23

23

மதுபானங்களின் விலையை குறையுங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் டயானா கமகே !

விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

 

மதுபானங்களின் விலையை உயர்த்தினால், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். விலை குறைக்கப்பட்டால் அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்குவார்கள். அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்கும்போது வரி வருவாய் அதிகரிக்கலாம். இல்லை என்றால் இலங்கையில் மதுவிலக்கு மற்றும் கலால் திணைக்களத்தை மூட வேண்டியிருக்கும்” என டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.

 

“அற்ககோல் பானங்களின் விலை அதிகரித்துள்ளதால், ‘ஆப்பிள்’ என்ற பெயரில் மதுபானங்களுக்கான மேலதிக தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலங்கை இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 80 வீதமானவர்கள் எமது தீவுக்கு ஒரு தடவையே வருகை தருகின்றனர். “இலங்கையில் இரவு வாழ்க்கை முறை இல்லாததால் ஒருமுறைதான் வருகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் தூங்க சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதில்லை. இலங்கையில் இரவுப் பொருளாதாரம் தேவை என பலர் என்னைத் தாக்கினர். எந்த தொழிலையும் ஊக்குவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை,” என்றார்.

 

மேலும், இசை நிகழ்ச்சிகள் காலை வரை தொடர அனுமதிக்க வேண்டும் என்றார். “இரவு 11 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை ஏன் நிறுத்த வேண்டும்? “கடற்கரை ஓரத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை !

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவிக்கின்றது.

ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் வைக்கோல், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டி, கத்திகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அவற்றின் உற்பத்தி, உள்ளூர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்தல், விற்பனை, இலவச சலுகை அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“முல்லைத்தீவு நீதிபதியின் மனைவி பற்றி பாராளுமன்றத்தில் பேசிய சரத்வீரசேகர.” – நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல் !

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டார்.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நேற்று சரத் வீரசேகரவினால் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்திருந்தார்.

 

அத்தோடு, அவரது மனைவி தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இது நிலையியற் கட்டளை 83 ஐ மீறும் செயற்பாடாகும். எவருடைய தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சபையில் கருத்து வெளியிட முடியாது.

 

இவ்வாறு இருக்கும்போது, சரத்வீரசேகர இவ்வாறு இவர் கருத்து வெளியிடுவது இரண்டாவது தடவையாகும்.

 

ஏற்கனவே, அவர் சட்டத்தரணிகள் சங்கத்தையும் என்னையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

நான் நாடாளுமன்றில் எந்தவொரு நீதிபதியையும் பெயர்குறிப்பிட்டு கருத்து வெளியிடவில்லை.

 

நீதிபதிகளின் கருத்துக்கள் தொடர்பாக விமர்சிக்கலாமே ஒழிய, நீதிபதியின் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேச முடியாது.

 

ஒரு தமிழ் நீதிபதி எப்படி தன்னை விமர்சிக்க முடியும் எனும் தொனியில்தான் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது பாரதூரமான விடயமாகும்.

 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு உரிய வகையில் அவர் நேற்று நடந்துக் கொள்ளவில்லை.

 

எனவே, சபாநாயகர் இவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரா.சாணக்கியனை எச்சரித்து பௌத்த பிக்கு அடாவடி!

மட்டக்களப்பு, பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்று (22) சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு சாணக்கியன் பெயரை சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை சாணக்கியனுக்கு வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரா.சாணக்கியன் ;

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு ICTR – International Criminal Law and Hate Speech சட்டம் மூலம் இவ் பிக்குவானது கைது செய்யப்பட வேண்டும் எனவும் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே.

 

இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எம்மால் இயன்ற அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அவ் பிக்கு சொல்வதை போன்று எமது மக்களின் இவ் பிரச்சனைக்கு தமிழரசுக் கட்சியும் நானுமே அழுத்தம் கொடுத்து வருகின்றோம் மற்றைய குறிப்பாக அரச சார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மௌனம் மிகுந்த சந்தேகத்தை உண்டு செய்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இணைப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்கள், மேய்ச்சல் தரை தொடர்பாக பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்ததுடன், பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை அபகரித்துள்ள சிலர் கலந்துரைடாடலில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சிறைப்பிடிக்கப்படுள்ளவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்!

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது.

 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

 

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

 

அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

 

இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்தவராவார். இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஐஸ் – கஞ்சா- மாபா- ஹெரோயின் – போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இலங்கையில் ஒரே வருடத்தில் 370 படுகொலைகள்!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 370 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மாதாந்தம் 40 முதல் 50 வரையிலான படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், நாகரீகமற்ற மனித சமூகம் வாழும் நாடாக மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம், காணிப் பிரச்சினை, தகாத உறவு போன்ற காரணிகளினால் இடம்பெறும் மனித படுகொலைகளை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதேவேளை டலஸ் அழகப்பெருமவின் இந்த குற்றச்சாட்டுக்கு, போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விரிவான திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடான் போர்ப்பதற்றம் – பட்டினியால் இறக்கும் சிறுவர்கள்!

கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என சூடானின், ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற அமைப்பின் இயக்குனர் ஆரிப் நுார் தெரிவித்துள்ளார்.

 

கிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப் பெரிய சண்டையாக உருவெடுத்ததை அடுத்து, தலைநகர் கார்தோம் உள்ளிட்ட நகர்ப்புறங்கள் போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன.

 

நாடு முழுதும் பதற்றம் நீடித்து வருகிறது. பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

 

நாட்டின் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கி உள்ளது. அத்துடன், சரியான உணவு கிடைக்காமல் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

 

“ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரச குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர்.

தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்” என்றார்.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது இந்தியாவின் சந்திரயான்-3 !

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

 

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

 

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

 

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது.

 

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது.

 

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

 

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தையொன்று தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

“தமிழர் மத்தியில் காணப்பட்ட சாதிப்பிரச்சினைகளை தீர்க்கவே வேலுப்பிள்ளை பிரபாகரன் போராடினார்.” –  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

“தமிழர் மத்தியில் காணப்பட்ட சாதிப்பிரச்சினைகளை தீர்க்கவே வேலுப்பிள்ளை பிரபாகரன் போராடினார்.” என   நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு தாம் அண்மையில் பயணம் செய்ததாகவும், இதன் போது அங்குள்ள மக்கள் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை தனிப்பட்ட ரீதியில் உணர்ந்து கொண்டதாகவும், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் மக்களும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு வேறு நிலைப்பாடுகளில் இருக்கின்றனர்.  வடக்கில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்ல. அவருக்கு முன் இருந்த சில தரப்பினரே அதனை ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன், சிங்கள மக்களை கொலை செய்வதற்காக பிரபாகரன் பிறக்கவில்லை.  வடக்கில் காணப்பட்ட அதிகார பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே அவர் முன்வந்தார். வடக்கில் காணப்படும் சாதி பிரச்சினைகளே வளர்ந்து வரும் பிரச்சினையாகும்.  விஜயதாச ராஜபக்ச, அதனை இல்லாது செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இதேவேளை, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை தாம் அறிந்திருந்தாலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய செயற்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.