22

22

வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள்  உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்..? –

“வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள்  உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளதுடன்  யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரிவர ஆற்றுகிறார்களா என்பது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் கவனம் செலுத்த வேண்டும் அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் பல உணவகங்களில் விலை பட்டியல் இன்னும் காட்சிப்படுத்தாத நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்கும் பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரிவர செய்கிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

நான் கடந்த வாரம் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பாவனையாளர் அதிகார சபைக்குச் சென்றிருந்தேன் மாவட்ட அதிகாரி எங்கே என கேட்டேன் களச் செயற்பாட்டுக்குச் சென்று இருப்பதாக அங்கு கடமையில் இருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

களச் செயபாடு எனக் கூறிக்கொண்டு அதிகாரியும் உத்தியோகத்தர்கள் உண்மையில் கடமைக்கு தான் செல்கிறார்களா என அரசாங்க அதிபர் ஆராய வேண்டும்.

ஏனெனில், யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள அனேகமான வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படுவதில்லை.

ஆனால், அலுவலகத்தில் கேட்டால் களச் செயற் பாட்டுக்குச் சென்றிருக்கிறோம் என கூறும் நிலையில் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை எத்தனை கடைக்குச் செல்கிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

யாழ்ப்பாண நகர பகுதிகளில் பைகளில் அடைக்கப்பட்ட கறி மிளகாய் தூள் 600 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ மிளகாய்த்தூளை அரைப்பதற்கு 1,500 ரூபாய் செலவாகிறது.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகார சபைக்கு தெரியப்படுத்திய போது மிளகாய் தூள் தரம் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் அரச உத்தியோகத்தர்களான பாவனையாளர் அதிகார உத்தியோர்கள் குறித்த மிளகாய் பை தொடர்பில் இதுவரை அறிந்திருக்கவில்லையா.

அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவது எனது நோக்கம் அல்ல இதே ஊடக சந்திப்பு போன்ற கடந்த மாதமும் செய்த போது குறித்த மிளகாய் பாக்கெட் தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தேன் ஆனால் எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .

விலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பாவணையாளர்கள் அதிகார சபைக்கு  மட்டும் சட்டம் இருக்குது என்றால் தரமற்ற பொருள் தொடர்பில் அவதானித்தால் அதை சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதர்களுக்கு ஏன் அறிவிக்க முடியாது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக கலாச்சார விழாக்கள் மற்றும்  பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வர்த்தகர்களிடம் பணம் பொற்று விழாக்களை நடத்துங்கள் எனக்  கூறப்பட்டதாக அறிந்தேன்.

வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள்  உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆகவே, மக்கள் வரி பணத்தை பெற்றுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பார் மக்களின் மக்களின் அன்றாட பிரச்சினை தொடர்பில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என கூறிக் கொள்வதோடு அரசாங்க அதிபரும் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு – கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.போதனா வைத்தியசாலை !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென இரத்த வங்கி அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் குருதி விநியோகம் அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது.

ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 Kg ம் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம்.

ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம்.

எனவே தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் உங்கள் ஊர்களிலும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து எமக்கு அறிவித்தால் நாம் வருகை தந்து குருதியை சேகரிக்கும் பணிகளை முன்னெடுப்போம்.

எம்முடன், 0772105375 அல்லது 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (Ai) உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு காப்புரிமை வழங்கமுடியாது – அமெரிக்கா

மனித ஈடுபாடு இல்லாமல் Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் உருவாக்கும் கலைப் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்க முடியும் என மாகாண நீதிபதி பெரில் ஹோவெல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டாபுஸ் (DABUS) என பெயரிடப்பட்ட Ai அமைப்பின் சார்பாக விஞ்ஞானி ஸ்டீபன் தாலர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான அமெரிக்க காப்புரிமை அலுவலக தரப்பு எடுத்த முடிவை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஸ்டீபன் தாலரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் வரவேற்றுள்ளது.

முன்னதாக, மிட்ஜெர்னி Ai துணையுடன் உருவாக்கப்பட்ட படைப்புக்கு படைப்பாளி ஒருவர் அமெரிக்காவில் காப்புரிமை கோரி விண்ணப்பித்தார். அது நிராகரிக்கப்பட்டது. தான் அந்தப் படைப்பை உருவாக்க Ai தொழில்நுட்பம் ஒருங்கிணைத்ததாக அவர் வாதம் செய்தார். இருந்தும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இலக்கியம், இசை, படம் மற்றும் பிற கலை வடிவங்களை உருவாக்க Ai அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மனிதர்கள் உருவாக்கும் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் அரேபியா !

