ஜூலை மாதம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன் குறைபாடுகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கு 9 மாகாணங்களிலும் செயலமர்வுகளை நடத்தின.இதன் இறுதி நிகழ்வு 16 ஆம் திகதி புதன்கிழமை கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் மற்றும் அரசாங்க அபிவிருத்திப் பங்காளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதிகரித்த வரட்சி – வவுனியா வடக்கில் குடிநீர் கூட இல்லாமல் திணறும் மக்கள் !

நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக, வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “ வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் அதிகமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.

மேலும், இம்மக்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுவதனால் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது” என்றார்.

பாடசாலை மாணவியை வீட்டிற்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது !

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார்இ ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார். அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார். அதன்போதே ஆசிரியர் அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனைக்காக மாணவிஇ பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிப்பு !

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 11,333 விவசாயிகளின் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, வறட்சியினால் நாடளாவிய ரீதியில் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை இதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.சிறுபோகத்தில் 06 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிக காணியில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அழிவடைந்த நெற்பயிர்களுக்காக ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதனிடையே, இழப்பீட்டை அதிகரிப்பதற்கான யோசனைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் இரண்டு நாட்கள் வரை சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை !

யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இந்நிலையில், எனது மகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததால் ஆட்டோ சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறுமியின் தாயார் பொலிசில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி ஒருவரை வழமையாக ஆட்டோவில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். இதனைப் பயன்ப டுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.இந் நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதே வேளை குறித்த சிறுமி துஸ்பிரயோகத்துக்குள்ளானது சட்டவைத்திய அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் இரண்டு நாட்கள் வரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.