21

21

“கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்குக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.” – உதய கம்மன்பில

“முன்று தலைமுறைகளாக கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனவும்  கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறும்  பிவித்தூறு ஹெல உறுமய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தமது யூரியூப் சமூக வலையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ் இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம். தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.

நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன.

குருந்தூர் மலை குறித்து மகாவசம்சம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்தூர் விகாரை பௌத்தர்களுக்கு சொந்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதொரு விடயமல்ல. குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்கும் அங்கு இந்து கோயில் இருந்ததற்கும் எவ்வித தொல்பொருள் சான்றுகளும் கிடையாது.

இதனடிப்படையில், அங்கு சென்று மத வழிபாடுகளை மேற்கொள்ள கஜேந்திரகுமாரருக்கு முடியாது. விகாரையில் உள்ள தூண்களில் ஒரு தூண் வட்ட வடிவில் உள்ளது. இந்த தூண் சிவலிங்கம் என்று குறிப்பிட்டு முறையற்ற தர்க்கத்தை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய, குருந்தூர் மலை இந்துக்களுடையது என்ற போலியான தர்க்கத்தையும் முன்வைக்கிறார்கள். இந்த நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் இடமளித்துள்ளது. ஆனால் பௌத்த மரபுரிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பௌத்தர்களுக்கு இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

தமிழ் அடிப்படைவாதிகளின் நாடகத்துக்கு இடமளித்தால் பௌத்தர்களின் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும். பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் கோழைத்தனமாக இருக்கலாம். ஆனால் பௌத்தர்கள் கோழைத்தனமாக இருக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார். இவர் கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்க்கையை வாழ்கிறார்.

அவர் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்கு நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். கொழும்பில் இருந்துகொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இனவாத செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிவிடும் வரிசையில் பொன்னம்பலம், சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் உள்ளடங்குகிறார்கள்.

தெற்கில் இவர்கள் வாழ்வற்கு உள்ள சுதந்திரத்தை வடக்கில் சிங்களவர்களிடமிருந்து பறிப்பதற்கும் தடையேற்படுத்துவதற்கும் இவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். அந்த கோரிக்கையை முன்வைக்க எமக்கு உரிமை உண்டு.

ஆகவே சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்த வாரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வசிக்கும் வீட்டின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

இதில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும்” – என்றார்.

“அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்டுகின்றனர்” – விமலசார நாயக்க தேரர்

“அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக்  கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில்  இன்றையதினம்  இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான  ஊடக சந்திப்பில் “அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்டுகின்றனர்” என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த  கூற்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பைத்தியக்காரர்கள் அவ்வாறுதான்பேசுவார்கள். அவர்கள் தொடர்பில் கவலைகொள்ள  வேண்டாம். அவ்வாறானவர்கள் இங்கும் உள்ளார்கள் அங்கும் உள்ளார்கள். இவர்கள் தேர்தல் வரும்போது மாத்திரமே இது குறித்துப்  பேசுவார்கள். எனவே அந்த பைத்தியக்காரர்கள் குறித்துக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை ”எனத்  தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வீதி விபத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட தனியார் பஸ்களினால் ஏற்படுகிறது !

பெரும்பாலான வீதி விபத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட தனியார் பஸ்களினால் ஏற்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) பஸ்களுக்கு குறிப்பிட்ட கட்டணங்களுடன் சில மாற்றங்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது என்றார்.

DMTயின் முன்மொழிவை இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஏற்கவில்லை என்றும், இது தொடர்பாக நடைபெறும் எந்த கூட்டங்களிலும் பங்கேற்காது என்றும் அவர் தெரிவித்தார் .

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, விளக்குகள், பஸ் ரேப்பிங், அதிக ஒலியுடன் கூடிய ஹாரன்களை பொருத்துதல், ஒலி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகளை பொருத்துதல் மற்றும் துருப்பிடிக்காதவை போன்ற மாற்றங்கள் மற்றும் அலங்காரங்களைச் சேர்ப்பதில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்உடன்படவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான பஸ்கள் சட்டத்திற்கு மாறாக அலங்காரங்கள் மற்றும் மேலதிக உபகரணங்களைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த பஸ்கள் பல வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன, என்றார்.

“துரதிர்ஷ்டவசமாக, பல பஸ் உரிமையாளர்கள், ஸ்டிக்கர் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது, மேலும் பஸ்களை மூடுவதற்கும், பஸ் நிறுத்தப்படும் இடத்தில் DJ இசையை இசைப்பதற்கும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பஸ்கள் நடமாடும் நைட் கிளப்கள் போன்றவை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனவே, இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகத்துக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்தேன். பஸ் ஸ்டிக்கர் நிறுவனங்களிடம் இருந்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகம் ஏதேனும் இலஞ்சம் பெற்றாரா என்பது எங்களுக்கு நியாயமான சந்தேகம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் வன்முறைக்கும்பல்களின் அட்டகாசம் – இளைஞரை தாக்கி அடித்து வீட்டு பொருட்களை சேதப்படுத்தி கொடூரம் !

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட  தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சமையலறை உபகரணங்கள், மற்றும் தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டிலிருந்த இரண்டு உந்துருளிகளை தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் காவல்துறையினர் இன்று ஆய்வுசெய்தனர்.

வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக முல்லைத்தீவில் கையெழுத்து போராட்டம் !

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து போராட்டம்இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வழி வகுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை மாற்றி மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் என சபாநாயகருக்கு வலுயுறுத்தும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முத்து குமாரசாமி லக்சயன் தலைமையில் இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

இதில், புது குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசுதர்சன், கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு !

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் அமுல்படுத்தப்பட வேண்டிய பொறிமுறைகளைக் கண்டறிந்து அதன் அவதானிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கும் இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அண்மையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை பொலிஸ், தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை ஆகியன குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தத் திணைக்களங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பாரியளவிலான போதைப்பொருள் நாட்டிற்குள் செல்வதை நிறுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்டை நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுபான பாவனையை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய பல ஆலோசனைகளை குழுவிடம் முன்வைத்தனர்.

மேலும், போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

அருண் சித்தார்த் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்ப்பணம் !

யாழ். இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார நிவாரண உதவித் திட்டத்தினூடாக 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கூரஹல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி, கொழும்பு இளைஞர் பெளத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர மற்றும் அவர்களது குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் கடந்த 19.08.2023 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகர் திரு.தஜெயபாலன் தலைமையில் நடைபெற்றதுடன் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திரு.அ.கேதீஸ்வரன், சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் , திரு.தவச்செல்வம், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கற்றல் நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்திருந்த [பிரிவு 2022/LA/ A, பிரிவு 2022/LA/B, 2023/LA/ A ] 140 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் – சிறப்பு நிலைகளை பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் இணைவினால் உருவாக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களினை ஆவணப்படுத்திய மூன்று மொழிக் கையேடு ஒன்று கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.