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து தொழில்வாய்ப்பு தேடி அரேபியாவுக்குள்  நுழைபவர்கள் மீதே இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சவுதி அரேபிய இராணுவத்தினர் அவர்களை கண்மூடித்தனமானச் சுட்டு கொல்வதாகவும், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 430 பேர் இரக்கமின்றிக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குருந்தூர்மலையில் தமிழர்களை பொங்க அனுமதிகொடுத்த முல்லைத்தீவு நீதவான் மனநலம் பாதிக்கப்பட்டவர்.” – சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும்அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்பான பதவிகளில் பொறுப்பற்றவர்கள் இருந்தால் அந்தக் கட்டமைப்பே சீர்குலையும் – கிளிநொச்சியில் திரு.த.ஜெயபாலன் !

2023ஆம் ஆண்டுக்கான லிட்டில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதன் ஸ்தாபகரும் ஊடகவியலாளருமான த.ஜெயபாலன் ஆற்றிய உரையின் முழுமையான காணொளி !

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த திட்டம்- புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை !

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வுபிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம்செய்யவேண்டாம்  என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திரட்டுமாறும் எச்சரிக்கையாகயிருக்குமாறும்  உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சாத்தியம் என்ற இந்திய புலனாய்வு பிரிவினரின் எச்சரிக்கையை தொடர்ந்தே உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

குருந்தூர்ஆலய பகுதியினை உரிமை கொண்டாடுவதற்காக பௌத்த இந்து உணர்வுகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  உள்நாட்டு புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என  ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன இந்த வன்முறைகள் 2019 தேர்தலிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விட மோசமானவையாக காணப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கையை இந்திய பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.

“13ஆம்திருத்தம் முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ளதால் அதனை நாம் கிழியாமல் எடுக்க வேண்டும்.” – டக்ளஸ் தேவானந்தா

“13ஆம்திருத்தம் முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ளதால் அதனை நாம் கிழியாமல் எடுக்க வேண்டும்.” ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக இலங்கையில் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் தற்போது முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ள நிலையில் அதனை கிழியாமல் எடுத்து செய்ய வேண்டியதை செய்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்.

இதை ஏன் நான் உதாரணமாக கூறினேன் என்றால் பதின்மூன்றுக்கு எதிரானவர்கள் தென் இலங்கையில் இருக்கின்ற நிலையில் பதின்மூன்று தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஆரவாரப்பட்டால்  தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நான் இலங்கைக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கம் ஊடாக பிரச்சனை அணுகுதலை இன்று வரை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

பிரேமதாச காலத்தில் வாகனங்களில்  (சிறீ)  எழுத்துப் பதிவிடுவது தமிழ் மக்களின் முதலாவது போராட்டமான சிறீ எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய தமிழ் தலைவர்கள் முன்னெடுத்தனர்.

ஆனால் குறித்த போராட்டத்தை நீடிக்க விடாமல் இரவோடு இரவாக பிரேமதாசா அரசாங்கத்தோடு கச்சிதமாக பேசி கலவரங்கள் ஏற்படாத வகையில் (சிறீ )  தீர்மானத்தை இல்லாமல் செய்தோம்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் நமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில் அவர்களின் விருப்பத்தை மீறி தீர்மானங்களை மேற்கொள்வது  கஷ்டமான காரியம்.

அதேபோன்றுதான் 13 வது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் உசுப்பேத்தல்களுக்கு தமிழ் தரப்புகள் கூக்காடு போட்டால் அரசாங்கத்துக்கு இடையூறுகள் ஏற்படும்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.

பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்ற நிலையில் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

ஆகவே பதின் மூன்று தொடர்பில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து தந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் வரட்சியால் 17 மாவட்டங்களில் சுமார் 250,000 பேர் கடுமையான பாதிப்பு – வடக்கு மாகாணம் ஆபத்தான நிலையில் !

நாட்டில் நிலவும் வரட்சியால் 17 மாவட்டங்களில் சுமார் 250,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மாத்தளை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 72,100 குடும்பங்களைச் சேர்ந்த 2,48,531 பேர் நிலவும் வறட்சியான காலநிலையால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 70,000 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர், சங்கானைப் பகுதி ஜூன் மாதத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிப்பு !

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 10 வருடகாலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தற்போது உட்கொள்ளும் உணவு முறைமை காரணமாகவே ஏற்படுகின்றது.

சீனி மற்றும் எண்ணெய்யின் அளவு உணவில் அதிகரிப்பதனாலும் இந்த நிலைமை ஏற்படுகின்றது. சிலர் மூன்று வேளையும் சோறு உட்கொள்கின்றனர். இதுவும் பாரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது.

எனவே மக்கள் தாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.