18

18

மெல்பேர்னில் பௌத்தமதகுரு மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் !

மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

மெல்பேர்னின்  தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் மடாதிபதியான நாவோடுன்ன விஜித நாணயக்கார தேரர்  16வயதிற்குட்பட்டவர்களுடன்  உடலுறவில்  ஈடுபட்டது அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டது உட்பட 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

காவல்துறையினர் இந்த வாரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.மூவர் பௌத்தமதகுருவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் 1996 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட மதகுரு கெய்ஸ்பொரோ ஆலயத்தில் இருந்தவேளை இடம்பெற்றுள்ளன.

தேரர் பல சிறுமிகளிடம் அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டார் என காவல்துறையின் விசாரணை பிரிவினர்  தெரிவித்துள்ளமை  நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பௌத்தமதகுரு காவி உடையுடன் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இலங்கையை விட்டு வெளியேறும் ஆசிரியர்கள் – எட்டு மாதங்களில் 5000 ஆசிரியர்கள் வெளியேற்றம் !

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை சம்பளமற்ற விடுமுறையில் சென்றவர்கள் உட்பட 5,000 ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.

தற்போது கல்வித்துறையில் ஆசிரியர்கள் தொழிலை விட்டு வெளியேறி வெளிநாடு செல்வதற்கான போக்கு அதிகரித்து காணப்படுவதாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நிலைமையை திறம்பட கையாளாவிட்டால், அது எதிர்காலத்தில் கல்வித் துறையை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்யும் என்று அவர் எச்சரித்தார்.

தொழிலை விட்டு வெளியேறிய பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பவர்களாக இருந்ததாக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இவ்வாறான பாடங்களுக்கு இருக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் வெளிநாடு செல்ல விரும்பி இராஜினாமா செய்துள்ளமையால் கிராமப்புற பாடசாலைகளில் இந்த நிலைமை வலுவாக உணரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசுத் துறைக்கு புதிய ஆட்களை எடுக்க வேண்டாம் என்று அரசு எடுத்த முடிவை அடுத்து, ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவெடுப்பது, இங்குள்ள கல்விக்கு சாவு மணி அடிப்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் தற்போது ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதாக  தெரிவித்த அவர் , கல்வி அமைச்சு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறினால், அது நாட்டின் மாணவர்களுக்கு ஒரு பாரிய அடியாக அமையும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரிக்கும் வரட்சி – குடிநீர் இல்லாமல் திண்டாடும் இரண்டு லட்சம் மக்கள் !

வறட்சியான காலநிலை காரணமாக 50,000 ஏக்கர் நெற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெற்செய்கை சேதம் தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய (18) நிலவரப்படி 15 மாவட்டங்களில் 60,943 குடும்பங்களைச் சேர்ந்த 210,652 பேர் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, ஒரு சில மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம் !

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் !

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி, பாற்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கில்கள், சம்பவத்துக்கு பயன்படுத்திய இரண்டு வாழ்கள், ஒரு கை கோடாலி, ஒரு இரும்பு கம்பி, மடத்தல், அத்தோடு சம்பவத்துக்கு பயன்படுத்திய பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை செய்தபோது கல்வியங்காடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் அனுப்பிய பணத்தின் மூலமே சம்பவத்தை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

அத்தோ இவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் , முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு விசாரணையில், அகழ்வுப்  பணி தொடர்பான பாடிட்டு அறிக்கையினை தொல்பொருள் திணைக்களத்தினர் சமர்ப்பித்தனர் .

இதனைத் தொடர்ந்து  குறித்த வழக்கு விசாரணையை  இம்மாதம்  31 ஆம் திகதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கையில் ” அகழ்வு பணிக்காக முல்லைத்தீவு கச்சேரிக்கு இதற்கான நிதி கிடைக்கப் பெறாத நிலையில் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ள முடியாது இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மன்றில் பாதீட்டினை தாக்கல் செய்து அகழ்வு பணியினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.  பேராசிரியர் புஷ்பரெட்ணம்அவர்களும் இந்த அகழ்வு பணியில் ஈடுபடுவதற்கு தனது சம்மதத்தை தெரிவித்து இருந்த நிலையில் நிதி கிடைக்காத அடிப்படையில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட முடியாதுள்ளது.

எனவே இந்த வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன்  அத்தோடு இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத  பிரதேச செயலாளர் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச சபையினர் மின்சார சபையினர் அடுத்த தவணை நீதிமன்றத்தில் கட்டாயம் பிரசன்னமாகி  அகழ்வு பணியினை மேற்கொள்வதற்கான ஆவண செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.