25

25

“ஒருநாள், மாலைத்தீவும் “மூன்-ரொக்கட்” அனுப்பும் ; அப்போதும் நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம்.” – மனோ விசனம்!

“சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

 

இந்த சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகிறேன். ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது, நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன்.

 

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

பாரதம் தந்த 13 ஆவது திருத்த மாகாணசபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கிறது. அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகிறது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்கு பதிலாக, எல்லா பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கிறோம்.

 

தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கபட்ட பிரதேசமாக இருக்க வேண்டும். அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்து கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை. ஆகவே, ஒருநாள், மாலைத்தீவும் இப்படி “மூன்-ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான வறட்சி – 50,000 விவசாயிகள் பாதிப்பு !

நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களில் 6ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், நாட்டில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட 53 ஆயிரத்து 774 ஏக்கருக்கும் அதிகமான விவசாயநிலங்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

அதேநேரம், வறட்சியினால் 48 ஆயிரத்து 726இற்கும் அதிகமான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி !

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி ஒன்று இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுங்கள் – சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் !

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

 

இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மேலும் நீதி துறையில் அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என்ற பலவேறு கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

 

வடக்கில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகும் பொலிஸார்..? – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றச்சாட்டு!

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வணிகர்கள் சார்ந்தோர் மத்தியில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதும் குறித்த பாவனையால் இளைஞர்கள் உயிரிழப்பதும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதும் அதிகரித்து வருகின்றன.

 

இது எமது இளம் சமுதாயத்தை வெகுவாகப் பாதித்து வருகின்றது. இவ்விடயத்தில் பெற்றோர்களும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற தரப்பினரும் உரிய அக்கறை செலுத்த வேண்டும்.

 

சமூகவிரேத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நாம் வழங்கும் தகவல்கள் சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிய வருவதோடு அவர்கள் எம்மை தொடர்புகொண்டு அச்சுறுத்தல் விடுக்கும் நிலையும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

 

இது உண்மையில் சமூகவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏதுவானதான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பதாக அமைந்துள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.” – சஜித் தரப்பு !

குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டுமொரு முறை யுத்தத்தை தூண்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை என கிளிநொச்சி மாவட்டத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட போது திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“குருந்தூர் மலை தொடர்பில் தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. எந்தவொரு மதமும் தமது உரிமைகளுக்காக வன்முறைகளில் ஈடுபடுமாறு கூறவில்லை. இது தொடர்பில் நாம் கவலையடைய வேண்டும்.

அனைத்து மதங்களும் அனைத்து மதத்தையும் மதிக்குமாறு போதித்துள்ளது.

குருந்தூர் மலை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை அனைவரும் அறிந்த விடயம். தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக அமைந்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறித்த பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக இதனை வைத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக் கூடாது.

குருந்தூர் மலையின் தொல்பொருள் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட பிவிதுரு ஹெல உருமய கட்சி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.

 

சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க, ஆரம்பமாக கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.