24

24

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறது – ஜுலி சங்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

 

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

 

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொடூர விபத்து – 14 வயது சிறுவன் பலி !

யாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

இவ்விபத்தில் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், இதன்போது மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்தினுள் சிக்குண்டு தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெயர் சாகித்தியன் எனவும் அவர் கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15000 – ஆறுமாதங்களுக்கு தீர்வு என்கிறார் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகளுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அத்துடன் கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 988 காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழப்பு !

வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

10 பேர் சென்ற ஜெட் விமானத்தில் வாக்னர் படைத்தலைவர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடங்கியுள்ளார்.

 

ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டியின் தகவலின்படி, விபத்து நடந்த இடத்தில் எட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பிரிகோஜின் சென்ற விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது குறித்து வெளியான செய்தியால் தாம் ஆச்சரியப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்திற்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்று நினைக்கிறீர்களா என்று நெவாடாவில் நிருபர்கள் கேட்டதற்கு, “ரஷ்யாவில் புடின் பின்தங்கியிருக்காத அளவுக்கு எதுவும் நடக்கவில்லை.”என்று தெரிவித்தார்.