20

20

பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கு அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை இம்மாதம் 16ஆம் திகதி வழங்கியுள்ளார்கள்.

கடிதம் வழங்கப்பட்டு இதுவரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறித்த கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மதுபானசாலை அமையப்பெறும் இடத்திற்கு 100 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலைகளோ, தேவாலயங்கள், ஆலயங்கள் இருக்க கூடாது என்பது விதிமுறையாக இருக்கின்ற போதும் குறித்த இடத்திலிருக்கும் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை எனவும், இதனால் குறித்த கிராமத்தில் பாடசாலை அருகிலிருப்பதனால் பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலையும், பாடசாலை இடைவிலகும் நிலையும் உருவாகும்என குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணிகள் விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுக்காத வன்னி நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள்!

வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தவைமையில் இன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப் படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் குறித்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் காணி உத்தியோகஸ்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் முன்னால் நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கூட்டத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். இவ்வாறான கூட்டங்களுக்கு; உரிய நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரச தரப்பு பிரதிநிதிகள் வாய்ப்பு வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் வாக்குகளுக்காக போலி நாடகம் போடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

தழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் தழிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தழிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான நிலையில் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத மாகாண குழுவொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சார்பானவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே மாகாண சபை குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் – கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார். சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற மாணவனே உயிரிழந்தார். கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார்.எனினும், இந்த வருடத்தில் தன்னால் கல்வியை தொடர சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டு, அடுத்த வருடத்திலிருந்து பல்கலைகழக கல்வியை தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.மனஅழுத்தத்திற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுள்ளார்.இந்த நிலையில் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் குறித்த தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பல்கலைக்கழக – பாடசாலை நண்பன் ஒருவரிடம் தேசம் இணையதளம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது ” தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறவில்லை எனவும் பல்கலைக்கழக பரீட்சை கூட தொடங்காததால் அது தொடர்பில் உளநெருக்கடிக்கு ஆளாவதற்கான வாய்ப்பும் இல்லை. எனவும் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மூன்று மாத காலங்களிலேயே குறித்த மாணவன் இடைநிறுத்தி விட்டு வெளியேறியதாகவும் அதற்கு அவருக்கு தொடர்ச்சியாக இருந்துவந்த தலையிடி சார்ந்த பிரச்சனைகளே காரணம் எனவும் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பர் தெரிவித்தார்.

குறித்த தலையிடி நோய் அவருக்கு உயர்தர பரீட்சை முடிந்த காலத்தில் இருந்தே இருந்து வந்ததனால் அது அவருக்கு பாரிய உளநெருக்கடியை உருவாக்கியிருந்ததமையே பிரதான காரணமாகும் என அறியமுடிகிறது.

இது ஒருபுறம் இருக்க பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலைகள் மலிந்து போய் காணப்படுவது கல்விகற்ற இளைஞர் தலைமுறை ஒன்றை நாம் இழந்துகொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த ஜுலை 30 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார். அது போல ஜுன் மாதம் தென் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்ற இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இப்படியாக பல்கலைக்கழக மாணவர்கள் இடையே தற்கொலை சம்பவங்கள் மலிந்து போய் காணப்படுகின்றது. கற்றல் அழுத்தம், வீட்டில் இருந்து அதிக தூரத்தில் கற்க வேண்டிய தேவை உள்ளமை, நிதி நெருக்கடி, காதல் தோல்வி என பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் பின்னணி என கூறப்பட்டாலும் கூட; இலங்கையின் கல்வி முறை அடிப்படையில் இருந்தே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க தவறியமையே பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகளுக்கான பிரதான காரணமாகும்.

போட்டிப்பரீட்சைகளிலும் – பாடசாலை தரப்படுத்தல்களிலும் மட்டுமே கவனம் செலுத்தும் இலங்கையின் கல்வித்துறை அமைச்சும் – ஆசிரியர்களும் மாணவர்களை உடல் – உள ரீதியில் திடப்படுத்துவதற்கான கல்வித்திட்டம் ஒன்றை முன்னெடுக்காத வரை இங்கு தற்கொலைகள் மலியப்போவது இல்லை.